வட மாகாணத்தில் முதலீடு செய்வோருக்கும் வரிச் சலுகை - சிக்கலான வரிச் சட்டம் புதிய வருமான வரி சட்டத்தின் மூலம் இலகுபடுத்தப்பட்டுள்ளது - News View

About Us

About Us

Breaking

Monday, April 2, 2018

வட மாகாணத்தில் முதலீடு செய்வோருக்கும் வரிச் சலுகை - சிக்கலான வரிச் சட்டம் புதிய வருமான வரி சட்டத்தின் மூலம் இலகுபடுத்தப்பட்டுள்ளது

சிக்கலான வரிச் சட்டம் புதிய வருமான வரி சட்டத்தின் மூலம் இலகுபடுத்தப்பட்டுள்ளது என்று நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

வட மாகாணத்தில் முதலீடு செய்வோருக்கும் வரிச் சலுகை கிடைத்துள்ளது. 3 பில்லியன் டொலர்களுக்கும் குறைவான முதலீட்டாளர்களுக்கு வரிச் சலுகை வழங்கப்படும். இந்த வரி சட்டத்தின் மூலம் நியாயமான வருமான வரி முறையொன்று அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

நேற்று பிற்பகல் நிதியமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

இந்த வரி முறை தொடர்பில் திரிவுபடுத்தப்பட்ட தகவல்கள் பல செய்திகளில் வெளியாகியுள்ளன. இவ்வாறான செய்திகள் மூலம் மக்களை பிழையான வழியில் இட்டுச் சென்று அவர்களை அசௌகரியத்திற்கு உள்ளாக்க வேண்டாமென அமைச்சர் கேட்டுள்ளார்.

வரி செலுத்தத் தவறுவதை கட்டுப்படுத்துவதற்காக சர்வதேச நீதி நாட்டிற்கு ஏற்ற வகையில் வகுக்கப்பட்டுள்ளது. தற்போது 18 சதவீதமாக உள்ள வருமான வரியை 2020ம் ஆண்டில் 40 சதவீதம் வரை அதிகரிப்பது இதன் நோக்கமாகும் என்று தெரிவித்த நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர ஏப்ரல் 1ம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்டுள்ள இந்த வரி முறையின் மூலம் எதிர்வரும் 2 காலாண்டுகளில் 30 பில்லியன் ரூபாவை வருமானமாக ஈட்ட எதிர்பார்க்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

ஓய்வு பெற்றவர்களிடமிருந்து எதுவித வரியும் அறவிடப்பட மாட்டாது. எனினும், வட்டி வருடத்திற்கு 15 இலட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட தொகையாக இருக்குமானால், வரி அறவிடப்படும். வெளிநாடுகளில் பணிபுரிபவர்களின் வருமானத்திற்காக வரி அறவிடப்பட மாட்டாது. வெளிநாடுகளுக்கு ஏதாவது சேவையை வழங்கி பெற்றுக் கொள்ளப்படும் வருமானத்தில் 15 இலட்சம் ரூபா வரையான தொகைக்கு வரி விடுதலை அளிக்கப்பட்டுள்ளது. 

ஏற்றுமதி செய்வோருக்கு கூடுதலான சலுகை வழங்கப்பட்டுள்ளது. மூன்று பில்லியன் டொலர்களுக்கும் 100 பில்லியன் டொலர்களுக்கும் இடைப்பட்ட தொகையில் முதலீடு செய்வோருக்கு வரிச் சலுகை வழங்கப்பட்டு;ளளது. தெற்காசியாவில் சிறந்த வரி முறை இந்த நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வரிப் பணத்தை முற்றுமுழுதாக சரியான முறையில் மக்கள் சேவைக்காக பயன்படுத்துவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

நிதி இராஜாங்க அமைச்சர் இரான் விக்ரமரத்ன
அனைத்து வியாபாரிகளையும் வர்த்தகர்களையும், ஒரேவிதமாக கருதும் வரி முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் இரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். வரிகள் மூலம் சமூக நீதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இருப்பவர்களிடம் அறவிட்டு, இல்லாதவர்களுக்கு வழங்குவது இதன் பிரதான நோக்கமாகும். வற் வரி நியாயமானதல்ல. இந்த வருமான வரி மூலம் வற் வரியை குறைப்பதற்கும் எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment