பிரதி சபாநாயகர் பதவிக்கு பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பில் 97 வாக்குகளைப் பெற்று ஐக்கிய தேசியக் கட்சியின் மொனராகலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த குமாரசிறி பிரதி சபாநாயகராகத் தெரிவு செய்யப்பட்டார்.
இவருக்கு எதிராகப் போட்டியிட்ட ஐ.ம.சு.முவின் பாராளுமன்ற உறுப்பினர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளேக்கு 53 வாக்குகள் மாத்திரமே கிடைத்தன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பியினர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாது புறக்கணித்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி உட்பட 73 பேர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.
இரகசிய வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்ட ஆனந்த குமாரசிறி, இலங்கை பாராளுமன்றத்தின் 29 ஆவது பிரதி சபாநாயகராவார்.
பிரதி சபாநாயகராகவிருந்த திலங்க சுமதிபால இராஜினாமா செய்த நிலையில் புதிய பிரதி சபாநாயகர் தெரிவு நேற்று இடம்பெற்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் ஆனந்த குமாரசிறியின் பெயர் பிரேரிக்கப்பட்டது. அதேபோல ஐ.ம.சு.மு சார்பில் சுதர்ஷினி பெர்னாண் டோ புள்ளேயின் பெயரும் பிரேரிக்கப்பட்டது.
இருவருடைய பெயர்கள் முன்மொழியப்பட்டதால் இரகசிய வாக்கெடுப்பு நடத்தத் தீர்மானிக்கப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன, ஆனந்த குமாரசிறி எம்பியின் பெயரை பிரதி சபாநாயகர் பதவிக்கு முன்மொழிய, நளின் பண்டார ஜயமகா எம்பி அதனை வழிமொழிந்தார்.
அதேநேரம், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் சுதர்ஷினி பெர்னான்டோபுள்ளேயின் பெயரை முன்மொழிவதாக எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்தார். பிரதி சபாநாயகர் பதவி ஐ.ம.சு.முவுக்கே வழங்கப்பட வேண்டும் என்பதால் சுதர்ஷினி பெர்னான்டோபுள்ளேயின் பெயரை முன்மொழிவதாகக் கூறினார். இதனை வாசுதேவ நாணயக்கார எம்பி வழிமொழிந்தார்.
இதன் பின்னர் எழுந்த எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், பிரதி சபாநாயகர் பதவிக்கு சுதந்திரக் கட்சியின் சார்பில் ஒருவரையே தெரிவுசெய்ய வேண்டும். சகலருடைய கருத்தையும் கவனத்தில் கொண்டு அவரை போட்டியின்றித் தெரிவுசெய்வோம் என்றார்.
எனினும், பாராளுமன்றத்தின் முக்கிய இரண்டு பதவிகளும் ஆளும் தரப்பிற்கு வழங்கப்பட வேண்டும் என இணங்கப்பட்டது. ஆளும் கட்சியின் சார்பிலேயே பிரதி சபாநாயகர் பதவி முன்னர் வழங்கப்பட்டது. இவ்வாறான நிலையில் பின்வரிசை உறுப்பினர் ஒருவரின் பெயரை ஆளும் கட்சியின் சார்பில் முன்மொழிந்துள்ளோம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறினார்.
இதனைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த சபாநாயகர் கரு ஜயசூரிய, பிரதி சபாநாயகர் பதவிக்கு இருவருடைய பெயர்கள் முன்மொழியப்பட்டிருப்பதால் இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படும் என்றார். இதற்கமைய பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சபை நடுவில் வைக்கப்படும் வாக்குப் பெட்டியில் தமது வாக்குகளை இடவேண்டும். வாக்குச் சீட்டில் தாம் தெரிவு செய்யும் நபரின் பெயரைக் குறிப்பிட்டு, கையெழுத்திட வேண்டும். கையெழுத்திட்டாலே அந்த வாக்குச் செல்லுபடியாகும் என்றார்.
வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு முன்னர் கோரம் மணி ஒலிக்கப்பட்டது. இதன்போது சபை நடுவில் இரண்டு மேசைகள் வைக்கப்பட்டு ஒன்றில் வாக்குப் பெட்டியும், மற்றைய மேசையைச் சுற்றி மறைப்பும் போடப்பட்டது. பிற்பகல் 3 மணிக்கு வாக்கெடுப்பு ஆரம்பமானது. வாக்கெடுப்புக்கான ஆயத்தங்கள் நடைபெற்றபோதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களும், ஜே.வி.பியின் உறுப்பினர்களும் சபையிலிருந்து வெளியேறிச் சென்றனர்.
ஒவ்வொருவரின் பெயரை அழைக்க உறுப்பினர்கள் வந்து தமது வாக்குகளை அளித்தனர். முதலில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது வாக்கை செலுத்தினார். அதன் பின்னர் ஒவ்வொரு எம்பிக்களும் தமது பெயர்களை அழைக்கும் போது சபை நடுவில் வந்து தமது வாக்குகளைச் செலுத்திச் சென்றனர்.
ஆளும் தரப்பு எம்பிக்களின் பெயர்கள் அழைக்கும் போது எதிர்த்தரப்பிலிருந்த ஒன்றிணைந்த எதிரக்கட்சியினர் மற்றும் சு.கவின் 16 பேர் கொண்ட குழுவின் உறுப்பினர்கள் கிண்டலடித்து கேலிசெய்துகொண்டிருந்தனர். பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வாக்களிக்க வரும்போது, 'லெப்ட் ரைட்' லெப்ட் ரைட் என அவர்கள் கூச்சலிட்டனர். பிரதி சபாநாயகர் பதவிக்குப் போட்டியிட்ட ஆனந்த குமாரசிறி வாக்களிக்கச் செல்லும்போது ஆளும் கட்சி உறுப்பினர்கள் சகலரும் மேசையில் தட்டி தமது மகிழ்ச்சியைத் தெரியப்படுத்தினர்.
பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமான வாக்கெடுப்பு பிற்பகல் 4.20 வரை நடைபெற்றது. வாக்கெடுப்பு முடியும் முன்னரே ஆளும் கட்சி உறுப்பினர்கள் ஆனந்த குமாரசிறி எம்பியைத் தேடிச் சென்று தமது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மற்றும் ஜே.வி.பி உட்பட 73 பேர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.
இதில் சுதந்திரக் கட்சியின் முக்கிய அமைச்சர்களான நிமல் சிறிபால.டி.சில்வா, துமிந்த திசாநாயக்க உள்ளிட்டவர்களும் அடங்குவதுடன், எதிர்க்கட்சிக்குச் சென்ற சுசில் பிரேமஜயந்த போன்றவர்களும் உள்ளனர். ஒன்றிணைந்த எதிர்க்கட்சியைச் சேர்ந்த பலர் வாக்கெடுப்புக்கு முன்னர் சபையில் இருந்தபோதும் வாக்கெடுப்பின்போது சிலர் கலந்துகொள்ளவில்லை.
பிரசன்ன ரணதுங்க, ரோஹித்த அபேகுணவர்த்தன உள்ளிட்டவர்கள் வாக்கெடுப்பின்போது சபைக்கு வரவில்லை. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று பாராளுமன்ற வளாகத்துக்கு வந்தபோதும் சபைக்குள் வரவில்லை. ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த எவரும் நேற்று வாக்கெடுப்புக்கு சமுகமளிக்கவில்லை. வாக்கெடுப்புக்கான பெயர் அழைக்கப்பட்டபோது சபையில் இல்லாத சந்திரசிறி கஜதீர எம்பி இறுதியில் வந்து தனது வாக்கை அளித்தார்.
வாக்கெடுப்பு முடிந்ததாக சபாநாயகர் அறிவித்தது, சபை உதவியாளர்கள் வாக்குப் பெட்டியை பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளித்தனர். வாக்குப் பெட்டி திறக்கப்பட்டு வாக்குச் சீட்டுக்கள் அதிலிருந்து எடுக்கப்பட்டன. வாக்குச் சீட்டுக்கள் மூன்று பெட்டிகளுக்குள் வேறாக்கப்பட்டன.
வாக்குச் சீட்டுக்கள் முழுவதும் வாக்குப் பெட்டியிலிருந்து எடுக்கப்பட்ட பின்னர் வெற்று வாக்குப் பெட்டி சகல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் காண்பிக்கப்பட்டது.
பாராளுமன்ற செயலாளர், பிரதி செயலாளர் மற்றும் உதவிச் செயலாளர் ஆகியோர் வாக்குகளை ஒவ்வொன்றாக சரிபார்த்து எண்ணிக் கொண்டிருந்தபோது, ஆளும் கட்சி உறுப்பினர்கள் ஆனந்த குமாரசிறி எம்பியின் ஆசனத்தைச் சுற்றி நின்று மகிழ்ச்சியுடன் கதைத்துக் கொண்டிருந்ததுடன், பல எம்பிக்கள் அவருடன் நின்று கையடக்கத் தொலைபேசிகளில் செல்பி படம் பிடித்துக்கொண்டனர்.
வாக்கு எண்ணிக்கை முடிவடைந்ததும் முடிவுகள் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது. முடிவுகளை அறிவிக்க முன்னர் சகல உறுப்பினர்களையும் தமது ஆசனங்களில் அமருமாறு சபாநாயகர் அறிவித்தார். அதன் பின்னர் முடிவுகளை அறிவித்த சபாநாயகர், ஆனந்த குமாரசிறி எம்பிக்கு 97 வாக்குகளும், சுதர்ஷினி பெர்னான்டோபுள்ளே எம்பிக்கு 53 வாக்குகளும் அளிக்கப்பட்டிருப்பதுடன், ஒரு வாக்கு செல்லுபடியற்றவாக்காகும் என்றார்.
சபாநாயகர் முடிவை அறிவித்ததும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் மேசையில் தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மீண்டும் ஆனந்த குமாரசிறி எம்பியை தேடிச் சென்று கைகுலுக்கி வாழ்த்துத் தெரிவித்தனர். இரகசிய வாக்கெடுப்பின் மூலம் ஆனந்த குமாரசிறி எம்பி பிரதி சபாநாயகராகத் தெரிவுசெய்யப்பட்டதாக சபைக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்த சபாநாயகர் கரு ஜயசூரிய, புதிய சபாநாயகருக்கு வாழ்த்துத் தெரிவித்தார். 1996 ஆம் ஆண்டு முதல் பாராளுமன்ற உறுப்பினராகவிருக்கும் ஆனந்த குமாரசிறி எம்பி, அனுபவம் வாய்ந்த அரசியல்வாதி என்பதுடன், மாகாண சபையிலும் சேவையாற்றிய அனுபவம் பெற்றவர்.
இவர் பிரதி சாபாநாயகராக தனது பணிகளை சிறப்பாக ஆற்றுவார் என்ற எதிர்பார்ப்பு இருப்பதாகவும் கூறினார். அத்துடன், இந்தப் பதவிக்குப் போட்டியிட்ட சுதர்ஷினி பெர்னான்டோபுள்ளே எம்பிக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்த சபாநாயகர், முன்னாள் பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபாலவின் சேவையையும் பாராட்டியிருந்தார்.
இதன் பின்னர் கருத்துத் தெரிவித்த புதிய பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி, தனக்கு வாக்களித்த சகலருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதுடன், இந்த நிலைக்குத் தன்னை கொண்டுவந்த மொனராகலை மாவட்ட மக்களுக்கும் நன்றி கூறினார். அது மாத்திரமன்றி பிரதி சபாநாயகர் பொறுப்பை சரியான முறையில் நிறைவேற்றுவதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.
ஆனந்த குமாரசிறியின் பின்னர் கருத்துத் தெரிவித்த சுதர்ஷினி பெர்னான்டேபுள்ளே தனக்கு ஆதரவளித்தவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார். அவரைத் தொடர்ந்து முன்னாள் பிரதி சபாநாயகரான திலங்க சுமதிபாலவும் கருத்துத் தெரிவித்தார். தான் பணியாற்றிய கடந்த மூன்றரை வருடகாலத்தில் ஒத்துழைப்பு வழங்கிய சகலருக்கும் நன்றி தெரிவித்ததுடன், சபாநாயகருக்கு விசேடமான நன்றியைத் தெரிவித்தார்.
இவர்களைத் தொடர்ந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கருத்துத் தெரிவித்தார். 1977ஆம் ஆண்டு தான் பாராளுமன்றத்துக்கு நுழையும்போது ஆனந்த குமாரசிறியின் தந்தையார் பாராளுமன்ற உறுப்பினராக இருந்ததாகச் சுட்டிக்காட்டிய அவர், அவருடைய தந்தையின் இழப்பைத் தொடர்ந்து ஆனந்த குமாரசிறி பாராளுமன்றத்துக்குத் தெரிவுசெய்யப்பட்டதாகக் கூறினார். பாராளுமன்றத்தில் மாத்திரமன்றி மாகாண சபையிலும் மக்களுக்கு சேவையாற்றிய அனுபவம் வாய்ந்த ஆனந்தகுமாரசிறி எம்பி, பிரதி சபாநாயகர் என்ற ரீதியல் கட்சி பேதமின்றி செயற்படுவார் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் கூறினார்.
ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்
No comments:
Post a Comment