மட்டக்களப்பு - ஏறாவூர்ப்பற்று பிரதேசத்திலுள்ள வடிகான்களை தனியாட்கள் சட்டவிரோதமாக மூடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் கவனயீர்ப்புப் போராட்டம் நடாத்தியூள்ளனர். இதன்போது திரட்டப்படும் பொதுமக்கள் ஐயாயிரம் பேரினது கையெழுத்துக்களடங்கிய மகஜர் மாவட்ட அரசாங்க அதிபருக்குக் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏறாவூர் நகர சபைக்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட தனவந்த உறுப்பினர் ஒருவரின் கையாட்கள் சட்டவிரோதமாக மணல் நிரப்பி வடிகான்களை மூடி காணி அபகரிப்பில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகிறது. அரசியல் அதிகார பின்புலத்துடன் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.
கடந்த சுமார் ஐம்பது வருடங்களுக்கு ஏ.எச். மாக்கான் மாக்கார் அவர்களினால் உருவாக்கப்பட்ட மிச்நகர் மீராகேணி மற்றும் ஐயங்கேணி போன்ற பிரதேசங்களை ஊடறுத்துச்செல்லும் வடிகான்கள் கடந்தசில வருடகாலமாக தனியாரினால் ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது. இதனால் மாரி மழைக்காலங்களில் இக்கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி மக்கள் இடம்பெயரும் அவலநிலை ஏற்படுகிறது.
இந்நிலையில் ஏறாவூர் நகர சபைக்கு அண்மையில் தெரிவு செய்யப்பட்ட பிரபல உறுப்பினர் ஒருவர் தனது பெக்கோ இயந்திரங்களைப்பயன்படுத்தி பிரதான வடிகாலினை அடைத்து காணி அபகரிப்பில் ஈடுபட்டபோது பொதுமக்கள் எதிர்ப்பினை வெளிக்காட்டியதையடுத்து இயந்திரங்களுடன் தப்பியோடியதாக தெரிவிக்கப்படுகிறது.
வடிகான்களை மூடி காணி அபகரிக்கப்படுவது தொடர்பாக பல முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டபோதிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுவரை எந்தவொரு ஆக்கபூர்வமான நடவடிக்கையினையும் எடுக்கவில்லையென பொதுமக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
ஏறாவூர் நிருபர்
No comments:
Post a Comment