ஓட்டமாவடி ஹிஜ்றா வித்தியாலய அதிபர் உடனடியாக அப்புறப்படுத்தப்பட வேண்டும் - News View

About Us

About Us

Breaking

Friday, August 31, 2018

ஓட்டமாவடி ஹிஜ்றா வித்தியாலய அதிபர் உடனடியாக அப்புறப்படுத்தப்பட வேண்டும்

கல்வியில் மிகவும் பின்தங்கியுள்ள இப்பிரதேசத்தில் பழமை வாய்ந்த ஆரம்பப்பிரிவு பாடசாலையான ஓட்டமாவடி 3ம் வட்டார ஹிஜ்றா வித்தியாலயத்தின் அதிபர் உடனடியாக அப்புறப்படுத்தப்பட வேண்டுமென பள்ளிவாசல், பெற்றோர்கள், பொது அமைப்புக்கள் மற்றும் உள்ளூர் அரசியல்வாதிகள் அனைவரும் ஒருமித்து தீர்மானமொன்றினை மேற்கொண்டுள்ளனர்.

இது சம்பந்தமான மேலுமொரு கலந்துரையாடல் நேற்றிரவு (30) இஷாத் தொழுகையின் பின்னர் ஓட்டமாவடி 3ம் வட்டார ‘மஸ்ஜிதுல்ஹைர்’ பள்ளிவாசலில் இடம்பெற்றது. இதில் பிரதேச சபை உறுப்பினர் அமீர் உட்பட பள்ளிவாசலின் நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் பாடசாலையின் நலன்விரும்பிகளும் கலந்து கொண்டனர்.

இப்பிரதேசத்தில் பழமை வாய்ந்த ஆரம்பப்பிரிவு பாடசாலையான ஓட்டமாவடி ஹிஜ்றா வித்தியாலயத்தில் 1988ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. அதன் முதலாவது அதிபராக MCH. முஹமட் அவர்களும் (1988 - 1993) இரண்டாவது அதிபராக தற்போதைய மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் MLA. ஜுனைட் அவர்களும் (1993 -2007) வரையிலும் கடமையாற்றினர்.

அதன் பின்னர், இன்று வரையும் தற்போதைய அதிபர் தொடர்ச்சியாக சுமார் 11 வருடங்கள் கடமையாற்றுகின்றார். இவருடைய காலப்பகுதியில் இப்பாடசாலை மிகவும் பின்தங்கிய நிலையினை நோக்கியே சென்று கொண்டிருக்கின்றது.

இப்பாடசாலையின் தற்போதைய அதிபரின் காலத்திற்கு முன்னர் 1ம் தரத்திற்கு சுமார் 40 ற்கு மேற்பட்ட மாணவர்கள் புதிதாக வருகை தந்தாலும், தற்போது இப்பாடசாலையின் 1ம் தரத்தில் 19 மாணவர்கள் மட்டுமே இருக்கின்றனர். இந்த 19 மாணவர்களில் 10 மாணவர்கள் ஓட்டமாவடி - மீராவோடை எல்லையில் வசிப்பவர்கள் மிகுதி 9 மாணவர்கள் மட்டுமே இந்த 3ம் வட்டார மாணவர்களாகும்.

இப்படிப்பட்ட பல விடயங்களை முன்வைத்து இப்பாடசாலையின் தற்போதைய அதிபரை உடனே அப்புறப்படுத்துமாறு 3ம் வட்டார பள்ளிவாசல் நிருவாகத்தினரும், பிரதேச சபை உறுப்பினர்களும் மற்றும் விளையாட்டுக்கழகங்களும் வலய மற்றும் மாகாணக் கல்விப் பணிப்பாளர்களுக்கு முறைப்பாடொன்றினை செய்திருந்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த அதிபர் பெற்றோர்களை 3ம் வட்டார பள்ளிவாசல் நிர்வாகத்தினருக்கெதிராக தூண்டியுள்ளார் அதாவது, தற்போதைய 4ம் வகுப்பு மாணவர்களுக்கு 5ம் புலமைப்பரிசில் வகுப்புக்களை நடாத்தும் ஆசிரியருக்கெதிராக பள்ளிவாசல் நிருவாகத்தினர் வலயக் கல்விப்ப ணிப்பாளருக்கு பெட்டிசனொன்றை அடித்துள்ளதால், தற்போது உங்களுடைய 4ம் வகுப்பு மாணவர்களுக்கு மேலதிக வகுப்புக்களை நடத்துவதற்கு குறிப்பிட்ட ஆசிரியர் மறுக்கின்றார். இதனை பெற்றோர்களாகிய நீங்கள் பள்ளிவாசல் நிருவாகத்திடம் சென்று விசாரணை செய்யுங்கள் என்றிருக்கின்றார் தற்போதைய ஹிஜ்றா வித்தியாலய அதிபர்.

இந்தச்சம்பவத்தினை கேள்விப்பட்ட பெற்றோர்கள் கடந்த 28ந் திகதி ஓட்டமாவடி 3ம் வட்டார பள்ளிவாசல் நிர்வாகத்திடம் சென்று விசாரித்த போது, அவர்கள் பெற்றோரிடம் கூறியதாவது, குறிப்பிட்ட அதிபருக்கெதிராக மட்டுமே முறைப்பாடொன்றினை மேற்கொண்டு அதிபரினை இடமாற்றுவதற்கு முயற்சிக்கின்றோம். 

புலமைப்பரிசில் வகுப்பு நடத்துகின்ற ஆசிரியருக்கெதிராக நாங்கள் எந்தவிதமான முறைப்பாடுகளை செய்யவுமில்லை வாருங்கள் குறிப்பிட்ட ஆசிரியரின் வீட்டிற்குச்சென்று அவரிடம் கலந்துரையாடுவோம் என்றனர் பள்ளிவாசலின் நிர்வாகத்தினர்.

பெற்றோர்களும், பள்ளிவாசல் நிர்வாகத்தினர் மற்றும் குறிப்பிட்ட ஆசிரியர்கள் இணைந்து கலந்துரையாடி நாளை சனிக்கிழமையிலிருந்து மீண்டும் 4ம் வகுப்பிற்கு மாணவர்களுக்கு மேலதிக வகுப்புக்களை நடாத்துவதற்கு குறிப்பிட்ட ஆசிரியர் சம்மதித்தோடு, இது சம்பந்தமாக ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் பள்ளிவாசல் நிருவாகத்தினர் தலையிடுவதாகவும் முடிவு செய்யப்பட்டது.

இது இவ்வாறிருக்க சனிக்கிழமை மேலதிக வகுப்பு நடத்துவதற்கு நான் திறப்பினைத் தரமாட்டேன் என்று குறிப்பிட்ட அதிபர் கூறுவதோடு, அவ்வாறு மேலதிகமான வகுப்புக்களை பாடசாலையில் நடாத்துவதென்றால் வலயக் கல்விப் பணிப்பாளரின் அனுமதி பெறப்பட வேண்டுமென்றும் அதிபர் குறிப்பிட்டுள்ளார். 

உண்மையிலேயே இங்கு நடந்தேறியுள்ள நாடகம் என்னவென்றால், குறிப்பிட்ட அதிபர் தன்னுடைய இடமாற்றப் பிரச்சினையினைக் குழப்புவதற்காக குறிப்பிட்ட ஆசிரியருக்கெதிராக பெட்டிசன் ஒன்றினை அடித்து விட்டு பெற்றோர்களை கலவரப்படுத்தியுள்ளதே இந்தச்சம்பவமாகும்.

இப்பாடசாலையில் புலமைப்பரிசில் மாணவர்களுக்கு தற்போது மேலதிக வகுப்புக்களை நடாத்துவதற்கு குறிப்பிட்ட ஆசிரியர் வலயக் கல்விப் பணிப்பாளரின் அனுமதியினைப் பெற வேண்டுமென்று இந்த அதிபர் கட்டளையிடுவாராயின், இவ்வருடம் புலமைப்பரிசில் எழுதிய அதிபருடைய சகோதரரின் மகள் இப்பாடசாலையிலேயே மேலதிக வகுப்புக்களில் படித்ததற்கும் குறிப்பிட்ட ஆசிரியரே மேலதிக நேர வகுப்புக்களில் கற்றுக் கொடுத்ததற்கும் குறிப்பிட்ட அதிபர் வலயக் கல்விப் பணிப்பாளரின் அனுமதியினை சென்ற வருடம் பெற்றிருந்தாரா?

தன்னுடைய சகோதரரின் மகளுக்கு ஏற்றாற்போல மேலதிக நேர வகுப்புக்களின் நேரங்களில் மாற்றம் செய்ததற்கும் ஏனைய மாணவர்களைக் கணக்கிலெடுக்காது புலமைப்பரிசில் வகுப்புக்களை இரத்துச் செய்ததற்கும் இப்பாடசாலையின் அதிபர் எந்த வலயக் கல்விப் பணிப்பாளரின் அனுமதியினை பெற்றுக்கொண்டார் என்பதனையும் தெரியப்படுத்த வேண்டும்.

எம்.எச்.எம் .நெளபல் 
thehotline.lk

No comments:

Post a Comment