மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியிலுள்ள கல்லடி பாலத்திற்கு அருகில் போக்குவரத்து பொலிஸாருக்கும் இளைஞர்களுக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தினை தொடர்ந்து இளைஞர் ஒருவர் பொலிஸாரினால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டதையடுத்து வீதியை மறித்து இளைஞர்கள் மேற்கொண்ட போராட்டம் காரணமாக அப்பகுதியில் பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டதுடன் அமைதியின்மையும் காணப்பட்டது.
நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை (31.5.2018) மாலை கல்லடி பாலத்திற்கு அருகில் போக்குவரத்து பொலிஸாருக்கும் இளைஞர்களுக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தினை தொடர்ந்து இளைஞர் ஒருவர் பொலிஸாரினால் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட நிலையிலேயே இந்த அமைதியின்மை நிலைமை ஏற்பட்டது.
கல்லடி பகுதியில் வீதி பாதுகாப்பு பரிசோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து பொலிஸார் அப்பகுதியில் இளைஞர் ஒருவர் மீது போக்குவரத்து சட்டத்தினை நடைமுறைப்படுத்த நடவடிக்கையெடுத்தாகவும் அதன்போது வாய்தர்க்கம் ஏற்பட்ட நிலையில் பொலிஸார் விதிமுறைகளை மீறி நடந்துகொண்டதாகவும் பொது மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
எனினும் தமது கடமைக்கு இடைஞ்சல் எற்படுத்திய இளைஞரை வாக்குமூலம் வழங்குவதற்கு அழைத்த நிலையிலேயே இந்த சம்பவத்தினை வேறு திசைக்கு சிலர் கொண்டுசென்றதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தன.
போக்குவரத்து பொலிஸார் தமது விதிமுறைகளை மீறியதாக குற்றஞ்சாட்டப்படுவதுடன் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் இருந்து பொல்லுகளுடன் வந்த பொலிஸார் குறித்த இளைஞனை கைதுசெய்யமுற்பட்டதாகவும் அதன்போது இளைஞர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிவித்தாகவும் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
வுpசாரணைக்காக அழைத்துச் செல்லப்படட குறித்த இளைஞன் வரும் வரையில் போக்குவரத்தினை அனுமதிக்கமாட்டோம் என தெரிவித்து கல்முனை –மட்டக்களப்பு வீதியை மறித்து பொது மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதனால் ஒன்றரை மணிநேரம் மட்டக்களப்பு –கல்முனை வீதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது.
நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்து நின்ற நிலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்னர் காத்தான்குடி பொலிஸ் நிலையம் சென்ற இளைஞர் வந்ததன் பின்னரே குறித்த வீதியூடான போக்குவரத்திற்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களும் பொது மக்களும் அனுமதியளித்தனர்.
இதன்போது மட்டக்களப்பு பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் குமாரசிறி மற்றும் பொலிஸ் அதிகாரிகள் அங்கு வருகை தந்து இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டனர்.
எம்.எஸ்.எம். நூர்தீன்
காத்தான்குடி
No comments:
Post a Comment