ஐ.எஸ்.எஸ். அமைப்புடன் தொடர்புபட்டதாக தெரிவிக்கப்படும் இலங்கையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். மொஹமட் கமர் நிலார் நிஸாம்டீன் எனும் 25 வயது இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கலாநிதி பட்டப்படிப்பிற்காக அவுஸ்திரேலியா சென்றுள்ள குறித்த மாணவன், அவுஸ்திரேலியாவின் கென்சிங்டனிலுள்ள, நியூ சவுத் வேல்ஸ் (New South Wales) பல்கலைக்கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் குறித்த இளைஞரின் கணனியில் (Notebook) ஐ.எஸ்.எஸ். அமைப்பினால் உந்துதலளிக்கும் வகையிலான விடயங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீவிரவாத நடவடிக்கைக்கு துணைபோகும் வகையிலான விடயங்களை சேகரித்தல், அது தொடர்பிலான ஆவணங்களை தயாரித்தல், அதில் ஈடுபடுதல் அல்லது அதற்கு உதவியாக இருத்தல் எனும் சட்டத்தின் கீழ், அவர் நேற்று (30) கைது செய்யப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவரது கணனியில், தீவிரவாதத்திற்கு துணைபுரியும் வகையில், இடங்கள் மற்றும் தனிநபர்கள் தொடர்பிலான முக்கியமான பல்வேறு தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிசார் ஊடகங்களுக்கு தகவல் வெளியிட்டுள்ளனர்.
மனோதத்துவ நிபுணர்கள் மற்றும் புலனாய்வு அதிகாரிகள் மூலம், குறித்த தகவல்களில் உள்ள விடயங்கள் குறித்து ஆராய்ந்து வருவதாகவும், தகவல் சேகரிக்கப்பட்டுள்ள இடங்கள், மிக முக்கியத்துவம் வாய்ந்தவை எனவும் பொலிசாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஸெட்லேண்டில் (Zetland) அவர் தங்கியிருந்த இடத்தை இன்று (31) காலை சோதனையிட்டபோது, பல்வேறு இலத்திரனியல் உபகரணங்களை கைப்பற்றியுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் மீதான குற்றச்சாட்டுகள், மிகவும் முக்கியமானதாகும் என்பதோடு, மிகப் பாரதூரமானதாகும் எனவும், அதனை குறைவாக மதிப்பிட முடியாது எனவும் அவுஸ்திரேலியா பெடரல் பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்துள்ளார்.
மாணவருக்கான வீசா அனுமதியின் அடிப்படையில் அவுஸ்திரேலியா சென்றுள்ள நிஸாம்டீனின் வீசா, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நிறைவடைவதாக தெரிவிக்கப்படுகின்றது.
நிஸாம்டீன் அவுஸ்திரேலியாவில் இதுவரை எவ்வித குற்றச்செயல்களும் ஈடுபடவில்லை எனவும், ஐ.எஸ்.எஸ். அமைப்பிலோ அல்லது எவ்வித தீவிரவாத அமைப்புகளுடனோ தொடர்புட்டதற்கான எவ்வித சான்றுகளும் இல்லை எனவும் அந்நாட்டு பொலிசார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆயினும் இது தெடர்பில் பொதுமக்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பிலான வழக்கு உள்ளூர் நீதிமன்றமான வெவர்லி (Waverley) நீதிமன்றில் இன்று (31) எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குறித்த வழக்கை எதிர்வரும் ஒக்டோபர் 24 ஆம் திகதி வரை ஒத்தி வைப்பதாக நீதவான் அறிவித்துள்ளார்.
வழக்கு தொடர்பில் நிஸாம்டீனினால் பிணை கோரப்படாத போதிலும், பிணை வழங்க முடியாது என உத்தியோகபூர்வமாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
அதன் அடிப்படையில் ஒக்டோபர் 24 ஆம் திகதி வரை, எட்டு வாரங்களுக்கு நிஸாம்டீன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment