இலங்கைக்குசர்வதேச நாணய நிதியத்தினால் 4 ஆம் கட்டமாக $167.2 மில்லியன் ஒதுக்கீடு - News View

About Us

About Us

Breaking

Saturday, June 2, 2018

இலங்கைக்குசர்வதேச நாணய நிதியத்தினால் 4 ஆம் கட்டமாக $167.2 மில்லியன் ஒதுக்கீடு

சர்வதேச நாணய நிதியத்தினால் (IMF) இலங்கைக்கு கடனாக வழங்கப்படும் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களில், இலங்கை தொடர்பான 4 ஆவது முன்னேற்ற மீளாய்வு மதிப்பீட்டை அடுத்து, மற்றுமொரு தவணை கடனை வழங்க தீர்மானித்துள்ளது.

அதன்படி, 252 மில்லியன் அமெரிக்க டொலர் தொகையை மற்றொரு தவணைக் கடனான இலங்கைக்கு கிடைக்கவுள்ளது. அதற்கமைய, சர்வதேச நாணய நிதியத்தால் (IMF) மூன்று வருட கடன் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு இதுவரை வழங்கிய மொத்த பணம் 1,014 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழ், கடந்த வருடம் ஜூன் 03 ஆம் திகதி, 36 மாத காலத்தில் (3 வருடம்) 1.5 பில்லியன் (1,500 மில்.) அமெரிக்க டொலர் கடனுதவியை வழங்குவதற்கு, சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழு அங்கீகாரம் வழங்கியிருந்தது.

அந்த வகையில், முதற்கட்டமாக கடந்த வருடம் நவம்பர் 18 ஆம் திகதி 162.6 மில்லின் அமெரிக்க டொலர் கடனை, சர்வதேச நாணய நிதியம் ஒதுக்கியிருந்தது.

இலங்கையை பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீட்கும் நோக்கில், சர்வதேச நாணய நிதியத்தினால் குறித்த கடன் வசதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இக்கடனுதவி, 3 வருடத்தில், 6 கட்டங்களாக வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அரசாங்கம், 1.5 - 2 பில்லியன் அமெரிக்க டொலர்களை, நாட்டின் பொருளதார மீட்சிக்கான உதவியாக சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து எதிர்ப்பார்த்துள்ளதோடு, அதனை இரு தரப்பு மற்றும் பல்தரப்பு கடன் திட்டங்கள் மூலம், சுமார் 2.2 பில்லியன் அமெரிக்க டொலர் வரை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் எதிர்பார்ப்பதாக உறுதியளித்திருந்தது.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிறைவேற்றுக் குழுவினால் நேற்றய தினம் (01) குறித்த தவணைக்கான கடன் அனுமதிக்கப்பட்டதோடு, மூன்று வருட காலப்பகுதியில் இலங்கையில் குறிப்பிடும்படியான முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

கொள்கை மாற்றங்கள் மூலம் நிதி நிலைமையை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. புதிய உள்நாட்டு வருமான சட்டமூலம் மற்றும் எரிபொருள் விலைச் சூத்திரம் ஆகியவற்றை இதற்கு உதாரணமாக கொள்ளலாம் என, சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.

இருப்பினும், வருமானத்தை நோக்காகக் கொண்ட, நிதி ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த, அரசாங்கம் தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதோடு. அதற்கு ஒரு வலுவான நிதிச் சட்டம் மற்றும் ஒரு இடைக்கால கடன் முகாமைத்துவ மூலோபாயம் என்பன அதற்கு அத்தியவசியமாகும் என, நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் எரிபொருள் விலைச் சூத்திரம் ஆனது, அரச நிறுவனங்களின் நிதி பற்றாக்குறையை குறைப்பதற்கான ஒரு நடவடிக்கையாக உள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழு தெரிவித்துள்ளது.

இது தவிர, மின்சாரத்திற்கும் ஒரு தன்னியக்க விலைச் சூத்திரத்தைக் கொண்டுவர வேண்டியது அவசியம் என்பதோடு, ஸ்ரீலங்கன் தேசிய விமான சேவையை மறுசீரமைப்பு செய்ய வேண்டியது அவசியமாகும் என அது தெரிவித்துள்ளது.

வியூகத்தின் அடிப்படையிலான சீர்திருத்தங்களை அமுல்படுத்துவது தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் இருக்க வேண்டும் எனவும், அதன் மூலம் சுதந்திர வர்த்தகம் மற்றும் முதலீட்டிற்கான சூழலை வலுவடையும் என்பதையும், சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment