வவுனியா – நெடுங்கேணி, சேனப்புலவு பகுதியில் கடந்த மாதம் காணாமல்போன இளைஞனின் சடலம் நேற்று (1) மீட்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சம்பவத்துடன் தொடர்புடையதாக தெரிவித்து கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, கடந்த 17.05.2018 அன்று காலை 10.30 மணியளவில் நெடுங்கேணிக்கு கடைக்கு சென்று வருவதாக தெரிவித்து விட்டு சென்ற இராஜகோபால் கஜமுகன் (22 வயது) வீடு திரும்பாத நிலையில் இது தொடர்பில் அவரது தயார் பொலிஸில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார்.
நெடுங்கேணி பொலிஸ் நிலையத்தில் குறித்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த மாதம் 23ஆம் திகதி இளைஞனின் மோட்டார்சைக்கிள் வீட்டிற்கு அருகிலிருந்து உறவினர்களினால் மீட்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பொலிஸார் மோட்டார் சைக்கிளை நீதிமன்றத்தில் ஒப்படைத்து மேலதிக விசாரணைகளை துரிதப்படுத்தியிருந்தனர். எனினும் நேற்று குறித்த இளைஞனின் சடலம் ஒட்டுசுட்டான், தண்ணிமுறிப்பு காட்டுப் பகுதியிலிருந்து உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடையதாக தெரிவித்து இரு இளைஞர்களை கைது செய்த பொலிஸார் அவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது சந்தேகநபர்களில் ஒருவரின் மனைவியுடன் குறித்த இளைஞன் தொடர்பு வைத்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ள நிலையில், இதனடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் நேற்று மாலை கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களையும் நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய போது எதிர்வரும் 12ஆம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment