முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்ச, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பிரபல ஆலோசகர்கள் குழுவை சீனாவில் சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்பு நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக கொழும்பு டெலிகிராப் இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது.
ஐந்து பேர் அடங்கிய குழு ஒன்றையும், கோட்டபாய ராஜபக்சவையும் சீனா வெவ்வேறாக அழைப்பு விடுத்துள்ளதுடன், ஒன்றாக சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தது.
இந்தச் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்னதேரர், எஸ்.பி. திஸாநாயக்க, ஜனாதிபதியின் நம்பிக்கைக்குரியவரான சிரில் லக்திலக மற்றும் ஹர்ஷ குமார நவரத்ன, சிறிசேன தலைமையிலான தேசிய பொருளாதார கவுன்சிலின் பொதுச் செயலாளர் டொக்டர் லலித் பி சமரகோன் ஆகியோர் இருந்துள்ளனர்.
எனினும் அத்துரலிய ரத்னதேரர் மற்றும் எஸ்.பி.திஸாநாயக்க தவிர்ந்த குழுவினர் கடந்த 28 ஆம் திகதி சீனாவிற்குச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தின் போது, இவர்கள் எதுதொடர்பில் கலந்தாலோசித்துள்ளார்கள் என தெரியவரவில்லை என்றும், ஊகங்களின் அடிப்படையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையின் சாத்தியமான முடிவுகள் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, கூட்டு எதிரணியின் புரிந்துணர்வு குறித்து ஆலோசிக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்தக் குழு நாளை 04 ஆம் திகதி நாடு திரும்பவுள்ளதுடன், கோட்டபாய ராஜபக்ச பல வாரங்களுக்கு பின்னரே நாடு திரும்புவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மிகவும் நெருங்கிய நம்பிக்கையாளரான லக்திலகவே கோட்டபாய ராஜபக்சவின் சந்திப்பை ஒழுங்கு செய்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபிவிருத்தி வளர்ச்சி வெளிப்பாடு சுற்றுப்பயணம்
மேலும் ஒரு நாடாளுமன்ற குழுவொன்று சீனாவிற்கு அபிவிருத்தி வளர்ச்சி வெளிப்பாடு சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தது.
இந்த நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்புமாறு பணித்திருந்தார். இதனையடுத்து, சுற்றுப்பயணத்தை இடைநிறுத்தி நாடு திரும்பியுள்ளனர்.
No comments:
Post a Comment