ஹரியானா மாநிலத்தில் உள்ள சோனாபட் என்ற ஊரில் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சமூக வலைத்தளமான வாட்ஸ் அப்பில், குழு ஒன்றை ஏற்படுத்தியிருந்தனர். இந்த குரூப்பின் அட்மினாக லவ் ஜோஹர் என்ற 28 வயது இளைஞர் இருந்துவந்தார்.
இந்நிலையில் ஜோஹர் மற்றும் அவரது சகோதரர் அஜய் ஆகிய இருவரும் கடந்த ஞாயிறு அன்று இரவில் உணவகம் ஒன்றிற்கு சென்றுள்ளனர். அப்போது ஜோஹர் குறிப்பிட்ட வாட்ஸ்அப் குழுவில் ஒரு புகைப்படத்தை தற்செயலாக பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் பகிரப்பட்டதால் குரூப்பில் இருந்த தினேஷ் என்பவருக்கும் ஜோஹருக்கும் இடையே வாட்ஸ் அப் குரூப்பில் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக பேசித் தீர்த்துக்கொள்ளலாம் எனக் கூறி தனது வீட்டிற்கு வருமாறு அழைத்ததன் பேரில் ஜோஹரும் அவருடைய 3 சகோதரர்களும் அங்கு சென்றுள்ளனர். அப்போது இருதரப்புக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
தினேஷின், மனைவி உட்பட குடும்பத்தினர் 6 பேர் சேர்ந்து ஜோஹர் மற்றும் அவரது சகோதரர்களை கற்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் கொண்டு கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமுற்ற ஜோஹர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். அவரது 3 சகோதரர்களும் காயம் அடைந்தனர். இதில் ஈடுபட்ட தினேஷின் குடும்பத்தினர் தற்போது தலைமறைவாகிவிட்டனர்.
இதனையடுத்து சம்பவம் தொடர்பாக தினேஷ் குடும்பத்தினர் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் இது தொடர்பாக கூறும்போது, ஆரம்ப கட்ட விசாரணையின் முடிவில் குறிப்பிட்ட சமூகத்தில் அதிகாரம் செலுத்துவது யார் என்ற போட்டியே இந்த கொலைக்கான காரணம் என தெரியவந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.
வாட்ஸ் அப் குரூப்பில் ஏற்பட்ட கருத்து மோதல் கொலையில் முடிந்திருப்பது, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த மாதம் இதே போல மகராஷ்டிராவில் நடைபெற்ற மற்றொரு சம்பவத்தில், கல்லூரி குழுவில் இருந்து தன்னை நீக்கியதற்காக அட்மின் ஒருவரை மூன்று பேர் தாக்கி கொலை செய்தது நினைவு கூறத்தக்கது.
No comments:
Post a Comment