காத்தான்குடியில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு இடம் பெற்ற முதியவரின் கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மூவர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் இடம் பெற்று வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.
காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள காத்தான்குடி ஆறாம் குறிச்சி அலியார் சந்தியிலுள்ள ஹோட்டல் கடையொன்றின் உரிமையாளர் வெள்ளிக்கிழமை (8.6.2018) நள்ளிரவு சுட்டுக் கொல்லப்பட்டார்.
பலணிபாவா என அழைக்கப்படும் 73 வயதுடைய ஆதம்பாவா முகம்மட் இஸ்மாயில் எனும் முதியவரே கொலை செய்யப்பட்டவர் என பொலிசார் குறிப்பிட்டனர்.
மோட்டார் சைக்கிளில் அங்கு வந்த இனம் தெரியாத இருவர் இவர் மீது துப்பாக்கிப்பிரயோகம் செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர். படுகாயமடைந்த மேற்படி முதியவர் ஸ்தளத்திலேயே உயிரிழந்தார்
குறித்த கடையின் உரிமையாளரான மேற்படி முதியவர் பல வருடகாலமாக இந்த ஹோட்டல் கடை நடாத்தி வருகின்றார் என தெரிய வருகின்றது.
இச் சம்பவத்தையடுத்து காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கஸ்த்தூரி ஆராச்சி தலைமையிலான பொலிஸ் குழுவினார் விரைந்து விசாரணைகளில் ஈடுபட்டதுடன் களுவாஞ்சிகுடிக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் அங்கு சென்று விசாரணைகளில் ஈடுட்டார்
பொலிஸ் தடவியல் அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டதுடன் பொலிஸ் மோப்ப நாய் கொண்டு வரப்பட்டு அங்கு பரிசோதனைகள் இடம் பெற்றன. அந்தப் பகுதியிலுள்ள சி.சி.ரி.வி கமராக்களும் பொலிசாரினால் சோதனை செய்யப்பட்டுள்ளன.
இங்கு வருகை தந்த மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் ஏ.சின்னைய்யா விசாரசணைகளை மேற்கொண்டதுடன் கொலை செய்யப்பட்டவரின் சடலத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று பிரேத பரிசோதனை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வரும் பொலிசார் மூன்று பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் கொல்லப்பட்டவரின் குடும்ப உறவினர்கள் மற்றும் அயலவர்கள் என பலரிடம் வாக்கு மூலங்களை பொலிசார் பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து பொலிசார் விசாரணைகளில் ஈடுபட்டு வருவதாகவும் காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
எம்.எஸ்.எம். நூர்தீன்




No comments:
Post a Comment