பெண்களும் முகநூல் சர்ச்சையும் - வை எல் எஸ் ஹமீட் - News View

About Us

About Us

Breaking

Monday, July 2, 2018

பெண்களும் முகநூல் சர்ச்சையும் - வை எல் எஸ் ஹமீட்

கடந்த சில தினங்களாக ‘முகநூலில் பெண்கள் தொடர்பாக சர்ச்சைகளும் வாதப்பிரதிவாதங்களும் அலைமோதுகின்றன. ஒரு காலத்தில் மனிதன் தன் செய்திகளை தூரத்தே இருப்பவர்களுக்கு எத்திவைக்க பறவைகளின் உதவியை நாடினான். 

இன்று உலகின் ஒரு அந்தத்தில் நடைபெறும் நிகழ்வுகளை அதன் மறு அந்தத்தில் இருப்பவன் சமகாலத்தில் பார்க்கும் அளவுக்கு ஊடகம் வளர்ந்திருக்கின்றது. இந்த ஊடக வளர்ச்சியின் அண்மைக்கால இணைவுதான் சமூக வலைத்தளம். அந்த வலைத்தளத்தில் ஒரு முக்கிய பங்கினை முகநூல் வகிக்கின்றது.

எந்தவொரு ஊடகமும் ஒரு பாலாருக்குள் மட்டுப்படுத்தப்படுவதில்லை. அவை இருபாலாருக்கும் உரியது. இவ்வூடகங்களில் சர்வதேச ரீதியாக முஸ்லிம் பெண்களும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்கின்றார்கள்.

ஊடகத்துறை மாத்திரமல்லாது எந்தத்துறையாக இருந்தாலும் அதில் முஸ்லிம் பெண்களின் பங்களிப்பு கணிசமான அளவு இருக்கின்றது. ஒரு முஸ்லிம் பெண் முடிந்தவரை வீட்டில் இருப்பது இஸ்லாத்தின் பார்வையில் சிறந்தது. அவளது தேவைகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு இஸ்லாத்தில் அவளது கணவன் மீதும் பாதுகாவலர்கள் மீதும் சுமத்தப்பட்டுள்ளது. 

அதேநேரம் கட்டாயத் தேவை ஏற்படுகின்றபோது ‘இத்தா’ கடமையில் இருக்கின்ற பெண்ணிற்குக்கூட வெளியில் செல்வதற்கு இஸ்லாம் அனுமதி வழங்கியிருக்கின்றது. இவ்விரண்டிற்கும் இடைப்பட்டதுதான் இன்று பெண்கள் கல்விக்காகவும் தொழிலுக்காகவும் இன்னோரன்ன தேவைக்காகவும் வெளியில் செல்வதாகும். இதை உலமாக்கள் பிழைகாண வில்லை. இஸ்லாமிய ஒழுக்கக் கட்டுப்பாட்டை அவள் மீறாதவரை ஒரு தேவைக்காக அவள் வெளியில் செல்வதை உலமாக்கள் ஆட்சேபிக்கவில்லை.

இஸ்லாம் விதித்திருக்கின்ற எந்தவொரு கட்டுப்பாட்டிற்கும் அதன் மறுதலைக்கான சமன்பாட்டையும் சேர்த்தே வகுத்திருக்கின்றது. அந்தளவு நேர்த்தியான மார்க்கம் இஸ்லாம். பிழைகள் நடந்துவிடக்கூடாது என்பதற்காக பல விடயங்களில் வெவ்வேறு விதமான கட்டுப்பாடுகளை விதிக்கின்ற இஸ்லாம் அக்கட்டுப்பாடுகள் மனித வாழ்க்கையை முடக்கிவிடக்கூடாது என்பதற்காக தேவையானபோது தேவையான தளர்ச்சிப்போக்கை அல்லது விதிவிலக்கை கடைப்பிடிக்கவும் வழிவகுத்திருக்கின்றது.

