பொது மக்கள்சார் சமூக மட்ட அமைப்புக்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கிடையில் உள்ள ஒருங்கிணைப்புக்கு துணை செய்யும் நோக்கில் ஏற்படுத்தப்பட்ட சேவை வழங்கல் இனங்காணல் வழிகாட்டி வெளியிடலும் அவை தொடர்பான விளக்கமளித்தலும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பணிமனையில் இன்று (31) இடம்பெற்ற இந்த நிகழ்வில் சேவை வழங்கல் இனங்காணல் வழிகாட்டி வெளியிட்டு வைக்கப்பட்டதுடன், இத்திட்டத்தின் நடைமுறைப்படுத்தல் செயற்பாடு பற்றிய விளக்கங்களும் வழங்கப்பட்டன. மேலும், எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் செயல் முறைகள் ஆராயப்பட்டன.
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியில் அக்ரட் நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் சமூகஅபிவிருத்தி மற்றும் நல்லாட்சி இணை உருவாக்கம், சிறந்த சமூக அபிவிருத்தியை எட்டும்பொருட்டு பொது மக்கள், அமைப்புக்கள், அதிகரிகளிடையே ஒருங்கிணைப்பின் வளர்ச்சிக்குத் துணைசெய்தல் திட்டத்தின் கீழ் வறுமை ஆராய்ச்சி நிலையத்தினால் இந்த செயற்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
அரச அலுவலகங்களினால் பொதுமக்களுக்கு இலவசமாகக் கிடைக்கப்பெறும் சேவைகள் தொடர்பிலான தகவல்களை கிராம மட்டங்களில் காட்சிப்படுத்தும் இந்தச் செயற்திட்டத்தின் மூலம் பொது மக்கள் சேவை பெறுதலை இலகு படுத்துவதும் மேலும் மேம்படுத்துதலும் எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் மொனராகலை, மட்டக்களப்பு, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் அமுல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தில் குறிப்பிட்ட பிரதேச செயலாளர் பிரிவுகள் உள்வாங்கப்பட்டு இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி சிறிகாந்த், ஏறாவூர் நகர் பிரதேச செயலாளர் எம்.யூசுப், மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் திருமதி தெட்சணகௌரி தினேஸ், போரதீவு பற்று பிரதேச செயலாளர் செல்வி எஸ்.ஆர்.ராகுலநாயகி, கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு, அக்ரட் நிறுவனத்தின் சிரேஸ்ட திட்ட உத்தியோகத்தர் இ.ஹஜேந்திரன், வறுமை ஆராய்ச்சி நிலையத்தில் திட்டப்பணி முகாமையாளர் பாசித் ஜனதீன், ஆய்வு உத்தியோகத்தர் மேகலா மகிழ்ராஜ், பிரதேத சபைகளின் செயலாளர்கள், சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment