நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 998 பேர் உள்ளிட்ட 3666 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ்மா அதிபரின் பணிப்புரையின் கீழ் நேற்றிரவு 9 மணி முதல் இன்று காலை 8 மணிவரை பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இணைந்து இந்த சுற்றிவளைப்பை முன்னெடுத்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் மது போதையில் வாகனம் செலுத்திய 648 பேரும், பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பில் தேடப்படும் 1090 பேரும் ஹெரோயின் மற்றும் போதைவில்லைகள் தொடர்பில் 843 பேரும் உள்ளடங்குகின்றனர்.
மேலும் சில சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பில் 77 பேரும்கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார். இதேவேளை, போக்குவரத்து விதிகளை மீறிய 6012 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இன்று அதிகாலை இராஜகிரிய மொரகஸ்முல்ல பகுதியில் வீடொன்றை சோதனைக்குட்படுத்தியுள்ளனர்.
இதன்போது எவரும் கைதுசெய்யப்படவில்லையென பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவண் குணசேகர தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் வர்த்தகர்கள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களில் ஈடுபடுவோர், நடமாடும் இடங்களில் இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment