யாழ்.மாநகர சபை முதல்வர் இ.ஆனோல்ட் மாநகர சபை சட்டத்திற்கு மாறாக செயற்பட்டிருப்பதை உரிய ஆதாரங்களுடன் முதலமைச்சரும், உள்ளுராட்சி அமைச்சருமான சீ.வி.விக்னேஷ்வரனிடம் சுட்டிக்காட்டியபோதும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதனையும் முதலமைச்சர் இதுவரை எடுக்கவில்லை. என மாநகர சபை உறுப்பினர் வி.மணிவண்ணன் கூறியிருக்கின்றார்.
மேற்படி விடயம் தொடர்பாக மணிவண்ணன் மேலும் கூறுகையில்,
யாழ்.மாநகர சபை முதல் வர் இ.ஆனோல்ட் மாநகர சபை சட்டங்களை மீறி அல்லது மதிக்காமல் செயற்பட்டு வருகின்றார். இந்த விடயம் தொடர்பாக சபையிலும், தனிப்பட்ட முறையிலும் உறுப்பினர்கள் முதல்வரின் கவனத்திற்கு கொண்டுவந்தபோதும் முதல்வரின் செயற்பாட்டில் மாற்றங்கள் உண்டாகவில்லை.
இதனையடுத்து வட மாகாண முதலமைச்சரும், உள்ளுராட்சி அமைச்சருமான சீ.வி.விக் னேஷ்வரனிடம் யாழ்.மாநகர முதல்வரின் செயற்பாடுகள் குறித்து உரிய ஆதாரங்களுடன் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்திருக்கின்றோம். எங்களுடைய முறைப்பாடு தொடர்பாக இதுவரை ஆக்கபூர்வமாக ஒரு நடவடிக்கை தன்னும் எடுக்கப்படவில்லை.
முதலமைச்சர் வட மாகாணத்தில் இல்லை என அறிகிறோம் முதலமைச்சர் இல்லை என்றாலும் எமது முறைப்பாடு தனது கவனத்திற்கு வந்திருக்கின்றது. அது தொடர்பில் ஆராயப்படும் என்றும் கூட இதுவரை எமக்கு எந்த விதமான அறிவித்தல்களும் வரவில்லை. ஆகவே யாழ்.மாநகர முதல்வரின் செயற்பாடுகள் பாரிய ஊழலுக்கு வழிவகுக்கபோகும் நிலையில் வட மாகாண முதல்வர் உள்ளுராட்சி அமைச்சராக இருந்து கொண்டு அதனை பார்த்துக் கொண்டிருக்கப்போகிறாரா? என எங்களுக்குள் கேள்வி எழுகின்றது.
எனவே இந்த விடயத்தில் முதலமைச்சர் இனிமேலாவது தாமதம் காட்டாமல் எமது முறைப்பாட்டுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். யாழ்.மாநகர மக்களுடைய நலன் கருதி யாழ்.மாநகர சபையின் செயற்பாடுகளை சீர்ப்படுத்த வேண்டும். என மணிவண்ணன் மேலும் கேட்டுக் கொண்டார்.
பாறுக் ஷிஹான்
No comments:
Post a Comment