இதில் எங்கு பிரச்சினை தோன்றுகின்றது என்றால், சிலர் இஸ்லாம் வழங்கிய தளர்ச்சிப்போக்கிற்கான சந்தர்ப்பத்தை அல்லது விதிவிலக்கை மறந்து விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டுக்குள் தம்மை முடக்கும்போதும் அல்லது அந்தக் கட்டுப்பாட்டுப்பக்கம் மாத்திரம் நின்று விவாதிப்பதிலும் இன்னும் சிலர் அந்தக் கட்டுப்பாடுகளை மறந்து, அந்தக் கட்டுப்பாடுகளுக்குப் பின்னால் மறைந்திருக்கின்ற இஸ்லாத்தின் உயர் நோக்கங்களை உணராமல் அந்தத்தளர்ச்சிப்போக்கை அல்லது விதிவிலக்கை கட்டுப்பாடே இல்லாத வாழ்க்கையின் வழிமுறையாக கைக்கொள்ள முற்படுவதிலும் அதற்காக வாதம் புரிவதிலுமாகும்.

சுருங்கக்கூறின் இஸ்லாம் வகுத்திருக்கின்ற சமநிலை பேணுகின்ற அந்த சமன்பாட்டை சரியாக புரிந்துகொள்ளத் தவறுவதிலேயே பிரச்சினைகள் தோற்றம் எடுக்கின்றன. மறுபுறம் இஸ்லாத்தின் அடிப்படையில் எழுகின்ற பிரச்சினைகளுக்கு இஸ்லாத்திற்கு அப்பால் நின்று தீர்வுகாண இன்று ஒரு கூட்டம் புறப்பட்டிருப்பது நிலைமையை மேலும் மோசமடையச் செய்கின்றது.

இதற்குச் சிறந்த உதாரணம்தான் முஸ்லிம் தனியார் சட்டத்தை இஸ்லாத்திற்கு அப்பால் மேற்கத்தைய தேசத்தால் வகுக்கப்பட்டு ‘சர்வதேச’ என்ற அடைமொழியுடன் அதே மேற்கத்தைய சக்திகளால் விற்பனைசெய்யப்படுகின்ற ‘மனித உரிமை சாசனத்தின்‘ அடிப்படையில் திருத்த வேண்டும். என்ற சிலரது வாதமாகும்.

இஸ்லாமிய சிந்தனைகளால் அல்லது விழுமியங்களால் ஆளப்படவேண்டிய பல விடயங்களை வேறு சிந்தனாவாதங்களால் அல்லது தத்துவங்களால் அணுகமுற்படுகின்ற ஒரு துரதிஷ்ட வசமான நிலைமையும் இன்று பரவலாக காணப்படுகின்றது.

இந்தப் பின்னணியில்தான் ‘முகநூலில் பெண்கள்’ என்ற சர்ச்சையும் பார்க்கப்படவேண்டும்.

முகநூல் இன்று ஒரு பலம்வாய்ந்த ஊடகமாக தொழிற்படுகின்றது. உலகின் எந்த மூலையிலும் நடைபெறும் நிகழ்வுகளை செய்திகளாக, எழுத்து வடிவத்திலும் ஒலி, ஒளி வடிவத்திலும் பெற்றுக்கொள்ள முகநூல் உதவுகின்றது. திகன கலவரத்தின்போது களநிலவரத்தை உடனுக்குடன் அறிந்துகொள்ள பொதுவாக சமூகவலைத்தளங்களும் குறிப்பாக முகநூலும் ஆற்றிய பங்களிப்பு (அரசின் தடைக்கு மத்தியிலும் வேறு வழிகள் மூலம்) இன்று அதன் தேவையை உணர்த்திநிற்கின்றது.

ஊடகங்களில் செய்திகளை அறிந்துகொள்ளல், அல்லது பகிர்ந்துகொள்ளல் என்பது ஒரு பாலாருக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட வேண்டுமென்று கேட்க முடியாது.

இங்கு பிரச்சினை எழுவது, முகநூல் பாவனை அதன் “ஊடக பாவனை” என்ற எல்லை தாண்டும்போதாகும். ஏனைய அச்சு, இலத்திரனியல் ஊடகங்களைப் பொறுத்தவரை அதனைக் கட்டுப்படுத்துவதற்கும் நெறிப்படுத்துவற்கும் ஏற்பாடுகள் இருக்கின்றன. 

