யாழ்ப்பாணத்தில் தந்தையொருவர் பிள்ளைகளையும் கொன்று தானும் தற்கொலை செய்ய முயற்சித்துள்ள கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தந்தை மற்றும் இரண்டு பிள்ளைகள் தற்கொலைக்கு முயற்சித்த நிலையில், அவர்கள் மூவரும் யாழ். போதனா வைத்தியசாலையின் வைத்தியர்களின் கடும் போராட்டத்தின் பின்னர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் சாவகச்சேரி பொலிஸ் பிரிவில் நேற்றிரவு 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. தந்தையும் 02 பிள்ளைகளும் யாழ்பாணம் போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் தற்போதும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
37 வயதுடைய குடும்பத் தலைவரான தந்தை, மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வருகின்ற நிலையில், அண்மையில் அவரது மனைவி மண நீக்கம் (விவாகரத்து) கோரியுள்ளார்.
இந்த நிலையில், குடும்பத் தலைவர் நேற்றிரவு தனது பிள்ளைகளான 10 வயது மகனுக்கும் 7 வயது மகளுக்கும் உணவில் கிருமி நாசினியைக் கலந்து கொடுத்து தானும் உட்கொண்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தை அடுத்து, அயலிலுள்ள உறவினர்கள் மூவரையும் மீட்டு சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். அங்கிருந்து ஒவ்வொருவராக தனித்தனி அம்புலன்சில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு தந்தை மற்றும் பிள்ளைகள் இருவருக்கும் சிகிச்சை வழங்கப்படுகிறது. தற்போது அவர்கள் மூவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக இன்று காலை வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment