வெற்றிடமாக இருக்கும் பிரதி சபாநாயகர் பதவிக்கு ஒன்றுக்கு மேற்பட்ட எம்.பிகள் போட்டியிட உள்ள நிலையில் இன்று பாராளுமன்றத்தில் இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட இருப்பதாக அறிய வருகிறது.
இந்த பதவிக்கு சுதந்திரக் கட்சி சார்பில் அங்கஜன் இராமநாதன் எம்.பியும் ஐ.தே.க சார்பில் மொனராகலை பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த குமாரசிறியும் ஒன்றிணைந்த எதிரணி சார்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணாந்து புள்ளேயும் களமிறங்க இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
இரகசிய வாக்கெடுப்பிற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதோடு வாக்குப்பெட்டியும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற படைக்கல சேவிதர் அனில் பராக்கிரம சமரசேகர தெரிவித்தார்.
பாராளுமன்றம் இன்று சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் பிற்பகல் 1.00 மணிக்கு கூடுகிறது. வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தை தொடர்ந்து வெற்றிடமாக இருக்கும் பிரதி சபாநாயகர் பதவிக்கான தெரிவு நடைபெறும்.
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு வழங்கியதையடுத்து பிரதி சபாநாயகராக இருந்த திலங்க சுமதிபால தனது பதவியை இராஜினாமா செய்தார்.இந்த நிலையில் பிரதி சபாநாயகர் பதவிக்கு அங்கஜன் இராமநாதனின் பெயரை ஜனாதிபதி பரிந்துரை செய்திருந்தார்.
இதனை கடந்த மாதம் நடந்த கட்சித் தலைவர் கூட்டத்தில் சபாநாயகர் அறிவித்திருந்தார். இந்த நிலையில் ஐ.தே.க சார்பில் ஆனந்த குமாரசிரியின் பெயரை பிரேரிக்க ஐ.தே.தயாராவதாக அறிய வருகிறது. ஒன்றிணைந்த எதிரணியினர் சு.க 16 பேர் குழுவிலுள்ள சுதர்சினி பெர்னாண்டோ புள்ளேயின் பெயரை முன்மொழிய இருப்பதாக நம்பகரமாக தெரியவருகிறது.
ஐ.தே.கவுக்கும் சு.கவுக்குமிடையிலான ஒப்பந்தத்தின் பிரகாரம் பிரதி சபாநாயகர் பதவி சு.கவுக்கு வழங்கப்பட்டிருந்தது.ஆனால் ஜனாதிபதியின் அனுமதியுடனே ஐ.தே.க சார்பில் வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்படுவதாக பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.
இறுதியாக 2004 ஆம் ஆண்டே இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. சபாநாயகர் பதவிக்காக ஐ.தே.க சார்பில் டபிள்யு.டி.ஜே. செனவிரத்னவும் ஐ.ம.சு.மு சார்பில் டி.யு குணசேகரவும் போட்டியிட்டார்கள்.
இன்றைய வாக்கெடுப்பில் சுதர்சினி பெர்னாண்டோ புள்ளே வெற்றிபெற்றால் பாராளுமன்ற வரலாற்றில் முதலாவது பெண் பிரதி சபாநாயகர் என்ற பெருமையை பெறுவார்.
No comments:
Post a Comment