இலங்கையின் உணவு உற்பத்தியில் மூன்றில் ஒரு பகுதியையும் விட அதிகமான பங்கு விலங்குகளினால் நாசமாக்கப்படுகிறது. பௌத்த நாடென்பதால் இந்த விலங்குகள் மீது கைவைப்பதற்கு மக்கள் தயங்குகிறார்கள். இந்தப் புண்ணியத்தை இன்னும் எவ்வளவு காலத்துக்கு நம்மால் செய்ய முடியும் என ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன கேள்வி எழுப்பினார்.
உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு கேகாலையில் நடைபெற்ற வைபவத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு கேள்வி எழுப்பினார். விவசாயத்தில் முன்னேறிய நாடுகள் இது தொடர்பில் கையாளும் முறைகளை நாங்களும் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.
ஜனாதிபதி அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், இலங்கையின் உணவுற்பத்தியில் மூன்றிலொரு பகுதியையும் விட அதிகமானவற்றை விலங்குகள் நாசம் செய்கின்றன. எனது நண்பரான அறிவியலாளரொருவர், உற்பத்தி செய்கின்றவற்றை விலங்குகளுக்கு உண்ணக் கொடுத்து விட்டு மக்கள் பட்டினியில் வாடும் ஒரே நாடு இலங்கை தான் என்று என்னிடம் கூறினார்.
குரங்குகள், காட்டுப் பன்றிகள் என பல விலங்குகள் இந்த நாசத்தைப் புரிகின்றன. குரங்குகள் தென்னை மரத்தில் ஏறினால் தனக்குத் தேவையானதை மட்டும் பறிக்காமல் ஏனையவைகளையும் பறித்து வீசிவிடுகிறது. இலங்கையில் பத்து இலட்சத்துக்கும் அதிகமான குரங்குகள் இருக்கின்றன. ஒரு குரங்கு ஒரு மரத்துக்குச் செய்யும் நாசம் எவ்வளவு அதிகமானது ?
நெற்பயிர்ச் செய்கைக்கு மயில்களினால் விளைவிக்கப்படும் நாசம் அபரிமிதமானது. ஆனாலும் மயில் தெய்வத்தின் வாகனம் என்பதால் அதற்கு எதிராக யாரும் நடவடிக்கை எடுப்பதில்லை. இவை வயல்வெளியில் நுழைந்தால் ஓரிரண்டு புசல் நெல்லையாவது வயிற்றில் நிரப்பிக் கொண்டு தான் பறக்கின்றன. இவற்றுக்கெதிராக உலகில் விவசாயத்தில் முன்னேறிய நாடுகள் மேற்கொள்கின்ற நடவடிக்கைகளை நாங்களும் மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
மீள்பார்வை செய்திகள்

No comments:
Post a Comment