கிழக்கு மாகாணத்தில் போதைப் பொருளுக்கு எதிரான பிரகடனங்கள் - News View

About Us

About Us

Breaking

Friday, August 31, 2018

கிழக்கு மாகாணத்தில் போதைப் பொருளுக்கு எதிரான பிரகடனங்கள்

கிழக்கு மாகாணத்தில் போதை வஸ்த்துக் கெதிரான பிரகடனங்கள் பல பிரதேசங்களிலும் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. நாட்டில் போதை வஸ்த்துப்பாவனையும் போதை வஸ்த்துக்கள் விற்பணையும் அதிகரித்துள்ள நிலையில் கிழக்கு மாகாணத்திலும் இதன் விற்பணையும் பாவனையும் அதிகரித்து வருகின்றன

இதனால் கிழக்கு மாகாணத்தில் போதை வஸ்த்துக்கெதிரான வேலைத்திட்டத்தினை மேற்கொள்வதில் சிவில் சமூக அமைப்புக்கள் பொது நிறுவனங்கள் குறிப்பாக பள்ளிவாயல்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கடந்த வருடங்களைவிட மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வாண்டு (2018) ஜனவரி மாதம் தொடக்கம் இது வரைக்குமான காலப்பகுதியில் போதை வஸ்த்து விற்பணையாளர்கள் மற்றும் பாவணையாளர்கள் என 2280 பேர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதே போன்று இவ்வாண்டு (2018) மட்டக்களப்பு மாவட்டத்தில் போதை ஒழிப்பு பொலிசாரினால் 245 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் பொலிஸ் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டு சட்ட நடவடிக்கைக்குட் படுத்தப் பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

அதே போன்று சிறைச்சாலைகளிலும் போதை வஸ்த்து விற்பணையாளர்கள் பாவையானர்கள் என சிலர் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

போதை வஸ்த்துக்களின் விற்பணை மற்றும் பாவனையின் தாக்கத்தினால் இன்றைய இளம் சமூகம் மிகப்பெரிய சிக்கல்களில் மாட்டிக் கொள்கின்ற சமூகமாக இருக்கின்றது.

போதை வஸ்த்துப்பாவையினால் சிறுவர் துஷ்பிரயோகம் பாலியல் துஷ்பிரயோகம் கொலை கொள்ளை என சமூகச் சீரழிவுகள் என மிக மோசமான இருக்கின்றன.

குறிப்பாக நமது பிரதேசங்களில் வாழுகின்ற இளைஞர்கள் இன்று கல்வி ஆண்மீகம் ஒழுக்க விழுமியம் சார் விடயங்களில் மிகப் பெரிய பின்னடைவை சந்தித்து வருகின்றார்கள்.

அவர்கள் போதைப் பொருளுக்கு அடிமையான ஒரு சமூகமாக உருவாகிக் கொண்டிருக்கின்றார்கள்.

பாடசாலை மாணவர்கள் தொடக்கம் வளர்ந்தோர் வரை போதை மாத்திரைகளுக்கு அடிமைப்பட்ட சமூக உருவாக்கத்தை நாம் சந்தித்து கொண்டிருக்கின்றோம்.

பெற்றோரும் மற்றோரும் மிக வேகமாக சிந்திக்க வேண்டிய ஒரு கால கட்டத்தில் இருக்கின்றோம்
.
பெண் மாணவிகளிடமும் இந்தப் போதைப் பொருள் நுழைவதற்கான அபாயம் காணப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.

பெற்றோர் தமது பிள்ளைகளின் நடத்தை குறித்து தீவிர கண்கானிப்புடன் அவதானிப்புடன் செயற்பட வேண்டிய ஒரு காலகட்டத்தில் இருக்கின்றோம்.

இந்தப் போதைப் பொருளின் விளைவுதான் கல்விப் பின்னடைவையும் சமூக மட்டத்தில் ஏற்படுத்தியுள்ளன.

கடந்த சில வருடங்களில் நடைபெற்ற பரீட்சைகளில் பெண்கள் சித்தியடைகின்ற விகிதாசாரம் அதிகரித்து ஆண்கள் சித்தியடைகின்ற விகிதாசாரம் பின்னடைவாகியிருக்கின்றது.

பாடசாலைகளில் தரமாக கற்பிப்பதற்கான ஆண் ஆசிரியர்களின் பற்றாக்குறையும் உருவாகியிருக்கின்ற ஒரு நிலையும் காணப்படுகின்றது.

பாடசாலைகளை நிருவகிப்பதற்கு தகுதியான ஆண் அதிபர்கள் இல்லாத நிலைமையும் உருவாகி வருகின்றது.

நிருவாகம் சார்ந்த பரீட்சைகளில் தோற்றுவதற்கு ஆண்களில்லாத ஒரு நிலை தோன்றியுள்ளது.

இந்த நிலை தொடர்ந்தால் இன்னும் மோசமான பின்னடைவை சந்திக்க நேரிடும் என்பதை சமூகத்தலைவர்கள் சிவில் சமூக அமைப்புக்கள அவசரமாக சிந்திக்க வேண்டியிருக்கின்றது.

போதை வஸ்த்துப்பாவனையினால் இளைஞர்களின் விவேகமற்ற வேகமான நடத்தை பல்வேறு அசிங்கியங்களை உருவாக்குவது போல வீதி விபத்துக்களையும் உருவாக்கிக் கொண்டிருக்கின்றது.

இன்று பல இளைஞர்கள் நன்றாக நடமாட வேண்டிய நிலையில் வீதிவிபத்துக்களினால் கால்கள் உடைந்த நிலையில் நடக்கமுடியாமல் சிகிச்சை பெறுகின்ற நிலைமை உருவாகியிருப்பதுடன் பல இளைஞர்கள் காலைகளையும் இழந்து அங்கவீனமடைந்துள்ள ஒரு நிலையும் காணப்படுகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் போதை வஸ்த்துப் பாவனையினால் பல குடும்பங்களிடையே பிளவுகள் ஏற்பட்டுள்ளதுடன் குடும்ப பிரிவுகளும் சமூகப் பிரச்;சினைகளும் ஏற்படுவதாக சமுதாய சீர் திருத்த திணைக்களத்தின் மட்டக்களப்பு பிராந்திய உத்தியோகத்தர் கே.துஸ்யந்தன் தெரிவித்தார்.

பிள்ளைகள் முறையாக பராமரிக்கப்படாததால் இடை நடுவில் பிள்ளைகள் கல்வியை இழக்கின்ற நிலை தோன்றியுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் போதை வஸ்த்துக்கள் விற்பணை மற்றும் பாவனை தொடர்பில் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு நீதி மன்றத்தில் சட்ட நடவடிக்கைக்குட்படுத்தப்பட்ட 242 பேர் சமுதாய சீர் திருத்தக் கட்டளைக்குட்படுத்தப்பட்டு அவர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இவர்களுக்கு ஆண்மீக வழிகாட்டல், தொழில் வழிகாட்டல், உளவளத்துறை மேம்பாடு என்பன வழங்கப்பட்டு அவர்கள் குடும்பங்களுடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

மட்டக்களப்பு கல்லடியில் இயங்கி வரும் விமோச்சனா எனப்படும் மனித நேய இல்லத்தினால் கடந்த 2011ம் ஆண்டு தொடக்கம் இது வரையான காலப்பகுதியில் இவ்வாறு போதைக்கு அடிமையான 364 பேர் புனர்வாழ்வளிக்கப்பட்டு அதிலிருந்து விடு பட்டு வெளியேறியுள்ளதாக அந்த இல்லத்தின் நிறைவேற்று பணிய்பாளர் திருமதி செல்விகா சகாதேவன் தெரிவித்தார்.

இதில் தமிழ் முஸ்லிம் சிங்களவர் என சகல மதத்தவரும் அடங்குவதாக அவர் குறிப்பிடுகின்றார்.

தற்போது நாட்டில் முன்னாள் போராளிகளை புனர்வாழ்வளிக்கும் வேலைத்திட்டம் நிறைவடைந்து போதை வஸ்த்து பாவணையாளர்களை புனர்வாழ்வளிக்கும் வேலைத்திட்டம் இடம் பெற்று வருவதாக புனர்வாழ்வு பெற்றவர்களின் சமூக பொருளாதார நலன்புரி நடவடிக்கைகளுக்கு பொறுப்பான மட்டக்களப்பு மாவடட்ட இணைப்புக்காரியாலயத்தின் இணைப்பதிகாரி மேஜர் நிசங்க அமரசிங்க கூறுகின்றார்.

இது வரை போதை வஸ்த்து பாவணையாளர்கள் நாடு பூராகவுமிருந்து 2099 பேர் புனர்வாழ்வளிக்கப்பட்டு அவர்கள் இன்று தமது வாழ்வை சிறப்பாக நடாத்தி வருகின்றனர்.

கடந்த காலங்களை விட போதை வஸ்த்து பாவனை மற்றும் விற்பணை நமது நாட்டில் அதிகரித்துள்ளது.
பெரிய வர்த்தகர்கள், அதிகாரிகள் போன்ற சமூகத்தில் காணப்படும் பெரியவர்கள் இந்த போதை வஸ்த்து பொருட்களை விற்பவர்களாகவும் காணப்படுகின்றனர்.

இவ்வாறு போதை வஸ்த்து பாவணையாளர்கள் நீதிமன்றத்தின் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுகின்ற போது நீதிமன்றம் அவர்களை புனர்வாழ்வளிப்பதற்காக எம்மிடம் ஒப்படைக்கின்றனர்.

இவர்களை புனர்வாழ்வளிப்பதற்காக சேனபுர மற்றும் கந்தக்காடு ஆகிய இரண்டு இடங்களில் புனர்வாழ்வு முகாம்கள் இருக்கின்றன. அவைகளிலே இவர்கள் புனர்வாழ்வளிக்கப்படுகின்றனர்.

இவர்களுக்கான ஆண்மீகம் உளவியல் மேம்பாடு தொழிற்பயிற்சி என்பன வழங்கப்பட்டு இவர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்ட பின்னர் குடும்பத்துடனும் சமூகத்துடனும் இணைக்கப்பபடுகின்றனர்.

இந்த வேலைத்திட்டத்தினை புனர்வாழ்வு அமைச்சின் கீழ் இயங்கும் எமது நிறுவனம் மேற் கொண்டு வருகின்றது.

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளாயினும் சரி போதை வஸ்த்து பாவணையாளர்களாயினும் சரி அவர்கள் தொடர்ந்து எம்மால் கண்காணிக்கப்படுகின்றனர். அவர்களை எமது அதிகாரிகள் அவதானித்து வருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான இந்த அலுவலகம் மட்டக்களப்பு பஸ் தரிப்பு நிலையத்தின் மேல் மாடியிலுள்ள கட்டிடமொன்றில் இயங்கி வருகின்றது.

அரச அதிகாரிகள் போதை வஸ்த்துக்கு எதிராக செயற்படுவதுடன் போதை வஸ்த்து பாவணையாளர்களை அல்லது விற்பணையாளர்களை பொலிசாருக்கு போதை வஸ்த்து தடுப்பு பிரிவினருக்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் போதை வஸ்த்துக்கு எதிராக செயற்பட வேண்டும் எனவும் மேஜர் அமரசிங்க கூறுகின்றார்.

இந்த நிலையில் கிழக்கு மாகாணத்தில் இந்த போதை வஸ்த்து விற்பணை மற்றும் பாவனைக்கெதிராக பள்ளிவாயல்கள் சிவில் சமூக அமைப்புக்கள் விழிப்புனர்வு வேலைத்திட்டத்தினை தொடங்கியுள்ளன.

சம்மாந்துறை பிரதேசத்தில் மஜ்லிசுல் ஷுறா அமைப்பு சம்மாந்துறை பள்ளிவாயல்களுடன் இணைந்து போதை வஸ்த்துக் கெதிரான பிரகடனமொன்றை ஊர் தழுவிய ரீதியில் பள்ளிவாயலில் வைத்து செய்தது.
இந்தப் பிரகடனமானது சம்மாந்துறையில் பாரிய விழிப்புனர்வை ஏற்படுத்தியுள்ளதுடன் போதை வஸ்த்து விற்பணையாளர்களை அதிலிருந்து விடு படச் செய்துள்ளது.

அதே போன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள காங்கேயனோடை பிரதேசத்தில் போதை வஸ்த்துக்களோ புகைத்தலோ பாவிக்க மாட்டோம் என காங்கேயனோடையிலுள்ள பள்ளிவாயல் நிருவாகிகள் கடந்த 24.08.2018 வெள்ளிக்கிழமை ஜும் ஆத் தொழுகையின் பின்னர் சத்தியப் பிரமானம் செய்து கொண்டனர்.

காங்கேயனோடை ஜாமிஉல் மஸ்ஜித் ஜும் ஆப்பள்ளி வாயலில் காங்கேயனோடை பள்ளிவாயல்கள் மற்றும் காங்கேயனோடை மகா சபை ஆகிய வற்றின் ஏற்பாட்டில் இந்த சந்தியப்பிரமாணம் இடம் பெற்றது.

ஜும் ஆத் தொழுகையின் பின்னர் பள்ளிவாயலில் திரண்டிருந்த பெருந்திரளான மக்கள் முன்னிலையில் பள்ளிவாயல் நிருவாகிகள் இந்த சத்தியப்பிரமானத்தை செய்து கொண்டனர்.

காங்கேயனோடையினதும் பள்ளிவாயல்களினதும் கௌரவத்தையும் மதிப்பையும் பேணும் வகையிலும் கண்ணியத்தை பாதுகாக்கும் நோக்கிலும் இதற்கு முன்பு போதைப் பொருட்களுடன் தொடர்பு பட்டிருந்தால் அவற்றிலிருந்து முற்றாக விலகி அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோரி அவற்றிலிருந்து விடுபடுவதோடு இன்றிலிருந்து எந்த வித போதைப் பொருட்களை பாவிப்பதையோ விற்பதையோ அதற்கு ஊக்குவிப்பு வழங்குவதையோ அது தொடர்பான விடயங்களில் தொடா்புடுவதனையோ செய்ய மாட்டேன் அல்லாஹ்வின் மீது ஆணையாக ஊர் மக்கள் முன்னிலையில் காங்கேயனோடை ஜாமிஉல் மஸ்ஜித் ஜும் ஆப்பள்ளி வாயலில் 24.08.2018 வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற ஜும் ஆவின் பின்னர் சத்தியம் செய்து உறுதியளிக்கின்றேன் என ஒவ்வொரு நிருவாகிகளும் சத்தியம் செய்து கொண்டனர்.

காத்தான்குடி நகர சபை பிரிவிலுள்ள வர்த்தக நிலையங்களில் புகைத்தல் மற்றும் போதைப் பொருள் சார்ந்த பொருட்களை விற்பதில்லையென்ற ஊர் ரீதியான தீர்மானத்தை எடுத்து நடைமுறைப்படுத்த வேண்டுமென மருதமுனை தாருள்ஹுதா மகளிர் அறபுக்கல்லூரியின் விரிவுரையாளர் மௌலவி எம்.அஸ்பர் ஹஸன் பலாஹி கடந்த 22.08.2018 ஹஜ் பெருநாள் ஜும்ஆ உரையின் போது பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்தார்.

காத்தான்குடி நகர சபையினாலும் அதன் தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் தலைமையில் போதை வஸ்த்துக் கெதிரான வேலைத்திட்டங்கள் தொடர்பில் மிக மும்முரமாக ஆராயப்பட்டு அதற்கான செயலணியொன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கிழக்கு மாகாணத்தின் பல முஸ்லிம் பிரதேசங்களில் பள்ளிவாயல்கள் நிருவாகிகள் சமூக மட்ட தலைவர்கள் சிவில் சமூக அமைப்புக்கள் என பலரும் போதைவஸ்த்துக் கெதிரான வேலைத்திட்டத்தை மேற் கொள்வதில் ஆர்வம் காட்டியுள்ளனர்.

இந்த போதை வஸ்த்து என்ற பாரிய அழிவிலிருந்து நமது இளைய தலைமுறையினரையும் சமூகத்தையும் பாதுகாப்பதற்காக அனைத்து வேறுபாடுகளுக்கும் அப்பால் அனைவரும் ஒன்று திரள வேண்டும்.

ஓவ்வொரு பள்ளிவாயலும் சிவில் சமூக அமைப்புக்களும் முக்கியஸ்தர்களும் அரசியல் பிரமுகர்களும் உள்ளுராட்சி மன்றங்களும் போதைவஸ்த்துக் கெதிரான வேலைத் திட்டத்தினை மேலும் மும்முரமாக முன்னெடுக்க வேண்டும். அப் போதுதான் இந்தக் கொடிய அழிவிலிருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

எம்.எஸ்.எம்.நூர்தீன்
காத்தான்குடி

(இக்கட்டுரை இன்றைய (31.08.2018) வெள்ளிக்கிழமை விடிவெள்ளி பத்திரிகையில் வெளி வந்துள்ளது.)

No comments:

Post a Comment