தமிழக அகதி முகாமில் இருந்து படகு மூலம் தலைமன்னார் கடற்பகுதியூடாக மன்னாரை வந்தடைந்த இரு சிறுவர்கள் உட்பட 6 பேரையும் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா நேற்று வியாழக்கிழமை (31) மாலை உத்தரவிட்டார்.
தமிழக அகதி முகாமில் இருந்து மூன்று ஆண்கள், ஒரு பெண் மற்றும் இரு சிறுவர்கள் உள்ளிட்ட 6 பேர் நேற்று முன்தினம் புதன் கிழமை (30) இரவு தமிழக அகதி முகாமில் இருந்து படகு மூலம் இலங்கையின் தலைமன்னார் பகுதியை நோக்கி வருகை தந்துள்ளனர்.
வருகை தந்த குறித்த 6 பேரும் தலைமன்னார் கடற்பரப்பில் மண் திட்டியில் படகோட்டியினால் இறக்கி விடப்பட்ட நிலையில் கடல் பாதுகாப்பில் ஈடுபட்ட கடற்டையினர் குறித்த 6 பேரையும் மீட்டு தலைமன்னார் கடற்படையினரிடம் ஒப்படைத்தனர்.
தலைமன்னார் கடற்படையினர் மருத்துவ பரிசோதனை மற்றும் விசாரணைகளின் பின்னர் தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
தலைமன்னார் பொலிஸார் விசாரணைகளின் பின்னர் நேற்று (31) வியாழக்கிழமை மாலை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இதன்போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த பெண் மற்றும் மூன்று ஆண்கள் உள்ளடங்களாக 4 பேரையும் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதோடு, குறித்த இரு சிறுவர்களையும் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை சிறுவர் காப்பகத்தில் அனுமதிக்குமாறும் உத்தரவிட்டார்.
கைது செய்யப்பட்டவர்கள் பேசாலை, அடம்பன் மற்றும் திருகோணமலையைச் சேர்ந்தவர்கள் என தெரிய வருகின்றது.
No comments:
Post a Comment