கடந்த சில நாட்களாக வெள்ளத்தில் மூழ்கியிருந்த பிரதேசங்களில் வெள்ளம் வடிந்தோடியதுடன், பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பி தமது அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர்.
சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளுக்குப் பின்னர், மீட்பு மற்றும் நிவாரண உதவிகள் வழங்குவதில் கவனம் செலுத்திவருவதுடன், பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் மக்கள் தமது இயல்பு வாழ்கையை மேற்கொள்ளும் வண்ணம் பாதுகாப்புப் படையினர் தமது பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, அனர்த்தத்தின் பின்னரான சேவைகளாக பாதிக்கப்பட்ட மக்களின் பிரதான அடிப்படை தேவையான சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுப்பதில் கடற்படையினர் உதவிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், அதிகமான குடிநீர் நிலையங்கள் இவ்வெள்ளப்பெருக்கின்போது பாதிப்புக்குள்ளக்கப்பட்டு குடிப்பதற்கும் மற்றும் பாவனைக்கு உட்படுத்த முடியாத நிலையில் காணப்படுவதால் மக்கள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
ஹொரண, களுத்துறை, அகலவத்த, கம்பஹா, போபிட்டிய, புத்தளம் மற்றும் நாத்தாண்டியா பிரதேசங்களில் சுமார் 250 க்கும் மேற்பட்ட கிணறுகளை சுத்திகரிப்பு உபகரணங்கள் மூலம் கடற்படை நிவாரணக் குழுவினர் சுத்திகரித்துள்ளனர். வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கடுமையான சுகாதார பிரச்சனைகள் ஏற்படும் ஆபத்திலிருந்து பாதுகாக்கும் பொருட்டு இச்சேவைகளை இவர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.
இதன்பிரகாரம் நாத்தாண்டியா பிரதேச மக்களின் நலன் கருதி ஏற்கனேவே நடமாடும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றும் நிறுவப்பட்டுள்ளது.
இதேவேளை, வடக்கு தீபகற்ப நெடுந்தீவு சமூக கலாச்சார நிலையத்தில் கள மருத்துவ சிகிச்சை ஒன்றினை அண்மையில் கடற்படையினர் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment