மத்திய வங்கி பிணைமுறி விவகாரத்தை அடிப்படையாகக் கொண்டு ஜனாதிபதிக்கும் பிரதமருக்குமிடையிலான பனிப்போர் தீவிரமடைந்துள்ளது. இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் அடுத்த தலைவர் என அக்கட்சியினர் எதிர்பார்க்கும் அக்கட்சியின் பிரதித் தலைவர் ஒருவரும் அர்ஜுன் அலோசியசிடமிருந்து பணம் பெற்றுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் கனக ஹேரத் தெரிவித்தார்.
கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று பொரளை என்.எம். பெரேரா நிலையத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தையும் மறந்து செயற்படுகிறது. அதற்குப் பகரமாக நாட்டு வளங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்து ஆட்சியை நடத்துவதற்கும் எதிர்பார்க்கிறது. அதனால்தான் வெளிநாடுகளுடன் பல்வேறு உடன்படிக்கைகளை அடிக்கடி மேற்கொண்டு வருகிறது.
எட்கா உடன்படிக்கையை கொண்டு வருவதற்கு எதிர்பார்த்தது. அதற்கு நாடு தழுவிய ரீதியில் எதிர்ப்பலை கிளம்பியது. அதனால் அதனை கிடப்பில் போட்டுவிட்டு சிங்கப்பூருடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை செய்துகொண்டுள்ளது. அதன் மூலம் வெளிநாட்டு சேவையாளர்கள் எமது நாட்டை ஆட்கொள்வதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை பெலியத்தவிலிருந்து கதிர்காமம் வரையிலான ரயில் பாதையை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதற்கான வேலைத்திட்டம் ஒன்றும் இடம்பெற்று வருதாக அறியக்கிடைத்துள்ளது. எனவே எதிர்காலத்தில் அந்த ரயில் பாதையூடாக பயணிப்பதற்கு மேலதிக கட்டணம் செலுத்த வேண்டிவரும்.
மேலும் அரசாங்கம் இராணுவத்தினர் மீதான பழிவாங்கலை மீண்டும் ஆரம்பித்துள்ளது.கடந்த காலங்களில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜின் கொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கடற்படை அதிகாரிகள் சிலரை கைதுசெய்திருந்தனர்.எனினும் நீதிமன்றினூடாக அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். எனினும் மீண்டும் அவ்வதிகாரிகளை சிறையில் அடைப்பதற்கு சட்டமா அதிபர் நடவடிக்கை எடுத்து வருகிறார்
அது தொடர்பிலான வழக்கு எதிர்வரும் 14 ஆம் திகதி விசாரணைக்கு வரவுள்ளது. இவ்வாறான நிலையில் அந்த அதிகாரிகளுக்கு ஆதரவு தெரிவித்து எதிர்வரும் சனிக்கிழமை பி.ப. 2 மணிக்கு ஆர்ப்பாட்டம் செய்யவுள்ளோம்.
மேலும் மத்திய வங்கி மோசடி விவகாரத்தினால் பாராளுமன்ற உறுப்பினர்கள் தம்மை இனங்காட்டிக்கொள்வதற்கு நாணப்பட வேண்டிய விடயமாக மாறியுள்ளது. அத்துடன் ஜனாதிபதிக்கும் பிதமருக்குமிடையில் இதனால் பனிப்போர் ஆரம்பித்துள்ளது. மத்திய வங்கி பிணைமுறி மோசடிக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமை தாங்கினார் என்பது முழு நாட்டுக்கும் தெரிந்த விடயம்.
இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ஒருவர், அக்கட்சி எதிர்பார்க்கும் அடுத்த தலைவராகவும் அவர் இருக்கலாம். எனவே அவரும் அர்ஜுன் அலோசியசிடமிருந்து பணம் பெற்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Vidivelli

No comments:
Post a Comment