பிறை விடயத்தில் மக்களை குழப்ப வேண்டாம் - News View

About Us

About Us

Breaking

Saturday, June 9, 2018

பிறை விடயத்தில் மக்களை குழப்ப வேண்டாம்

வெற்றுக்கண்களால் காண வேண்டும் என்பது பிறை பார்ப்பதற்கான அடிப்படை நிபந்தனைகளில் ஒன்றாகும். அந்த அடிப்படையில் மே மாதம் 16ம் திகதி புதன்கிழமை (ஷஃபான் 29) இலங்கையின் எப்பாகத்திலேனும் ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை தென்படவில்லை. (இவ்வாறு பிறை தென்படாமல் போனதற்கு அப்போது இலங்கையில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக இருக்கலாம்) 

இதனால் அடுத்த நாள் ஷஃபான் 30 ஆகப் பூர்த்தி செய்து வெள்ளிக்கிழமை ரமழானின் முதல் நோன்பை இலங்கையில் ஆரம்பிக்குமாறு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா அறிவித்திருந்தது.

அடுத்த நாட்களில் காலநிலை சீராகிய பின்னர் தோற்றமளித்த சந்திரனின் அளவானது நாம் ஏற்கனவே ஒரு நோன்பை தவற விட்டுள்ளோமோ என்ற சந்தேகத்தை பலருக்கும் ஏற்படுத்தியிருந்தது.

இந்த சந்தேகம் வலுப்பெறவே பொறுப்பு வாய்ந்த நிறுவனம் என்ற வகையில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவும், பிறைக்குழுவும் இவ்விடயம் தொடர்பாக ஆராய்ந்து வழமைக்கு மாறாக இம்முறை ரமழான் பிறை 28 (வியாழக்கிழமை) இலும் பிறையைத் தேடுமாறு மக்களை வேண்டிக் கொண்டுள்ளார்கள்.

அதனடிப்படையில் வியாழக்கிழமை பிறை தென்பட்டால் ரமழானை 28 உடன் முடித்துக் கொண்டு, வெள்ளிக்கிழமை பெருநாளை கொண்டாடலாம் என்றும், விடுபட்ட ஒரு நோன்பை பின்னர் கழா செய்து கொள்ள வேண்டும் என்றும் அவ்வாறு 28ம் நாள் பிறை தென்படாமல் அடுத்த நாள் பிறை தென்பட்டால் பெருநாள் தினமாக சனிக்கிழமையையும் இரண்டாவது நாளும் பிறை தென்படாதவிடத்து ரமழானை முப்பதாக பூர்த்தி செய்து ஞாயிற்றுக்கிழமை பெருநாளை கொண்டா முடியும் என்று அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா மக்களை தெளிவு படுத்தியுள்ளது.

இங்கே கவனிக்க வேண்டிய மற்றொரு விடயம் என்னவென்றால், ஜம்இய்யா எடுத்த இத்தீர்வானது இஜ்திஹாதின் அடிப்படையில் எடுக்கப்பட்ட ஒரு முடிவாகும். அதனடிப்படையில் இந்த தீர்வு பிழையாக இருந்தாலும் இஜ்திஹாதுக்கான நன்மை இருக்கிறது. என்பதை அனைவரும் விளங்கிக்கொள்ள வேண்டும். 

அத்துடன் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வேண்டுமென்றே மக்களை பிழையாக வழி நடாத்தியிருந்தால் அதற்கான பலனையும் பெற்றுக் கொள்பவர்கள் அவர்களே தான், நாங்களல்ல.

இப்படி அத்தனை விடயங்களும் தெளிவாய் இருக்கிறது. எனவேதான் நீங்கள் விரும்பினால் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவை பின்பற்றலாம். விருப்பமில்லாதவர்கள் மாற்றுப்பாதையில் செல்லலாம். ஆனால் தயவு செய்து மக்களை குழப்ப வேண்டாம்.

No comments:

Post a Comment