பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் தோற்கடிக்கும் முயற்சியில் இறங்கக் கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளதாக கொழும்பில் இருந்து வெளியாகும் ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
கூட்டமைப்பின் ஆதரவுடன் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிக்கும் முயற்சியில் இறங்கக்கூடாது என்றும் அது எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் ஐதேகவினரிடம் ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கூட்டமைப்பின் ஆதரவைப் பெறுவது, பொதுமக்களுக்கு தவறான தகவலை கொண்டு செல்லும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்தக் கருத்து தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.
2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைப் பெற்றுக் கொண்டதையும் இந்தக் கூட்டத்தில் நிதியமைச்சர் மங்கள சமரவீர நினைவு கூர்ந்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் விஷேட கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதியின் உத்தியோபூர்வ இல்லத்தில் நேற்று இடம்பெற்றது. இதில் ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர்களும் கலந்துகொண்ட நிலையில், ஜனாதிபதி இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
No comments:
Post a Comment