கடந்த சில நாட்களுக்கு முன்னர், புனித ரமழானுடைய நேரத்தில் தொழுகையில் ஈடுபட்ட கல்குடா பகுதி ஏகத்துவவாதிகள் மீது சிலர் தாக்குதல் நடத்திய செய்தி நாமெல்லாம் அறிந்து கொண்ட ஒன்றுதான். இந்த தாக்குதல் தொடர்பான சில சட்ட ரீதியிலான விளக்கங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
அந்த வகையில், இலங்கை பிரஜைகள் தாங்கள் விரும்பிய மதத்தையோ, நம்பிக்கையையோ தனியாகவோ குழுவாகவோ இரகசியமாகவோ பகிரங்கமாகவோ வழிபாட்டிலும் அனுசரிப்பிலும் சாதனையிலும் போதனையிலும் வெளிக்காட்டும் உரிமையை எமது அரசியலமைப்பின் உறுப்புறைகள் 10 மற்றும் 14(E)யின் மூலம் வழங்கப்பட்டிருக்கிறது.
இந்த அடிப்படை உரிமை மீது கைவைக்கும் அதிகாரத்தை தப்லீக் ஜமாஅத்தினருக்கு வழங்கியது யார்?
அரசியலமைப்பின் 15(7) படி இலங்கை நாட்டின் ஜனாதிபதி அவரது அதிகாரத்தைப் பயன்படுத்தி தேசிய பாதுகாப்பு, பொதுமக்கள் ஒழுங்கு, பொதுமக்கள் சுகாதாரம், ஒழுக்கத்தை பாதுகாத்தல் நலன்கருதி அல்லது மற்றவர்களின் உரிமைகள், சுதந்திரங்கள் என்பவற்றுக்கு முறையான அங்கிகாரத்தை பெற்றுக்கொடுக்கும் நோக்கத்துக்காக அவசரகால சட்டத்தை பிரகடனப்படுத்தி அதனூடாக இப்படியான கட்டுப்பாடுகளை (இரு தராப்பாரது சட்டத்திற்கு உட்பட்ட உரிமைகளில் கூட கைவைக்கும்) விதிக்கக்கூடியதான அவருக்கே பிரத்தியேகமாக உரித்தான இந்த உரிமையை கையிலெடுத்ததுமில்லாமல் தாக்குதலையும் மேற்கொண்டிருக்கிறார் இந்த தாதாவும் அவரின் குழுவும்.
இதே நேரம், அநாதைப் பிள்ளைகளுக்கான மத்ரஸாவை மாத்திரமே நடத்த வேண்டும் அந்த இடத்தில் தொழுகை நடத்தவோ, ஜும்மா நடத்தவோ கூடாது என்ற வகையிலான ஓர் ஒப்பந்தத்தை இரு தரப்புக்குமிடையில் செய்து வைப்பதற்கு பொலிசார் முனைந்ததாக கூறப்படுகிறது. பொலிசாருக்கு மேற்கண்டவாறு எந்தவொரு ஒப்பந்தத்தையும் இரு தரப்புக்கு மத்தியிலும் செய்து வைப்பதற்கு எந்த அனுமதியும் சட்ட ரீதியாக கிடையாது என்பதை பொலிசாரும் பொது மக்களும் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்.
வெளியூரிலிருந்து வந்தவர்களே தாக்குதலை மேற்கொண்டதாக தெரிய வருகிறத்து வந்தவர்கள் தாங்களாக சட்டவிரோதமான செயல்பாடுகளுக்கான கூட்டத்தை கூட்டினாலோ, அத்துமீறி ஒரு மதத்தலத்தினுள் நுழைந்தாலோ, அங்கிருப்பவர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்தாலோ, மேலும் அங்கிருப்பவர்களை தூற்றுதல், தாக்குதல், காயமேற்படுத்துதல் மற்றும் பொருட்களுக்கு சேதமேற்படுத்துதல் போன்றவற்றுக்கு எதிராக பொலிசாரிடம் முறைபாடு செய்வதற்கு ஊர் பொதுமக்களுக்கும், முக்கியஸ்தர்களுக்கும் உரிமை உள்ளது.
இதனை விடுத்து தொழுகை நடத்துபவர்களை தாக்குவதற்கோ, அவர்களுக்கு எதிரான சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதற்கோ யாருக்கும் இலங்கை அரசியல் யாப்பு அனுமதி வழங்க வில்லை என்பதை கல்குடா வாழ் ஏகத்துவ வாதிகள் மாத்திரமன்றி அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
கல்குடா வாழ் ஏகத்துவவாதிகளே! மேற்கூறிய வகையில் இதுவரை நீங்கள் உங்களுக்கு ஏற்பட்ட அநீதிக்கு எதிராக பொலிசில் முறைபாடு செய்திருக்கா விட்டால் இப்போதும் நீங்கள் இந்த வகையில் முறைபாடு செய்ய சட்டம் அனுமதிக்கிறது. (காலம் தாழ்ந்து விட்டது என்பது தடையாகாது)
இந்த இடத்தில் மார்க்க ரீதியாகவும், வாழ்வியல் யதார்த்தத்திலும் ஓர் விஷயத்தை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
கல்குடா பகுதி ஏகத்துவ வாதிகளுக்கு எதிரான தாக்குதலில் இரு கொள்கைக்குமுள்ள வித்தியாசம் என்ன தெரியுமா?
தாக்குதலுக்குள்ளானவர்களிடமும், அவர்களின் பிள்ளைகள், மாணவர்களிடமும் ஒரு முஸ்லிம் அடையாளங்களில் ஒன்று என்னவென்று கேட்டால் தயக்கமின்றி தொழுகை என அழகாக பதிலளிப்பார்கள்.
இதே கேள்வியை தாக்குதல் நடத்தியவர்களிடமும், அவர்களின் பிள்ளைகள், மற்றும் மாணவர்களிடமும் கேட்டால் உடனடியாக தொப்பியும், ஜுப்பாவும் என பதிலளிப்பார்கள்.
இந்த நிலையில் இருந்து கொண்டு மார்க்கம் காட்டாத ஒன்றுக்காக மார்க்கத்தை பேண நினைக்கும் மக்களை தாக்குதல் நடத்தி அழிக்க நினைக்கும் இது போன்றவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்ட உரிய தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட்டால் மாத்திரமே எதிர்காலத்தில் இதுபோன்ற நிலைகள் ஏற்படாமல் முஸ்லிம் சமுதாயம் சீராக பயணிக்க முடியும் என்பதையும் நாம் உணர கடமைப்பட்டுள்ளோம்.
சட்டத்தரணி சறூக் - கொழும்பு

No comments:
Post a Comment