அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் யாழ். மாநகர சபை உறுப்பினர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் உறுப்பினராக செயற்படுவதற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர், நீதிபதி பி.பத்மன் சூரசேன மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோரால் இன்று (03) இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
யாழ். மாநகரசபைக்குட்பட்ட பகுதியில் விஸ்வலிங்கம் மணிவண்ணன் வாக்காளராக பதிவு செய்யப்படாத ஒருவர் என தெரிவித்து, அவர் மாநகர சபை உறுப்பினராக செயற்படுவதை தடை செய்யுமாறு கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாநகர சபைக்கான தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்யும் போது மாநகர சபை எல்லையில் வதிவிடம் கொண்டிருந்ததாக எதிர் மனுதாரரான யாழ். மாநகர சபை உறுப்பினர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் சார்பில் முன்னிலையான மூத்த சட்டத்தரணி ஆட்சேபனையை முன்வைத்தார்.
எனினும் 2017ஆம் ஆண்டு வாக்காளர் பதிவின் போது, உறுப்பினர் மணிவண்ணன் யாழ்ப்பாண மாநகர சபை எல்லையில் வதியவில்லை என மனுதாரர் தரப்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மன்றுரைத்தார்.
கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது தோல்வியடைந்த போதும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பட்டியலின் கீழ் விஸ்வலிங்கம் மணிவண்ணன் யாழ். மாநகர சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாண மாநகர சபை எல்லைக்குள் நிரந்தரமாக வதியாத ஒருவர் உறுப்பினராக தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்டமை உள்ளூராட்சி தேர்தல் விதியை மீறும் செயல் என மனுதாரர் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment