மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைப் பெற்றுத்தராத சபையாக ஓட்டமாவடி பிரதேச சபை காணப்படுகின்றது - ஏ.ஜி.அஸீஸுல் றஹீம் குற்றச்சாட்டு - News View

About Us

About Us

Breaking

Friday, August 31, 2018

மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைப் பெற்றுத்தராத சபையாக ஓட்டமாவடி பிரதேச சபை காணப்படுகின்றது - ஏ.ஜி.அஸீஸுல் றஹீம் குற்றச்சாட்டு

சபையில் கொண்டு வரப்படும் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைப் பெற்றுத்தராத சபையாக ஓட்டமாவடி பிரதேச சபை காணப்படுவதாக கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் உறுப்பினர் ஏ.ஜி.அஸீஸுல் றஹீம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நேற்று 30.08.2018ம் இடம்பெற்ற சபையின் 5 வது அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்படி குற்றச்சாட்டை அவர் முன்வைத்து உரையாற்றினார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், கடந்த 26.07.2018ம் திகதி இடம்பெற்ற ஓட்டமாவடி பிரதேச சபையின் 4வது அமர்வில் கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலகத்துடன் தற்காலிகமாக இணைக்கப்பட்டுள்ள புணானை மேற்கு 210 E கிராம சேவகர் பிரிவுக்குட்டப்பட்ட கிராமங்கள் தொடர்பாகவும், மீள்குடியேற்றம் தொடர்பாகவும், அப்பிரதேச மக்கள் எதிர்நோக்கி வரும் நிருவாகப்பயங்கரவாதம் தொடர்பிலும் அவர்களுக்கான தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும்.

குறிப்பாக, அது முஸ்லிம்களின் எல்லைப்பிரதேசம் என்பதால் அப்பிரதேசங்களிலுள்ள மக்களின் வாழ்வாதாரம் இருப்பிடங்களை உறுதிப்படுத்தும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென்ற தீர்மானம் சபை உறுப்பினர்களின் ஏகமான ஒப்புதலுடன் நிறைவேற்றப்பட்டு, சபையின் தவிசாளர் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு தீர்வுகளைப் பெற்றுத்தருவதாக வாக்குறுதியளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

அத்தோடு, பாரியதொரு பிரச்சினையாக விஸ்வரூபமெடுத்துள்ள புணானை அணைக்கட்டு முள்ளிவட்டவான் பிரதேசத்தில் அமைந்துள்ள வாகனேரிக்குளத்தில் மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டு வரும் ஏழை மீனவர்களின் பிரச்சினைக்கான தீர்வுகளும் இது வரை பெற்றுக் கொடுக்கப்படவில்லை. அவர்கள் நீதி கோரியும் பிரச்சினைக்கான தீர்வினைப் பெற்றுத்தருமாறு கோரியும் பாதையில் இறங்கிப்போராடும் நிலை உருவாகியுள்ளதுடன், எமது சபைக்கு முன்பாகவே வந்து எமது கால்களைப்பிடித்து கெஞ்சும் நிலையை நாமே உருவாக்கி விட்டோம்.

சுமார் 22 மீனவர்களின் தோணிகள் மீன்பிடி உபகரணங்கள் சுமார் ஆறு மாதங்களுக்கு முன்னர் கடந்த 22.02.2018ம் திகதி பலவந்தமாகக் கைப்பற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்டது. அவைகளை மீட்டுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

பாதிக்கப்பட்டுள்ள மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத் தொழிலை தொடர்ந்து மேற்கொள்வதற்கான தீர்வுகளைப் பெற்றுக் கொள்வதற்கும் பறித்துச்செல்லப்பட தோணிகள் மீன்பிடி உபகரணங்களை மீளப்பெற்றுக் கொள்வதற்கும் மீன்பிடி நீரியல் வள பிரதியமைச்சர் அமீர் அலியின் தலைமையில் சம்பந்தப்பட்ட தரப்பினர்களை அழைத்து பிரதேச சபையில் கலந்துரையாடலொன்றை மேற்கொள்வதெனவும் பிரச்சினைக்கான தீர்வினை பெற்றுக் கொடுப்பதாகவும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் சமூகத்திற்கான வேலைத்திட்டமாக இதனைக்கருத்திற்கொண்டு தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.

ஆண்டாண்டு காலமாக இப்பிரதேச முஸ்லிம் மீனவர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாமலே இருப்பதாகத் தெரிவித்த அவர், சபையின் தவிசாளர் இப்பிரச்சினை தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேசி இதற்கான தீர்வுகளைப் பெற்றுத் தருவதாக வாக்குறுதியளித்தும் ஏன் இது விடயத்தில் அக்கறை செலுத்தாமல் பராமுகமாக இருக்கிறார் என்பதை இச்சபையில் தெளிவுபடுத்த வேண்டும்.

அத்துடன், குறித்த மீனவர்கள் தங்களுக்கான தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள எதிர்த்தரப்பை நாடிச்சென்றார்கள் அல்லது முஸ்லிம் காங்கிரஸ்காரர்களிடம் தமது கோரிக்கைகளை முன்வைத்தார்கள் என்ற காரணத்துக்காகவா இதற்கான தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதில் தவிசாளரும் அமைச்சரும் கரிசணையற்றிருக்கிறீர்களா? அல்லது கைவிட்டுள்ளீர்களா? என்பதையாவது தெளிவுபடுத்த வேண்டும்.

இது விடயத்தில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு தீர்வு கிடைக்க வேண்டும். இழக்கப்பட்டுள்ள அவர்களின் வாழ்வாதாரம் மீளப்பெற்றுக் கொடுக்கப்பட வேண்டுமெனும் நோக்கில் நாம் சகலரும் இணைந்து அதற்குப்பொறுப்பானவர் என்ற வகையில் பிரதியமைச்சர் அமீர் அலியைச்சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்த நாம் தயாராகவேயுள்ளோம்.

ஏன்னென்றால், அன்றாடம் மீன்பிடி மூலம் தமது வாழ்க்கையை ஓட்டி வந்த ஏழை மீனவர்கள் தமது வருமானத்தை இழந்து நிற்கிறார்கள். அவர்களது மொத்த வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் தங்கி இருக்கும் குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளது. பாடசாலை செல்லும் மாணவர்களும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இழைக்கப்பட்டுள்ள இந்த அநீதி மூலம் அவர்கள் மொத்த வருமானத்தை இழந்துள்ளதுடன், வறுமை நிலைக்குள் தள்ளப்பட்டுள்ள பரிதாப நிலையினை கவனத்திற்கொண்டு கட்சி பேதங்கள் தனிப்பட்ட குரோதங்களுக்கப்பால் சகலரும் ஒன்றிணைந்து இதற்கான தீர்வினை பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டும் எனகேட்டுக் கொண்டார்.

இந்த சபை தீர்மானங்களை மட்டும் நிறைவேற்றும் சபையாக இருக்கிறதேயொழிய எடுக்கப்படும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துகின்ற சபையாக இல்லை. வெறுமனே தீர்மானங்களை சபையில் முன்மொழிவதனாலோ, தீர்மானங்களை நிறைவேற்றி விட்டு கலைந்து செல்வதாலோ அதனை எழுத்து வடிவில் கோர்வை செய்து அழகு பார்ப்பதாலோ எம்மை நம்பி இருக்கும் எமது பிரதேச மக்களின் பிரச்சினைகளுக்கு எந்தத்தீர்வினையும் பெற்றுக்கொடுத்து விட முடியாது.

எதிர்காலத்தில் இவ்வாறான நிலை மாற்றப்பட வேண்டும். மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு தான் சபை நிறுவப்பட்டுள்ளதே தவிர, பதவிகளைப் போட்டுக்கொண்டு ஒலிபெருக்கிகளுக்கு முன்னாள் இருந்து படம்காட்டி விட்டி கலைந்து செல்வதற்காக அல்ல என்பதைப்புரிந்து கொள்ள வேண்டும். சபையில் எடுக்கப்படுகின்ற தீர்மானங்களை நடைமுறைப்படுத்தி தீர்வுகளைப் பெற்றுக் கொள்கின்ற சபையாக இது திகழ வேண்டும்.

தவிசாளர், அரசியல்வாதியின் அஜந்தாவுக்கு இயங்குகின்ற தவிசாளராக இல்லாமல் சுய புத்தியில் இயங்குகின்ற தவிசாளராக மாற்றம் பெற்றால் மட்டுமே சபையை திறம்பட இயங்க வைக்க முடியுமெனவும் தெரிவித்தார்.

thehotline.lk

No comments:

Post a Comment