தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பெற்ற பதவியை வைத்துக் கொண்டு அதற்கெதிராகப் பேசுவதென்பது ஒரு யோக்கியமான அரசியல் அல்ல. கொள்கையை வழிநடத்துகின்றவர்கள் பிழையாக வழிநடத்துகின்றார்கள் என்று விமர்சிப்பவர்களின் மனசாட்சிக்குப்பட்டால் எந்தக் கொள்கையில் அடிப்படையில் நீங்கள் பதவிகளைப் பெற்றீர்களோ அந்தப் பதவிகளைத் துறந்துவிட்டு வெளியில் சென்று விமர்சிப்பதே சிறந்தது என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சருமான கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார்.
இன்றைய தினம் (19) இடம்பெற்ற முன்னாள் விவசாய அமைச்சரின் கடந்த வருட நிதி ஒதுக்கீட்டின் மூலம் குமாரவேலியார் கிராம மீன்பிடிச் சங்கத்திற்கு வழங்கப்பட்ட கதிரைகளைக் கையளிக்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது கிழக்கு மாகாண சபை தொடர்பாக பல்வேறு விதத்தில் பேசப்பட்டு வருகின்றது. கிழக்கு மாகாண சபையில் தமிழர் ஒருவர் முதலமைச்சராக வர வேண்டும் என்றால் தமிழர்கள் அனைவரும் ஒற்றுமைப்பட வேண்டும் என்று சொல்கின்றார்கள். அதில் நியாயம் இருக்கின்றது. ஆனால் தமிழர்கள் மட்டும் ஒற்றுமைப்பட்டு ஒன்றாகச் சேர்ந்து முதலமைச்சர் வர முடியுமா என்றால் அது முடியாது.
ஏனெனில் 37 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு மாகாண சபையில் நாங்கள் ஒரு முதலமைச்சரை உருவாக்க வேண்டும் என்றால் 19 உறுப்பினர்கள் தேவை. ஆனால் 19 தமிழ் உறுப்பினர்களை நாங்கள் கிழக்கில் ஒரு போதும் தெரிவு செய்ய முடியாது. ஆகக் கூடுதலாக வாக்கெடுப்பு மூலம் 12 அல்லது 13 உறுப்பினர்களைத் தெரிவு செய்ய முடியும் போனஸ் இரண்டு கிடைத்தால் ஆக உச்சமாக 15 பேருக்குமேல் தமிழ் உறுப்பினர்களைப் பெற முடியாது.
மிகுதி 05 பேர் தேவை, அதை எவ்வாறு பெற்றுக் கொள்வது யாரிடம் கேட்பது. சிங்கள உறுப்பினர்களிடம் கேட்போமாக இருந்தால் அவர்கள் எங்களுக்கு ஆதரவு தந்து எங்களை முதலமைச்சராக்குவதற்கு ஒருபோதும் தயாராக இல்லை. இம்முறை ஆட்சி மாற்றத்தின் போதும் ஐக்கிய தேசியக் கட்சியின் தயாகமகே அவர்கள் தன்னை முதலமைச்சராக்குமாறே கோரினார்.
கிழக்கு மாகாணத்தைப் பொருத்தமட்டில் தமிழ் பேசும் ஒருவர் தான் முதலமைச்சராக வர வேண்டும். இங்கு தமிழர்களும் முஸ்லீம்களும் கிட்டதட்ட சமமான வீதத்திற்கு வந்துள்ளோம். இன்னும் நாங்கள் கவனமாக இல்லாது விட்டால் இன்னும் குறைந்து போகக் கூடிய சாத்தியக் கூறுகள் உண்டு. அவ்வாறாயின் ஒரு தமிழர் அல்லது முஸ்லீம் தான் முதலமைச்சராக வர வேண்டும்.
கிழக்கு மாகாணத்திலே ஒரு முதலமைச்சர் வருவதென்றால் அவர் தமிழ் சிங்கள, முஸ்லீம் ஒற்றுமையின் மூலம் தான் வர முடியும். ஏதோவொரு இணக்கப்பாட்டின் மூலம் தான் வர முடியும். ஆனால் நாங்கள் புத்திசாலித்தனமாக இருந்தால் எமது உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் அதிகரிக்கலாம். அந்த நேரத்தில் நாங்கள் இராஜதந்திரமாக நடந்து பேரம் பேசுதல் போன்ற நிகழ்ச்சி நிரலுக்குச் செல்லலாம்.
நாங்கள் எது பலமாக நம் மத்தியில் இருக்கின்றதோ அந்தப் பலத்தைக் கூட்டுவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். அதே நேரத்தில் அனைத்து மக்களும் ஒற்றுமையாக இருந்தால் தான் அனைவருக்கும் சமமாக வேலை செய்யக் கூடிய ஒரு முதலமைச்சர் உருவாக முடியும். அந்த இலக்கை நோக்கித் தான் நாங்கள் செல்ல வேண்டும்.
முஸ்லீம்கள் எவ்வாறு அரசியலுக்குள் சேர்ந்து கொண்டு தங்கள் மக்களை வளப்படுத்துகின்றார்களோ அதே போன்று நாங்கள் அரசியலமைப்புச் சட்டத்தை பெற்றுக் கொண்டு எங்களுடைய உரிமையையும் அபிவிருத்தியையும் பெறக்கூடிய விதமான சமாந்தரமான செயற்பாட்டிலே தற்போது நாங்கள் சென்று கொண்டிருக்கின்றோம்.
மத்தியில் பெரிய குழப்பம் எல்லாம் ஏற்படுகின்றது. ஆனால் எங்களுக்கு ஒரு நம்பிக்கை இருக்கின்றது. இந்த நாட்டினுடைய பொருளதாரம் முன்னேற வேண்டுமாக இருந்தால் இங்கிருக்கின்ற இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். அதற்கு அரசியலமைப்பச் சட்டம் உருவாக்கப்பட வேண்டும். உருவாக்கப்படுகின்ற அரசியலமைப்புச் சட்டம் காலாகாலமாகப் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற தமிழ் மக்களைத் திருப்திப்படுத்தக் கூடியதாக இருக்க வேண்டும்.
அவ்வாறானதொரு அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்காவிட்டால் இந்த நாடு எக்காலத்திலும் பொருளாதாரத்தில் முன்னேறவே முடியாது. என்பதை இந்த நாட்டின் அரசியல் தலைவர்கள் உணர்ந்திருக்கின்றார்கள். இவர்களை உணரச் செய்திருக்கின்றார் எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயா அவர்கள்.
நாங்கள் நல்லதையே சிந்தித்துக் கொண்டிருக்கின்றோம். இந்த நாட்டு மக்கள் அனைவரும் சுயமரியாதையுடன் வாழக் கூடியதான அரசியலமைப்புச் சட்டம் வருகின்ற போது நாங்களும் எமது பிரதேசத்தை வளம்கொழிக்கச் செய்யலாம்.
ஆனால் தற்போது என்ன நடைபெறுகின்றது. எங்களுடைய பக்கத்தில் இருந்து எங்களுக்கே எதிரான கருத்துக்களை எங்களது உறுப்பினர்கள் சிலர் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். இதன் காரணமாக நாங்கள் பலவீனப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். ஒரு அணியாக நாங்கள் வேலை செய்கின்ற போது அந்த அணிக்குத் தோல்வி வரக்கூடிய விதத்திலே சேம்சைட் கோல் போடுகின்ற வேலையை மனச்சாட்சி உள்ள உறுப்பினர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பெற்ற பதவியை வைத்துக் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராகப் பேசுவதென்பது ஒரு யோக்கியமான அரசியல் அல்ல. அது அனைத்து மக்களுக்கும் தெரியும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தேர்தல் கேட்டமையால் தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்கள்.
தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சரியாக நடக்கவில்லை என்று நினைத்தால் யோக்கியமான அரசியலாளர்கள் என்றால் இந்தப் பதவியை துறந்துவிட்டு வெளியில் சென்று விமர்சிக்க வேண்டும். ஆனால் அந்தப் பதவியை வைத்துக் கொண்டு எதிராகப் பேசுவது சிறந்த அரசியலுக்கு அழகல்ல.
ஒரு கொள்கையின் அடிப்படையில் வாக்குகளைப் பெற்று மக்கள் தலைவர்களாக வந்த பிறகு அந்தக் கொள்கையை வழிநடத்துகின்றவர்கள் பிழையாக வழிநடத்துகின்றார்கள் என்று விமர்சிப்பவர்களின் மனச்சாட்சிக்குப் பட்டால் எந்தக் கொள்கையில் அடிப்படையில் நீங்கள் பதவிகளைப் பெற்றீர்களோ அந்தப் பதவிகளைத் துறந்துவிட்டு வெளியில் சென்று மக்களுக்குச் சொல்லி மக்களின் கருத்துக்களை அடுத்த தேர்தலில் பெற்றுக் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிழை விட்டது என்பதற்கான பரிசை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு கொடுப்பதற்கு முயற்சிக்க வேண்டுமே தவிர தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உள்ளேயே இருந்து கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூலம் பெறப்பட்ட அந்தப் பதவியையே பயன்படுத்திக் கொண்டு ஒரு பக்கத்தில் நின்று சேம்சைட் கோல் போடுகின்ற விளையாட்டினை எந்த யோக்கியம் மிக்க அரசியல்வாதியும் ஈடுபடக் கூடாது என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment