நாட்டில் பூதாகாரமாகியுள்ள பாதாள உலக குழுக்கள், போதைவஸ்து வர்த்தகர்கள் சில அரசியல்வாதிகள் பொலிஸாரின் ஒத்துழைப்புடனேயே இடம்பெறுவதாக உயர் கல்வியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இவர்களது ஒத்துழைப்பு இன்றி இத்தகையோர் தொடர்ந்து இயங்க முடியாது என குறிப்பிடட அமைச்சர் பொலிஸாருக்கு சுயாதீனமாக இயங்க இடமுள்ளது எனினும் அவர்கள் தமது கடமையை முறையாக மேற்கொள்கின்றனரா என்பது கேள்விக்குறியே என்றும் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று தெற்காசிய தொழில்நுட்பவியல் மற்றும் மருத்துவ நிறுவகத்தில் பதிவு செய்யப்பட்ட மாணவர்களை சேர். ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்துக்கு உள்ளீர்த்தல் தொடர்பான திருத்த சட்டமூலத்தின் மீதான விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர், நாட்டில் இக்காலத்தில் குற்றச் செயல்கள் அதிகரித்து, போதைப்பொருள் விவகாரம் பூதாகரமாகி நாடு மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
யுத்தத்துக்குப் பின்னர் ஆயுதப் புழக்கம், மற்றும் போதைவஸ்து, பாதுகாப்புக்குழு செயற்பாடுகள், என குற்றச்செயல்கள் பெருமளவில் அதிகரித்துள்ளன. இதில் பாதாள உலகையும் போதைவஸ்து செயற்பாட்டையும் பிரித்துப் பார்க்க முடியாது.
19ஆவது திருத்தத்தின் மூலம் சுயாதீன பொலிஸ் குழு நியமிக்கப்பட்டு அதற்கிணங்க மேற்படி குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த முடியும் என நாம் நம்பினோம். எனினும் பொலிஸார் அவர் தனது கடமையை சரியாகச் செய்கின்றனரா என்பது சந்தேகமாக உள்ளது.
வடக்கில் ஒருபோதும் இல்லாதவாறு போதைவஸ்து அதிகரித்துள்ளது. அங்குள்ள அரசியல்வாதிகளும் இது தொடர்பில் பிரஸ்தாபித்து வருகின்றனர். வடக்கிலுள்ள இளைஞர்கள் சீரழிவதற்கே இது வழிவகுத்துள்ளது. எனினும் இது தொடர்பில் எவரும் கவனம் செலுத்துவதாகத் தெரியவில்லை.
பல்கலைக்கழகங்களில் போதைப் பொருட்கள் புழங்குகின்றன. அண்மையில் ‘வித்தியோதய’ பல்கலைக்கழகத்தில் ஊழியர் ஒருவர் போதைப் பொருளுடன் கையும் களவுடன் பிடிப்பட்டபோதும் அவர் பொலிஸாரினால் அன்றி கலால் அதிகாரிகளால் நீதிமன்றம் கொண்டு செல்லப்பட்டு சட்டவிரோத சாராயம் வைத்திருந்ததாக குற்றம் திரிபுபடுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டள்ளனர்.
இவ்வாறு தான் நிதியமைச்சின் செயலாளருக்கு அறிவித்து தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு்ள்ளன. ஒழுக்கமான மாணவர்கள் பாடசாலைகளில் அதனைக் கடைப்பிடித்து பல்கலைக்கழக பிரவேசிக்கும்போது முழுமையாக மாறிவிடுகின்றனர்.
பல்கலைக்கழகங்களில் பகிடிவதை நடக்கிறது. 280 சம்பவங்களுக்கு மேல் பதிவாகியுள்ளன. பதவியல் இலஞ்சமும் இதில உள்ளடங்குகிறது. அது தொடர்பில் உபவேந்தரோ, பீடாதிபதியோ, மாணவர்களோ பேச முடியாது. அவ்வாறு பிரச்சினையைக் கிளப்பினால் கை, கால்கள் துண்டிக்கப்படும் நிலையே ஏற்படும்.
இது தொடர்பில் பாதிக்கப்பட்டோர்களின் பிள்ளைகள் அழுகையுடன் என்னிடம் முறையிடுகின்றனர். நிலமை மிக மோசமாகி வருகிறது. ஒழுக்கம் மிக அருகி வருகின்றது. இது தொடர்பில் முறையான செயற்திட்டமொன்று அவசியம் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். (ஸ)
லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:
Post a Comment