இம்முறை இலங்கையில் ஜம்இய்யத்துல் உலமாவின் பேச்சை கேட்டு நோன்பு நோற்ற மக்களுக்கு 28 நோன்பே கிடைக்கும் வாய்ப்புள்ளது என்பதை உலமா சபைத் தலைவரின் உரையிலிருந்து புரிய வருவதுடன் இலங்கை முஸ்லிம்களுக்கு பிறை விடயத்தில் மோசமான வழிகாட்டியமைக்காக ஜம்இய்யத்துல் உலமா பகிரங்க தவ்பா செய்ய வேண்டும் என உலமா கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இது பற்றி உலமா கட்சித் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்துள்ளதாவது,
இம்முறை இலங்கை மக்களுக்கு 28 நோன்பே கிடைக்கும் என்பது உலமா சபையின் மனசாட்சிக்கு தெரிந்துள்ளதுடன் அதே வேளை உலமா கட்சியின் கருத்தை ஏற்று மக்கா பிறை அறிவித்தலின் படி 17ந்திகதி நோன்பு நோற்றவர்களுக்கு மாதத்தை பூர்த்தி செய்ய முடியும் இன்ஷால்லாஹ்.
அதேவேளை நோன்பு 28ல் முடிவுற்றால் மறுநாள் பெருநாள் எடுக்கலாம் என்ற உலமா சபைத் தலைவரின் தற்போதைய கருத்து பாராட்டப்பட கூடியது என்பதுடன் கடந்த காலங்களை விட தற்போது ஜம்இய்யாவுக்கு பிறை பற்றிய அறிவில் ஓரளவு முன்னேற்றம் கண்டுள்ளதை இது காட்டுகிறது.
பிறை விடயத்தில் உலமா சபை தவறிழைக்கிறது என்பதை நாம் 10 வருடங்களுக்கு மேலாக கூறியும் ஏற்காத உலமா சபை இன்று தடுமாறிக்கொண்டிருக்கிறது.
ஆனாலும் இம்முறை 28ஆக முற்றுப்பெறும் போது ஒரு நோன்பை கழா செய்ய வேண்டும் என உலமா சபைத் தலைவர் சொல்வது பிழையானதாகும். இவ்வாறு கழா செய்வதற்கு நபியவர்களின் ஹதீஸில் ஆதாரம் இல்லை.
இவ்வாறு இம்முறை ஜமிய்யாவின் பிறை அறிவிப்பு அறிவுக்குறைவினால் ஏற்பட்ட அல்லது வேண்டுமென்றே விடப்பட்ட தவறாகும். இத்தவறுக்கு பாவமன்னிப்பே பரிகாரமாகும்.
அத்துடன் உலமா சபைத் தலைவரின் உரையின் போது ஒவ்வொரு ஊரிலும் தீர்மானிப்பதுதான் நோன்பு மற்றும் பெருநாள் என ஹதீஸ் உள்ளதாக சொல்வதும் பிழையாகும். ஒவ்வொரு ஊரிலும் என ஹதீஸில் வரவில்லை. மாறாக முஸ்லிம்கள் தீர்மானிப்பதே நோன்பு மற்றும் பெருநாள் என்றே ஹதீஸில் உள்ளது. இது உலகலாவிய முஸ்லிம்களை குறிப்பதாகும்.
அந்த வகையில் உலகளாவிய முஸ்லிம் உம்மத்தின் தலைநகரான மக்கா பிறை அறிவித்தலை இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவும் ஏற்குமாயின் பிறை பிரச்சினைகளிலிருந்து பெரும்பாலும் வெளியேற முடியும்.
ஆகவே உலமா சபை தொடர்ந்தும் பிறை விடயத்தில் தவறிழைத்து முழு உலமாக்களுக்கும் அவப்பெயரை ஏற்படுத்தாமல் மக்கா பிறை அறிவிப்பை ஏற்று இம்முறை பெருநாளை அறிவிக்கும்படி உலமா கட்சி கேட்டுக்கொள்கிறது.

No comments:
Post a Comment