ஷவ்வால் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் விடயத்தில் இம்முறை ஏற்பட்ட குளறுபடிகளைத் தொடர்ந்து பிறைக் குழுவை மறுசீரமைக்குமாறு பல்வேறு தரப்புகளும் கோரிக்கை விடுத்துள்ளன.
கொழும்பு பெரிய பள்ளிவாசலின் கீழியங்கும் தற்போதுள்ள பிறைக்குழுவை கலைத்துவிட்டு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கீழியங்கும்வகையிலான அரச அங்கீகாரம் பெற்ற புதிய தேசிய பிறைக்குழுவொன்றை தாபிக்குமாறும் குறித்த கோரிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் பிறையை தீர்மானிக்கும் விடயத்தில் கொழும்பு பெரிய பள்ளிவாசல் கொண்டுள்ள ஆதிக்கத்தை குறைக்க வேண்டும் என்றும் இந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேற்படி விடயங்களை உள்ளடக்கி முஸ்லிம் சமய விவகார அமைச்சருக்கு கடந்த மூன்று தினங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட மின்னஞ்சல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. குறித்த மின்னஞ்சல்களை முஸ்லிம் கல்விமான்கள், உயரதிகாரிகள், உலமாக்கள், தனியார் நிறுவனங்களின் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் அனுப்பி வைத்துள்ளனர்.
குறித்த மின்னஞ்சல் கடிதங்களில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாவது,
இலங்கை வாழ் முஸ்லிம்களாகிய நாம் நீண்ட வரலாற்றைக் கொண்டிருக்கின்றோம். இக்காலப்பகுதியில் மிகவும் அமைதியும் சமாதானமும் நிலவிய சூழ்நிலையிலேயே நாம் எமது மார்க்கத்தைப் பின்பற்றி கௌரவமாக வாழ்ந்து வந்திருக்கின்றோம்.
ஆனால் அண்மைக்காலமாக எமது வாழ்வு பல்வேறு சவால்களை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறது. அவற்றை எதிர்கொள்ள முன்னெப்பொழுதையும் விட ஒற்றுமையாக ஓரணியில் திரள வேண்டியவர்களாக நாம் இருக்கின்றோம்.
ஆனால் துரதிஷ்டவசமாக எம்மிடையேயான பிளவுகள் நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணமுள்ளன. அது எமது இருப்பையே ஆட்டம் காணச் செய்து விட முடியும்.
அவ்வகையில் இம்முறை ஷவ்வால் மாதத் தலைப்பிறை தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை இலங்கை முஸ்லிம்களை மென்மேலும் பிளவுபடுத்தி விடக்கூடும். எனவே தலைப்பிறையைத் தீர்மானிப்பதில் கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிரயோகிக்கும் கட்டுமீறியதும் ஜனநாயக விரோதமானதுமான அதிகாரம் குறைக்கப்பட்டு பின்வரும் பொறிமுறையின் மூலம் தீர்மானிக்கப்படுவது பொருத்தமாக அமையும் என்ற ஆலோசனையை தங்களது மேலான கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறோம்.
01. தேசிய பிறைக்குழு
1. அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா – 03 அங்கத்தவர்கள்
2. கொழும்பு பெரிய பள்ளிவாசல் – 01 அங்கத்தவர்
3. தேசிய ஷூரா சபை - 01 அங்கத்தவர்
4. இலங்கை முஸ்லிம் கவுன்சில் - 01 அங்கத்தவர்
5. வானசாஸ்திர விஞ்ஞானிகள் – 04 அங்கத்தவர்கள்
6. முஸ்லிம் சமய, கலாசார விவகாரப் பணிப்பாளர் - 01 அங்கத்தவர்
மொத்தம் 11 அங்கத்தவர்கள்
02. பெரும்பான்மை முடிவின் பிரகாரம் தீர்மானமெடுத்தல் வேண்டும்.
03. தலைப்பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தில் நடாத்தப்படல் வேண்டும்.
04. முஸ்லிம் சமய, கலாசார விவகாரப் பணிப்பாளர் அக்குழுவின் செயலாளராக செயற்பட்டு கூட்ட அறிக்கைகளை அவரே எழுதுதல் வேண்டும்.
05. இறுதியாக ஊடக அறிக்கை ஒன்றை முஸ்லிம் சமய, கலாசார விவகாரப் பணிப்பாளர் வெளியிட வேண்டும்.
06. இதற்கு மேலதிகமாக முஸ்லிம் சமய, கலாசார விவகாரப் பணிப்பாளருக்கு ஆலோசனை வழங்கவென பிரத்தியேகமான ஆலோசனைக்குழுவொன்று திணைக்களத்தில் நியமிக்கப்படவும் வேண்டும்.
07. அவ்வாறே தலைப் பிறையைத் தீர்மானிப்பதில் சார்க் நாடுகளுடனும் சர்வதேசத்துடனும் கலந்துரையாடி பிராந்திய ரீதியிலான முடிவுகளை எட்டவும் ஆவன செய்யப்படல் வேண்டும்.
மேற்படி ஆலோசனைகளைக் கருத்திற்கொண்டு பொருத்தமான தீர்வைப் பெற்றுத் தந்து முஸ்லிம் சமூகத்தின் கௌரவத்தையும் எதிர்காலப் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த ஆவன செய்யுமாறு தங்களை வினயமாக வேண்டிக்கொள்கிறோம்.
மேற்படி மின்னஞ்சல்கள் செயலாளர் - முஸ்லிம் சமய, கலாச்சார அலுவல்கள் மற்றும் தபால், தபால் சேவைகள் அமைச்சு , தலைவர் - கொழும்பு பெரிய பள்ளிவாசல், செயலாளர் - அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, முஸ்லிம் சமய, கலாசார விவகாரப் பணிப்பாளர் ஆகியோருக்கும் இக் கடிதங்கள் பிரதியிடப்பட்டுள்ளன.
இதேவேளை இந்த கோரிக்கைகள் தொடர்பில் முஸ்லிம் சமய விவகார அமைச்சு விரைவில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Vidivelli

No comments:
Post a Comment