நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் (NFGG) புதிய தவிசாளராக சிராஜ் மசூர் தெரிவு - News View

About Us

About Us

Breaking

Tuesday, July 3, 2018

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் (NFGG) புதிய தவிசாளராக சிராஜ் மசூர் தெரிவு

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் புதிய தவிசாளராக என்.எம். சிராஜ் மசூர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பேராளர் மாநாடு கடந்த சனிக்கிழமை (30) காத்தான்குடியில் நடைபெற்ற போதே இவர் புதிய தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அந்த வகையில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் புதிய தவிசாளராக, என்.எம். சிராஜ் மசூரும் இக் கட்சியினுடைய பிரதி தவிசாளராக, முன்னாள் தவிசாளர் பொறியியலாளர் எம்.எம். அப்துர் ரஹ்மான் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கட்சியின் பொதுச் செயலாளராக அஷ்ஷெய்க் எம்.பி.எம். பிர்தௌஸ், தேசிய அமைப்பாளராக முன்னாள் பொதுச் செயலாளர் எம்.ஆர். நஜா முகம்மட், கட்சியின் பொருளாளராக எம்.எச்எம். ஹனான் ஹுஸைன் பிரதி பொதுச் செயலாளராக றிஸானா சிமாஸ் பிரதி பொருளாளராக எஸ்.ஏ. ஹலீம் இஸாக் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதன் போது நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் புதிய தவிசாளர், என். எம்.சிராஜ் மசூர்,

2017 ஜுன் மாதம் 27 ஆம் திகதி ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி இலங்கை தேர்தல் ஆணைக்குழுவினால் பிரகடனப்படுத்தப்பட்ட பின்னர் நடைபெற்ற முதலாவது பேராளர் மாநாடு இதுவாகும்.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் புதிய தலைமைத்துவ சபையில் 17 பேர் அங்கத்தவர்களாக இருப்பார்கள். அதில் பத்து உறுப்பினர்கள் வாக்களிப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அந்த பத்து பேரும் ஒன்றிணைந்து மேலும் 07 பேரை நியமிப்பார்கள். இதனடிப்படையில் 17 பேர் தலைமைத்துவ சபை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

இந்த தலைமைத்துவ சபை அடுத்து வருகின்ற நான்கு வருடங்களுக்கு பதவி வகிப்பார்கள்.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி இந்த பேராளர் மாநாட்டின் போது சுமுகமான ஒரு மாற்றத்தினை செய்துள்ளது. அதையும் வாக்கெடுப்பின் மூலம் உட்கட்சி ஜனநாயக முறையைப் பேணி செய்திருக்கின்றது.

அரசியல் கட்சிகள் இப்படியான உட்கட்சி ஜனநாயகத்தை முறையாக பேணாத ஒரு சூழலில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி யாப்பு விதிகளுக்கமைய சுமூகமான முறையில் இந்த மாற்றத்தை நிறைவேற்றியுள்ளது.

நாட்டின் பல மாவட்டங்களைச் சேர்ந்த எமது கட்சியின் உறுப்பினர் எமது பேராளர் மாநாட்டில் கலந்து கொண்டார்கள்.

எமது தலைமைத்துவ சபையில் கொழும்பு, கம்பஹா, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, கண்டி, மன்னார், குருணாகல் என பல மாவட்டங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் பரந்தளவில் இதில் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

கடந்த காலங்களில் பல பொதுக் கூட்டங்களிலும் தேர்தல் பிரச்சார மேடைகளிலும் கட்சியின் தலைமைத்துவம் உரிய முறையில் மாற்றப்படும் என்ற வாக்குறுதியினை நாங்கள் பகிரங்கமாக சொல்லியிருந்தோம். அந்த வாக்குறுதியை இன்று நாங்கள் முறையாக பேணி செயற்பட்டிருக்கின்றோம் என்ற நல்ல செய்தியை இந்த சபையில் சொல்லி வைப்பதில் மகிழ்ச்சியடைகின்றோம்.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியைப் பொறுத்த வரையில் இந்த புதிய அரசியல் கலாசாரத்தினை கட்டியெழுப்ப வேண்டும் நேர்மையான அரசியல் பயணத்தில் நாங்கள் இருக்க வேண்டும் என்ற உறுதியோடு நாங்கள் தளராமல் செயற்பட்டு வருகின்றோம் என தெரிவித்தார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பிரதி தவிசாளர் பொறியியலாளர் எம்.எம். அப்துர் ரஹ்மான், கட்சியின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.பி.எம். பிர்தௌஸ் உட்பட கட்சியின் தலைமைத்துவ சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

எம்.எஸ்.எம். நூர்தீன்

No comments:

Post a Comment