மலேசியாவில் கொல்லப்பட்ட மாடல் அழகி - புதிய பிரதமரிடம் மகளின் மரணத்துக்கு நீதி கேட்கும் தந்தை - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 19, 2018

மலேசியாவில் கொல்லப்பட்ட மாடல் அழகி - புதிய பிரதமரிடம் மகளின் மரணத்துக்கு நீதி கேட்கும் தந்தை

மங்கோலிய மாடல் அழகி அல்டன்ட்டுயா ஷாரிபு கொல்லப்பட்ட விவகாரத்தில் மலேசிய பிரதமர் மஹாதிரை சந்தித்து மறு விசாரணை நடத்த கோரிக்கை விடுக்க இருப்பதாக மாடல் அழகியின் தந்தை கூறியுள்ளார். 

மங்கோலியா நாட்டை சேர்ந்த பிரபல மாடல் அழகியான அல்டன்ட்டுயா ஷாரிபு கடந்த 2006-ம் ஆண்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இரு குழந்தைகளுக்கு தாயான இவருக்கும், மலேசிய முன்னாள் பிரதமர் நசீப் ரசாக்கின் நண்பரும் அரசியல் ஆலோசகருமான அப்துல் ரசாக் பகிண்டாவுக்கும் காதல் இருந்ததாக தகவல் வெளியாகி இருந்தது.

கடந்த 2002-ம் ஆண்டில் பிரான்ஸ் நாட்டில் இருந்து மலேசியாவுக்கு இரு நீர்மூழ்கி கப்பல்களை வாங்கியதில் நடைபெற்ற ஊழலில் அப்துல் ரசாக் பகின்டாவுக்கும், அல்டன்ட்டுயா ஷாரிபுவுக்கும் பங்கு இருந்ததாகவும், இந்த விவகாரம் வெளியே கசியாமல் இருப்பதற்காக அல்டன்ட்டுயா கொல்லப்பட்டதாகவும் அப்போது தகவல்கள் வெளியாகின.

இந்த கொலை தொடர்பாக அப்துல் ரசாக் பகின்டா மீது குற்றம் சாட்டப்பட்டு பின்னர் கடந்த 2008-ம் ஆண்டில் அவர் விடுதலையும் செய்யப்பட்டார். இதையடுத்து, இந்த வழக்கு பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது. 

இந்நிலையில் சமீபத்தில் மலேசியாவில் நடைபெற்ற தேர்தலில் மஹாதிர் முகமது பிரதமராக பதவி ஏற்றார். புதிய பிரதமர் மஹாதிர் முகமதுவுக்கு வாழ்த்து தெரிவித்த மங்கோலியா அதிபர் பட்டுல்கா கல்ட்மா தனது வாழ்த்து செய்தியில், இரு குழந்தைகளுக்கு தாயான மங்கோலியா நாட்டுப் பெண்ணும் மாடல் அழகியுமான அல்டன்ட்டுயா ஷாரிபு மலேசியாவில் கொல்லப்பட்ட விவகாரத்தை உங்களது கவனத்துக்கு கொண்டு வருவதன் மூலம் இதற்கான நீதி கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், கொல்லப்பட்ட மாடல் அழகியின் தந்தை செடவ் ஷாரிபு மலேசியா தலைமை வழக்கறிஞரை மலேசியாவில் இன்று சந்தித்து பேசினார். சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய செடவ் ஷாரிபு, தனது மகளின் கொலை வழக்கை மீண்டும் விசாரித்து உரிய நீதி வழங்க வேண்டும் என பிரதமரை சந்தித்து கோரிக்கை விடுக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment