அரசியலுக்குள் பிரவேசித்த தமக்கும் தமது குடும்பத்திற்கும் சேர்த்து உழைப்பவர்களுக்கு மத்தியில் மக்களுக்காக உழைக்கும் நல்ல மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்யுமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுப்பதாக மீள்குடியேற்ற புனர்வாழ்வு மற்றும் வடக்கு மாகாண அபிவிருத்தி பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டம், கரைத்துறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட செல்வபுரம் கிராமத்தில் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சினால் யாவர்க்கும் வீடு திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட 101 ஆவது மாதிரி கிராமத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
குறித்த நிகழ்வில் பிரதியமைச்சர் மஸ்தான் தொடர்ந்தும் உரையாற்றுகையில், யுத்தத்தால் பாதிக்கப்பட்டு வசதியாக இருந்த பல குடும்பங்கள் இன்று தமது அன்றாட வாழ்வை கொண்டு செல்ல முடியாத நிலையில் இருக்கும் பொழுது அமைச்சர் சஜித் பிரேமதாசா அவர்களின் நாடு முழுவதுமான மிக நீண்டதொரு செயல் திட்டத்தின் ஒரு பகுதியாக எமது மக்களின் தேவைகளை அறிந்து மிக முக்கியமான தேவைகளில் ஒன்றாக இருந்த வீடுகளை வழங்க முன் வந்திருப்பதையிட்டு வட பகுதி மக்கள் சார்பாக எனது நன்றியை முதலில் தெரிவித்துக்கொள்கின்றேன்.
வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சின் ஊடாக 2025 ஆம் ஆண்டில் 'செமட்ட செவண' (யாவர்க்கும் வீடு) எனும் திட்டத்தின் கீழ் பல வருடங்களாக தமக்கான சொந்த வீட்டை பெற்றுக்கொள்ள முடியாமல் இருந்த மக்களுக்கு வீடுகளை வழங்கி அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வரும் நல்லாட்சி அரசாங்கத்தின் பாரியதொரு செயற்திட்டத்தை அமைச்சர் சஜித் பிரேமதாஸ அவர்கள் மிக நேர்த்தியான முறையிலும் நேர்மையான முறையிலும் செய்து வருகின்றார்.
அந்தவகையிலேயேதான் இன்றைய நாளில் முல்லைத்தீவு மாவட்டம் கரைத்துறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட செல்வபுரம் பகுதியில் 101 ஆவது மாதிரிக் கிராமம் அமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக வழங்கப்படுகின்றது.
வழமையாக வீட்டுத் திட்டம் என்றால் வீட்டுக்கான முழுப் பணத் தொகையையும் வழங்கி தமக்கான வீடுகளை நிர்மாணித்துக் கொள்ள பணிக்கப்படும். அவ்வாறான சில செயற்திட்டங்கள் இன்னும் பூரணப்படுத்தப்படாத நிலையில் இருப்பதை நாம் காண்கின்றோம்.
எனினும் யாவர்க்கும் வீடு செயற்திட்டத்தின் மூலம் வீடு பெரும் குடும்பத்தின் பங்களிப்புடன் வெற்றிகரமாக வீடுகள் கட்டி முடிக்கப்படுகிறது என்பதை மகிழ்ச்சியுடன் ஞாபகப்படுத்தி கொள்கின்றேன்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் செல்லத்தம்பு அவர்களின் வேண்டுகோளுக்கு அமைவாக முன்னாள் ஜனாதிபதியும் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சராக இருந்த அமரர் ரணசிங்க பிரேமதாச அவர்களினால் நந்தி கடலுக்கு அருகாமையில் செல்வபுரம் மாதிரி கிராமம் அமைக்கப்பட்டது.
எனினும் முப்பது வருடங்களாக இடம்பெற்ற கொடூர யுத்தத்தில் இந்த கிராமம் முற்றாக அழிந்த நிலையில் காணப்பட்டது இதனை அடுத்து அமரர் ரணசிங்க பிரேமதாச அவர்களின் புதல்வரும் தற்போதைய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்கள் கடந்த 2016 ஆம் ஆண்டு ஆண்டு டிசம்பர் மாதமளவில் இப்பகுதிக்கு வருகை தந்து இங்குள்ள மக்களால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக இந்த வீட்டுத் திட்டம் இன்று மக்கள் பாவனைக்கு வழங்கப்படுவதையொட்டி நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்.
வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களினால் அவரது தந்தை எவ்வாறு எம் தாய் நாட்டுக்கு சேவை செய்தாரோ அதே போன்று அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களின் வழிகாட்டலில் மக்களுக்கான பணியை சிறப்பாக செய்து வருகின்றார்.
இவ்வாறான பல நல்ல திட்டங்களை இந்த நல்லாட்சி அரசாங்கம் செய்து வருகின்றது எனினும் அதனை விளம்பரப்படுத்துவது இல்லை இதனால் சிலர் மக்களை குழப்பும் வகையில் தமது கருத்துக்களையும் விமர்சனங்களையும் தெரிவித்து வருகின்றனர். மக்களால் கொண்டுவரப்பட்ட நல்லாட்சி மக்களுக்கான அபிவிருத்தி பணிகளை தொடர்ந்தும் செய்து கொண்டே இருக்கின்றது என்பதை இந்த இடத்தில் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
கடந்த ஆட்சிக்கும் தற்போதைய நல்லாட்சிக்கான வித்தியாசத்தையும் மக்கள் நன்றாகவே உணர்ந்து இருக்கின்றனர். நமது அரசாங்கம் கட்சி பேதங்களுக்கு அப்பால் உரியவர்களுக்கு உரியதை கொண்டு சேர்ப்பதில் சரியாக இருக்கின்றோம்.
அதுமாத்திரமன்றி சில அரசியல்வாதிகளின் செயற்பாடுகளால் கடந்த காலங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நாம் உதவிகளை செய்து வருகிறோம் தேவைகளின் அடிப்படையில் உதவிகளை செய்யவும் திட்டமிட்டு இருக்கிறோம்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் செல்லதம்பு அவர்களால் தன்னுடைய நிலம் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளதுடன் அவருடைய வீடு கடந்த காலங்களில் பிரதேச செயலகமாக பயன்படுத்தப்பட்டிருப்பதை நீங்கள் அறிவீர்கள்.இவ்வாறானவர்களே மக்கள் பிரதிநிதிகள் அதனைவிடுத்து அரசியலுக்குள் பிரவேசித்த தன்னை அபிவிருத்தி செய்து கொள்ளவும் தன்னால் முடியுமான வரை குடும்பத்திற்கு சொத்து சேர்த்துக் கொள்பவர்கள் பற்றியும் நீங்கள் நன்கு அறிந்து கொள்ள வேண்டும்.
ஏனெனில் அவ்வாறானவர்களை மக்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுப்பவர்கள் நீங்களே ஆதலால் உங்களது பகுதிக்கு சேவை செய்யக்கூடிய மக்கள் சொத்துக்களை சூறையாடாத நல்ல தலைவர்களை தேர்ந்தெடுத்து உங்களது பிரதேசத்தை அபிவிருத்தி செய்து கொள்ளுங்கள்.
இந்த வீட்டுத் திட்டம் மாத்திரம் அல்லாது முல்லைத்தீவு மாவட்டத்திற்கு மேலும் சில வீட்டுத் திட்டங்களை வழங்க அமைச்சர் அவர்களிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்ட பொழுது அதனை அவர் ஏற்று நமக்கு மேலும் சில திட்டங்களை தர முன் வந்திருக்கிறார் என்ற மகிழ்ச்சியான செய்தியை இந்த இடத்தில் பதிவு செய்து கொள்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.
வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் மீள்குடியேற்ற புனர்வாழ்வு மற்றும் வடக்கு மாகாண அபிவிருத்தி பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் மற்றும் குழுக்களின் பிரதித் தலைவராக செல்வம் அடைக்கலநாதன் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராஜா, சிவமோகன் முல்லை அரச அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் உட்பட மாகாண சபை உறுப்பினர்கள் பிரதேச சபை உறுப்பினர்கள் அரச உயரதிகாரிகள் வீட்டுத்திட்ட பயனாளிகள் என மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
ஊடகப் பிரிவு
No comments:
Post a Comment