முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் மற்றும் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவின் பரிசோதகர் நியோமல் ரங்கஜீவ ஆகியோரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவர்கள் இருவரையும் எதிர்வரும் ஜூலை மாதம் 17ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த பெர்ணான்டோ உத்தரவிட்டுள்ளார்.
பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவின் பரிசோதகர் நியோமல் ரங்கஜீவ சுகயீனம் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியவில்லை என்று சிறைச்சாலை அதிகாரிகள் நீதிமன்றத்துக்கு தெரிவித்தனர்.
அதேவேளை அறிக்கை ஒன்றை சமர்பித்த குற்றப் புலனாய்வு பிரிவினர் இது தொடர்பில் விசாரணைகள் தொடர்வதாக நீதிமன்றத்துக்கு தெரிவித்தனர்.
அத்துடன் விசாரணைகளின் போது கண்டெடுத்த டீ 56 ரக துப்பாக்கிகள் 25 தொடர்பில் அரச இரசாயண பகுப்பாய்வாளருக்கு அனுப்பி அறிக்கை பெற்றுக் கொள்ள அனுமதிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்திடம் விடுத்த கோரிக்கைக்கு நீதிபதி அனுமதி வழங்கினார்.
வெலிக்கடை சிறைச்சாலையில் கடந்த 2012 நவம்பர் 09 ஆம் திகதி ஏற்பட்ட மோதலில் 27 கைதிகள் பலியான சம்பவம் தொடர்பில் குறித்த இருவரும் கடந்த மார்ச் மாதம் CID யினால கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
குறித்த இருவரும் இன்று (03) கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது நீதவான் அவர்களின் விளக்கமறியலை நீடிப்பதற்கான உத்தரவை வழங்கினார்.
No comments:
Post a Comment