பிரித்தானியாவில் இஸ்லாத்திற்கெதிரான வெறுப்புணர்வுப் பிரசாரம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 6, 2018

பிரித்தானியாவில் இஸ்லாத்திற்கெதிரான வெறுப்புணர்வுப் பிரசாரம்

பிரித்தானியாவில் 350 இற்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்கள் இஸ்லாத்திற்கெதிரான வெறுப்புணர்வுப் பிரசாரம் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கு ஒத்துழைக்குமாறு பழைமைவாத கட்சிக்கு எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளதாக தி இன்டிபென்டென் தகவல் வெளியிட்டுள்ளது.

பழைமைவாத கட்சியின் வேட்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களால் கடந்த சில வாரங்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் இஸ்லாத்திற்கெதிரான வெறுப்புணர்வுப் பிரசாரம் தொடர்பில் முழுமையான விசாரணையொன்றினை நடத்தி அதனைக் கட்டுப்படுத்துமாறு பிரித்தானிய முஸ்லிம் கவுன்ஸிலினால் எழுத்து மூலக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

வேல்ஸ், பெல்பாஸ்ட், ஸ்கொட்லாந்து மற்றும் மன்செஸ்டர் உள்ளிட்ட ஐக்கிய இராச்சியத்தின் அனைத்துப் பகுதிகளையும் சேர்ந்த ஒரு குடையின் கீழ்வரும் 11 அமைப்புக்கள் கடந்த ஏப்ரல் மாதம் தொடக்கம் இரண்டு மாத காலமாக கட்சியின் அங்கத்தவர்களால் வெளியிடப்பட்ட இஸ்லாத்திற்கெதிரான வெறுப்புணர்வுப் பிரசாரம் தொடர்பான டசின் கணக்கான ஆதாரங்களின் அடிப்படையில் இந்த அவசர விசாரணைக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்த விடயம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என எம்மால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைக்கு ஆதரவளிப்பதற்கு பல பள்ளிவாசல்களின் சபைகள் முன்வந்திருப்பதனை நாம் வரவேற்கின்றோம் என பிரித்தானிய முஸ்லிம் கவுன்ஸிலின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.

ஐக்கிய இராச்சியத்திலுள்ள முஸ்லிம் சமூகத்திற்கு இது எவ்வளவு முக்கியமானது என்பதையும் பிரித்தானிய முஸ்லிம் கவுன்ஸிலுக்கான ஆதரவு விரிவடைவதையும் இது பிரதிபலிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இஸ்லாமிய வெறுப்புணர்வுப் பிரசாரம் தொடர்பில் கட்சியில் பிரச்சினைகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுவதை சாஜித் ஜாவிட் மறுத்துள்ளார்.

முஸ்லிம் கவுன்ஸில், பிரித்தானியாவிலுள்ள முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை எனத் தெரிவித்த உள்நாட்டுச் செயலாளர் அது தீவிரவாதத்துடன் தொடர்புகளைக் கொண்டுள்ளது எனவும் குற்றம்சாட்டினார்.

Vidivelli

No comments:

Post a Comment