ஆனால் முகநூல் போன்றவற்றிற்கு அவ்வாறான ஏற்பாடுகள் இல்லாத நிலையில் அதுவொரு கடிவாளமில்லாத ஒரு ஊடகமாக யாரும் எதையும் எழுதலாம், பகிரலாம் என்கின்ற ஒரு நிலை காணப்படுகின்றது. இதனால் பலரின் தன்மானம், கௌரவம் சந்தியில் ஏலம் பேசப்படும் நிலைமை காணப்படுகின்றது. சுரூங்கக்கூறின் இன்று “முகநூல்” மிகவும் துஷ்பிரயோகம் செய்யப்படுகின்ற ஒரு ஊடகமாக திகழ்கின்றது. (Today the most abused medium of communication is Facebook).

பலருக்கு முகநூல் ஒரு ஊடகமாக தொழிற்படுகின்ற அதேவேளை, அதைவிட அதிகமானவர்களுக்கு அது வேறு ஒன்றாக, துஷ்பிரயோகத்திற்குரிய ஒரு மூலமாக தொழிற்படுகின்றது. இந்தப்பின்னணியில்தான் ‘பெண்களின் முகநூல் நுழைவு பார்க்கப்பட வேண்டும்.

எனவே, இங்கு எழுப்பப்பட வேண்டிய கேள்விகள் ‘ஒரு பெண் முகநூல் என்ற ஊடகத்துள் நுழைகின்றாளா? மிகமோசமாக துஷ்பிரயோகப்படுத்தப்படுகின்ற ஒரு மூலத்திற்குள் நுழைகின்றாளா? அல்லது இரண்டும் சேர்ந்த கலவைக்குள் நுழைகின்றாளா? அது கலவை என்றால், அதில் ‘ஊடகம்’ என்ற தன்மை அதிகமாக இருக்கின்றதா? அல்லது ‘சாக்கடைத்தன்மை’ அதிகமாக இருக்கின்றதா? எதன் தாக்கம் அதிகம் போன்றவைகளாகும்.

முகநூல் ஏனைய ஊடகங்கள் போன்ற ஒரு ஊடகமே! என்பது விடையானால் அவர்கள் தாராளமாக நுழையலாம். நுழைய முடியாது என்றால் அது எல்லா ஊடகங்களுக்கும் பொருந்த வேண்டும். அது வேறு தலைப்பில் பார்க்கப்பட வேண்டும். முகநூல் ஒரு ‘சாக்கடை’ என்பது விடையானால் பெண்கள் நுழையவே கூடாது.

‘முகநூல் சாக்கடை’ என்பது விடையானால் சாக்கடைக்குள் ஆண்கள் நுழையலாமா? என்ற கேள்வி எழலாம். இதற்குரிய பதில் என்னவென்றால் ‘முகநூல் சாக்கடை என்பது உண்மையானால் அதனை சாக்கடையாக மாற்றிக்கொண்டிருப்பவர்களே சில ஆண்கள் தானே’ என்பதாகும். (அந்த சாக்கடையைப் பூக்கடையாக மாற்றப் போராடிக்கொண்டிருப்பதும் ஆண்கள்தான்’ என்பது வேறு ஒரு தலைப்பின் கீழ் பார்க்கப்பட வேண்டும்).

இது இரண்டும் சேர்ந்த கலவை முகநூல் என்றால் ‘செய்திகளை அறிந்து கொள்ளல் அல்லது பகிர்ந்து கொள்ளல்’ என்ற அதனது நேர்பக்கத்திற்காக இணைவதில் தவறில்லை. ஆனால் அந்தக் கலவையின் அடுத்த பாகத்தின் தாக்கம் அந்தப் பெண்ணின் புனித்ததை களங்கப்படுத்தி விடக்கூடாது என்பதில் அதீத அக்கறை செலுத்த வேண்டும். சுருங்கக்கூறின் அப்பெண் ஓர் எச்சரிக்கை உணர்வுடன் முகநூலில் சஞ்சரிக்க வேண்டும்.

ஏன் முகநூலில் ஆண்களுக்கில்லாத எச்சரிக்கை உணர்வு பெண்களுக்கு? என்ற கேள்வி எழலாம். எச்சரிக்கையே ஆண்களுக்கெதிராகத்தான். ( துஷ்பிரயோகம் செய்கின்ற).

இன்று முகநூலில் நிறைய பெண்கள் இருக்கின்றார்கள். ( பெண்கள் பெயரில் உலாவரும் ஆண்களைக் குறிப்பிடவில்லை) அவர்களெல்லாம் மௌனமாக நாட்டின் நடப்புகளை அறிந்து கொள்ளுகின்ற ஊடகமாகத்தான் முகநூலைப் பாவிக்கின்றார்கள்.

முகநூலில் அறிவு ரீதியான ஆக்கங்களைப் பெண்கள் பகிரலாம் அது ஒரு ஊடகம் என்ற வகையில். இலக்கிய விடயங்களை அதன் கண்ணியமான எல்லைக்குள் நின்றுகொண்டு பகிரலாம் தவறில்லை. சுருங்கக்கூறின் முகநூலை ஒரு நேர்த்தியான ஊடகமாக பாவிக்கலாம். அதில் தவறில்லை. 

ஆனால் முகநூலை ஒரு அரட்டையர் அரங்கமாக சில பெண்கள் பாவிக்க முற்படுவது பெண்களுக்கு இஸ்லாம் வகுத்த கட்டுப்பாட்டை மீறுவதாகும். பெண்கள் பெண்களுடன் அரட்டையடிக்கலாம். அதற்கு மிகச்சிறந்த மூலம் “வட்ஸ்அப்” ஆகும். பெண்களையும் மஹ்றமான ஆண்களையும் இணைத்து வட்ஸ்அப்பில் அளவளவாலாம். ஆனால் முகநூல் என்ற பொதுவெளியில் நாங்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

இன்று முகநூல் பல வழிகளில் ஆண்களால் துஷ்பிரயோகம் செய்யப்படுகின்ற அதேவேளை விரல்விட்டெண்ணக்கூடிய ஒரு சிலபெண்கள் முகநூலை ஆண்களுடன் பொழுதுபோக்குவற்கான ஓர் அரட்டையர் அரங்கமாகவே பாவிக்கின்றார்கள். அதனை நியாயப்படுத்துவதற்கு அவர்களுக்கு வசதியான வியாக்கியானங்களையும் கொடுத்துக்கொள்கின்றார்கள்.

இதில் மிகவும் முகம்சுளிக்க வைப்பது ‘ஏனைய ஊடகங்களைப் போலலல்லாது முகநூலில் பின்னூட்டம் இடுகின்ற வாய்ப்பு இருக்கின்றது. இந்தப் பின்னூட்ட வசதி ஒரு புறம் சில ஆண்களால் அசிங்கப்படுத்படுகின்ற அதேவேளை குறித்த சில பெண்களுக்கு ஆண்களுடனான அரட்டைக்குரிய களமாக பாவிக்கப்படுகின்றது. 

சில பின்னூட்டங்களில் இரட்டை அர்த்தம் தொனிக்கும் பதிவுகளும் அதற்கு பட்டும் படாமலும் ஒரு விதமான, சிலநேரங்களில் இமோஜிகளினூடான பெண்களின் பதில்களும் என்று அரட்டைகள் அமர்க்களமாக அரங்கேறுகின்றன.

சிலநேரங்களில் இப்பெண்களின் பதிவுகளில் பாவிக்கப்படுகின்ற வார்த்தைப் பிரயோகங்கள் கௌரவமான ஆண்கள்கூட பாவிக்கத் தயங்குகின்ற வார்த்தைப் பிரயோகங்களாக இருக்கின்றன.

ஒரு பதிவில் ஒரு சகோதரி, ஒரு இடத்தில் சந்தித்த ஒரு பெண்ணின் அபாயாத்துணி தொடர்பாக ஒரு விமர்சனத்தை எழுதும்போது அத்துணி அணிந்தது குறித்து அப்பெண்ணின் அங்கங்களை விபரித்த விதம் மிகவும் கவலையாக இருந்தது. அடுத்த பெண்ணை சீர்திருத்துவது என்ற பெயரில் இவ்வளவு விரசமாக ஒரு பெண்ணால் இன்னொரு பெண்ணைப்பற்றி பொதுத்தளத்தளத்தில் எழுத முடியுமா? என்ற கேள்வி எனக்குள் எழுந்தது.

அதேபோன்றதான் இன்னுமொரு பதிவில் ‘கற்பை எவ்வாறு பரிசோதிப்பது? என்று ஒரு சகோதரி முன்வைத்த வாதங்கள் விஞ்ஞான சொற்பதங்கள் இன்று இஸ்லாமியப் பெண்களின் வாழ்க்கை எங்கே சென்று கொண்டிருக்கின்றது? என்ற கேள்வியை எழுப்புகின்றது.

