வைரஸ் காய்ச்சலில் இருந்து பிள்ளைகளை பாதுகாப்பதற்கு விசேட வேலைத்திட்டம் - News View

About Us

About Us

Breaking

Thursday, June 7, 2018

வைரஸ் காய்ச்சலில் இருந்து பிள்ளைகளை பாதுகாப்பதற்கு விசேட வேலைத்திட்டம்

தென் மாகாணத்தில் பரவியுள்ள வைரஸ் காய்ச்சலில் இருந்து பிள்ளைகளை பாதுகாப்பதற்காக கல்வியமைச்சும், சுகாதார அமைச்சும் இணைந்து விசேட தெளிவுப்படுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பித்துள்ளன.

வைரஸ் காய்ச்சல் இன்புலுவென்சா ஏ என்று அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், காய்ச்சல் மற்றும் உடம்பு குளிர் அடைதல் ஆகியன இந்த நோயின் ஆரம்ப அறிகுறிகளாகும்.

இவ்வாறான நிலையை எதிர்கொள்ளும் பொழுது உரிய தெளிவு இல்லாமை மற்றும் வைத்திய சிகிச்சை பெற்றுக்கொள்ளாததினால் நோய் பரவுவதற்கு காரணமாக அமைகின்றது.

இதற்கமைவாக பாடசாலை மாணவ மாணவிகள் உள்ளிட்டோரை இந்த நோயிலிருந்து பாதுகாப்பதற்கு இது தொடர்பாக தெளிவுப்படுத்தும் வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நோய்க்கான அறிகுறி மற்றும் நோயை கட்டுப்படுத்துவதற்காக கடைப்பிடிக்க வேண்டியவை இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

நோய்க்கான அறிகுறிகள்

காய்ச்சல்
மூக்கில் நீர் வடிதல் (தடிமன்)
தும்மல்
இருமல்
தொண்டை வலி/ தொண்டை நோய்கள்
தலை மற்றும் கால் கை வலி

இந்த நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் இருமும் போது வெளியேறும் நீர்த்துளிகளினால் ஏனையோருக்கு இந்த நோய் பரவும். இருமும் போது கைக்குட்டை அல்லது டிசுபேப்பர்களை பயன்படுத்த வேண்டும்.

பயன்படுத்தப்பட்ட டிசுக்களில் உள்ள கிருமி தொற்றுக்கள் பரவாத வகையில் பாதுகாப்பான முறையில் அவற்றை அகற்ற வேண்டும். கைக்குட்டையாக இருப்பின் அதனை நன்கு சவக்காரமிட்டு கழுவ வேண்டும்.

தும்மல் மற்றும் இருமலின் போது தொற்று கிருமிகள் இருக்கக்கூடும். இதனால் சவக்காரமிட்டு கைகளை நன்றாக கழுவ வேண்டும்.தினமும் கையாளப்படும் கணனி, தொலைபேசி போன்றவற்றை கிருமி நாசனியை பயன்படுத்தி சுத்தம் செய்ய வேண்டும்.

இந்த நோய்க்கான அறிகுறிகள் காணப்படும் பட்சத்தில் பாடசாலை மற்றும் ஜனநடமாட்டம் இடங்களுக்கு செல்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

இந்த நோய்க்கான அறிகுறி காணப்படின் உடனடியாக வைத்தியரை நாடி சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்.குடும்பத்திலுள்ள ஏனையோருக்கு இந்த நோய் பரவாத வகையில் நோயினால் பாதிக்கப்பட்டவரை தனிமைப்படுத்தி வைக்க வேண்டும்.

நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவர் கட்டிலில் இருந்து ஓய்வு பெறுவதுடன், பானங்களை பருக வேண்டும்.அத்துடன் போஷாக்கான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்த நோய் கிருமிகள் பரவாத வகையில் பாடசாலை மாணவர்களுக்கு கைகளை கழுவி கொள்வதற்கான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.

ஏதாவது ஒரு பாடசாலை மாணவர்களின் மத்தியில் இந்த நோய் காணப்படுமாயின் அந்த பிரதேசத்திலுள்ள சுகாதார அதிகாரிகளுக்கு உடனடியாக அறிவிக்க வேண்டும்.

இதேவேளை கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் பாடசாலை சுற்றாடலை மாணவர்களுக்கு பாதுகாப்பான இடமாக மாற்ற விசேட வேலைத்திட்டமொன்றை வகுக்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதற்கமைவாக தற்போதுள்ள காலநிலையை தொடர்ந்து டெங்கு நோய் உள்ளிட்ட தொற்று நோய்கள் வெகுவாக பரவக்கூடும்.

இதனால் பாடசாலை மாணவர்களை பாதுகாப்பதற்கு பாடசாலை சுற்றாடல் பகுதிகளை துப்பறவு செய்வதற்கான விசேட வேலைத்திட்டமொன்றை வகுப்பதற்கு அதிகாரிகளுக்கு, கல்வியமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

No comments:

Post a Comment