மலேசிய விமான விபத்தில் நடைமுறை குளறுபடி - விமான போக்குவரத்து துறை தலைவர் ராஜினாமா - News View

About Us

About Us

Breaking

Tuesday, July 31, 2018

மலேசிய விமான விபத்தில் நடைமுறை குளறுபடி - விமான போக்குவரத்து துறை தலைவர் ராஜினாமா

மாயமான மலேசிய விமான விபத்துக்கு வழக்கமான நடைமுறைகளை கடைபிடிக்காதது தான் காரணம் என அறிக்கை வெளியானதால் விமான போக்குவரத்து துறை தலைவர் ராஜினாமா செய்துள்ளார்.

மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் இருந்து சீன நாட்டின் தலைநகரான பீஜிங் நகருக்கு 8-3-2014 அன்று 227 பயணிகள் மற்றும் விமானிகள் உள்ளிட்ட 12 பணியாளர்களுடன் புறப்பட்டு சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 777 ரக விமானம் (எம்.ஹெச். 370) இந்திய பெருங்கடலின் தெற்கு பகுதியில் விழுந்தது.

இதையடுத்து, அந்த விமானத்தை தேடும் பணியில் விமானங்கள், கப்பல்கள் மற்றும் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் ஆகியவை ஈடுபடுத்தப்பட்டன. ஆஸ்திரேலியக் கடற்படை கப்பல் ‘ஓஷன் ஷீல்ட்’ மற்றும் எச்.எம்.எஸ் ‘எக்கோ’ என்ற இரண்டு கப்பல்கள் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. இதுதவிர மேலும் பல தனியார் நிறுவனங்களும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டன. 

ஆனால், 1046 நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற தேடுதல் வேட்டையில் எந்த பலனும் கிடைக்காத நிலையில் தேடும் பணியை நிறுத்திக் கொள்வதாக மலேசியா, சீனா மற்றும் ஆஸ்திரேலிய அரசுகள் அறிவித்தன. 

கடந்த ஆண்டு ‘ஓசியன் இன்பினிட்டி’ எனும் அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் ‘கண்டுபிடித்தால் பணம் - இல்லாவிட்டால் சேவை இலவசம்’ என்னும் ஒப்பந்த அடிப்படையில் இந்திய பெருங்கடல் பகுதியில் மாயமான அந்த விமானத்தை தேட முன்வந்து விருப்பம் தெரிவித்தது. 

அதன் அடிப்படையில் விமானம் அல்லது விமானத்தின் கருப்பு பெட்டி கிடைத்தால் 70 மில்லியன் அமெரிக்க டாலர் வழங்கப்படும் என மலேசிய முன்னாள் போக்குவரத்து துறை மந்திரி லியோவ் டியாங் ஒப்பந்தம் செய்திருந்தார்.

இதனை அடுத்து, கடந்த ஜனவரி மாதம் முதல் ஆஸ்திரேலிய கடல் எல்லைக்கு உட்பட்ட கடல்பகுதியில் சுமார் 25 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் சோனார் மற்றும் அதிநவின கேமராக்கள் பொருத்தப்பட்ட எட்டு ஆழ்கடல் ட்ரோன்களை பயன்படுத்தி தேடுதல் வேட்டை நடந்து வந்தது.
இதற்கிடையே, மலேசியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மஹாதிர் முகமது தலைமையிலான அரசு அமைந்தது. விமானத்தை தேடுவதற்காக அமெரிக்க நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதையடுத்து மே மாதத்துடன் இந்த தேடுதல் வேட்டை முடிவுக்கு வந்தது. 

ஏதேனும் வலுவான ஆதாரங்கள் கிடைத்தால் தேடல் பணி மீண்டும் தொடங்கப்படும் எனவும் அரசு அறிவித்தது. இந்நிலையில், விமானம் மாயமானது தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட 19 பேர் கொண்ட குழு நேற்று இறுதி அறிக்கையை வெளியிட்டது. விமான விபத்தில் பலியானவர்களின் உறவினர்கள் முன்னிலையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது. 

மலேசிய விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் போதுமான அளவில் வழக்கமான பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாததால் திசைமாறி சென்ற அந்த விமானத்தை கண்டுபிடிக்க இயலாமல் போனதாக மட்டும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

புத்தக வடிவில் வெளியான 400 பக்க அறிக்கையில் விமானம் மாயமானதற்கு உறுதியான காரணம் எதுவும் தெரிவிக்கப்படதாதால் உறவினர்களை இழந்த மக்கள் கொதிப்படைந்தனர். 

விமானத்தை தேட எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், விமானத்தின் பாகங்கள் கிடைத்த நிகழ்வுகள், எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்தை தவிர்ப்பது எப்படி என்ற ஆலோசனைகள் ஆகியவை மட்டுமே அந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ளது என உறவினர்கள் குற்றம்சாட்டினர். 

இந்நிலையில், விமானம் மாயமான சம்பவத்துக்கு தார்மிக பொறுப்பேற்று மலேசியா விமான போக்குவரத்து துறை தலைவர் அசாருதின் அப்துல் ரஹ்மான் தனது பதவியை ராஜினாமா செய்ய முன்வந்துள்ளார்.

ராஜினாமா கடிதத்தை விமான போக்குவரத்து துறை அமைச்சகத்துக்கு அனுப்பி விட்டதாக தெரிவித்த அவர் இன்னும் இரு வாரங்களுக்குள் பதவி விலகுவதாக இன்று (31) குறிப்பிட்டுள்ளார்.

இதனுடன் தொடர்பான செய்தியினை பார்வையிட
https://www.newsview.lk/2018/07/blog-post_648.html

No comments:

Post a Comment