உண்மையைக் கூறப்போனால் சில சகோதரிகள் நாளாந்தம் எதையாவது முகநூலில் அலம்பவேண்டும். அரட்டையடிக்க வேண்டும். என்பதற்காக அர்த்தமற்ற எதைஎதையோ எழுதுகிறார்கள். நீர்த்தாங்கிகளில் இரையைப்போட்டவுடன் காத்திருந்த மீன்குஞ்சுகள் இரையைக் கவ்வுவதற்குக் கூடுவதுபோல் சில ஆண்கள் பின்னூட்டமிடக் கூடுகின்றார்கள். அங்கு ஓர் அழகான அரட்டையர் அரங்கம் அரங்கேறுகிறது. அதை அவர்களது கணவன்மார்களும் அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இவர்களுடன் சேர்ந்து அரட்டையடிக்கும் ஆண்கள், இவர்கள் குமுறும்போது அது சரியா? பிழையா? என்பதற்கப்பால் இவர்களுக்காக ஆதரவுக்கோசம் எழுப்பும் ஆண்கள் சிந்திக்க வேண்டியது, இவர்கள் இவ்வாறு நடந்துகொள்வது சரியென நீங்கள் நினைத்தால் உங்கள் மனைவிமார், சகோதரிகள், பெண்மக்கள் இதேபோன்று பொதுவெளியில் அரட்டையடிப்பதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? அவ்வாறு சகல பெண்களும் முகநூலூக்கு வந்து இவ்வாறு ஆண்களுடன் அரட்டையடித்து பொழுதுபோக்க நினைத்தால் இந்த சமூகத்தின் நிலை என்ன?

எனவே, சகோதரிகளே தயவு செய்து சிந்தியுங்கள்.
நீங்கள் முகநூல் வருவது தவறில்லை. நிறையப்பெண்கள் முகநூலில் இருக்கின்றார்கள். பதிவுகள் இடுவதில் தவறில்லை. அது அறிவு சார்ந்ததாக அல்லது சமூகத்திற்குப் பிரயோசனமானதாக இருந்தால். அதேநேரம் பின்னூட்ட வசதி தவறாகப் பயன்படுத்தப்படலாம். விழிப்பாயிருங்கள். 

ஆனால் அதே பின்னூட்ட வசதியை ஒரு வரப்பிரசாதமாக எடுத்துக்கொண்டு நாளாந்தம் ஏதாவது ஒரு பதிவு அதிலும் சிலநேரம் ஏதாவது ஒரு விகற்பம், அதைவைத்து பின்னூட்டத்தில் ஓர் அரட்டையர் அரங்கம்; இவற்றைத் தவிர்ந்துகொள்ளுங்கள்.

இதையும் தாண்டி இந்த அரட்டையர் அரங்கத்தைத் தொடரவேண்டுமானால் தயவுசெய்து ஒரு வட்ஸ்அப் குறூப்பில் நீங்களும் உங்களுடன் அரட்டை அடிக்கும் ஆண்களும் சேர்ந்து அரட்டையடியுங்கள். வட்ஸ்அப் இல் நீங்கள் ஹறாம் பேசுகிறீர்களா? ஹலால் பேசுகிறீர்களா? என்பதை நீங்களும் அல்லாஹ்வும் பார்த்துக் கொள்ளுங்கள்.

எனது கவலையெல்லாம் இதை நீங்கள் முகநூல் போன்ற பொதுத்தளத்தில் செய்கின்றபோது இதைக்கண்டு ஒவ்வொரு சகோதரியாக இதேவழியைப் பின்தொடர நினைத்தால் நம்சமூகத்தின் நிலை என்ன? என்பதாகும்; எனவே சிந்தியுங்கள்.

பிழையைச் செய்துகொண்டு ஊடகம் என்ற பதத்திற்குள் அபயம்தேடி உங்களை நியாயப்படுத்தாதீர்கள். எல்லாம் வல்ல அல்லாஹ் எனக்கும் உங்களுக்கும் நேரான பாதையில் செல்ல அருள் புரிவானாக. ஆமீன்

No comments:

Post a Comment