வட பகுதியில் சட்டவிரோத செயற்பாடுகளை தடுக்க சகலரும் ஒன்றுபடவேண்டும் - News View

About Us

About Us

Breaking

Saturday, June 2, 2018

வட பகுதியில் சட்டவிரோத செயற்பாடுகளை தடுக்க சகலரும் ஒன்றுபடவேண்டும்

வடக்கில் மாணவர்கள், பொதுமக்கள் மத்தியில் அதிகரித்துள்ள போதைவஸ்துப் பாவனை மற்றும் சட்டவிரோதச் செயற்பாடுகளைத் தடுப்பதற்கு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதுடன் பொலிஸார் துரித நடவடிக்கையெடுக்க வேண்டுமென வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார். 

வடமாகாணத்தில் அதிகரித்துவரும் போதைப் பொருள் பாவனை மற்றும் கடத்தல்களைக் கட்டுப்படுத்துவதில் ஏற்பட்டுவரும் முன்னேற்றங்கள் தொடர்பாக ஆய்வு செய்யும் கலந்துரையாடலொன்று நேற்று முன்தினம் வியாழக்கிழமை (31) யாழ். சுண்டுக்குளியிலுள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் ஆளுநர் ரெஜினோல்ட் குரே தலைமையில் நடைபெற்றது.

சர்வமத தலைவர்கள் ஆளுநரிடம் விடுத்த வேண்டுகோளின் பேரில் இந்தக் கலந்துரையாடல் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வில் சர்வமதத் தலைவர்கள், யாழ் .மாநகர சபை மேயர் இம்மானுவேல் ஆனோல்ட், விசேட அதிரடிப்படை அதிகாரி, பொலிஸ் உயர் அதிகாரிகள், கடற்படை அதிகாரிகள், கிராம சேவையாளர்கள், பிரதேச செயலாளர்கள், மதுவரித்திணைக்கள உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

அண்மைக் காலமாக மாணவர்கள் உட்பட பொதுமக்கள் பலர் மத்தியிலும் அதிகரித்துள்ள போதைவஸ்துப் பாவனை மற்றும் சட்டவிரோதச் செயற்பாடுகளைத் தடுப்பதற்குச் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என இந்தக் கலந்துரையாடலின் போது வடக்கு ஆளுநர் கேட்டுக்கொண்டதுடன், இச்செயற்பாட்டின் முன்னேற்றம் தொடர்பான அறிக்கையினை காலத்துக்கு காலம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் பரிந்துரை செய்தார்.

மேலும்,மக்கள் மத்தியிலும், பாடசாலை மட்டங்களிலும் இது தொடர்பான விழிப்புணர்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்பதுடன், முறைப்பாடுகள் கிடைக்கும் பட்சத்தில் பொலிஸார் துரிதகதியில் செயற்பட்டு குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

செல்வநாயகம் ரவிசாந்

No comments:

Post a Comment