17 வருடங்களின் பின்னர் அஷ்ரப் மரண விசாரணை அறிக்கை கிடைத்தது - News View

About Us

About Us

Breaking

Thursday, March 1, 2018

17 வருடங்களின் பின்னர் அஷ்ரப் மரண விசாரணை அறிக்கை கிடைத்தது

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃபின் மரணம் தொடர்பிலான இறுதி விசாரணை அறிக்கையின் பிரதி, தகவல் அறியும் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குற்றப்புலனாய்வுத் திணைக்களம் ஜனாதிபதி செயலகத்திடம் வழங்கியிருந்த அறிக்கையை, ஜனாதிபதி செயலகத்தின் மேலதிகச் செயலாளர் லக்ஸ்மி ஜயவிக்ரம நேற்று புதன்கிழமை ஆணைக்குழுவிடம் ஒப்படைத்துள்ளார்.

மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃபின் மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஆணைக்குழுவின் அறிக்கையை கோரி, தகவல் அறியும் ஆணைக்குழுவில் முன்னாள் அமைச்சர் பசீர் சேகுதாவூத் மற்றும் சர்ஜூன் ஜமால்டீன் ஆகியோர் மேன்முறையீடு செய்திருந்தனர். இது தொடர்பில் தகவல் அறியும் ஆணைக்குழுவின் நான்காவது விசாரணை அமர்வு நேற்று (28) புதன்கிழமை இடம்பெற்றது.

அஷ்ரஃப் மரண விசாரணை அறிக்கையானது - குற்றப்புலனாய்வுப் பிரிவு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் விமானப்படை ஆகியவற்றுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதன் பிரதியையாவது பெற்றுத்தருமாறும் தகவல் அறியும் ஆணைக்குழுவின் உறுப்பினரும், ஓய்வுபெற்ற நீதிபதியுமான ரோஹினி வெல்கம கடந்த அமர்வின் போது சுவடிகள் திணைக்களத்திற்கு கூறியிருந்தார்.

அதன்படி, அறிக்கையை வழங்குமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் கடந்த 05 ஆம் திகதி ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் கடிதம் ஒன்றின் மூலம் கோரியிருந்தார். பின்னர் கடந்த 14 ஆம் திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அந்த அறிக்கையை ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பியது.

அவ்வாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் வழங்கியிருந்த மர்ஹூம் அஷ்ரஃப்பின் மரணம் தொடர்பிலான விசாரணை அறிக்கையை, தகவல் அறியும் ஆணைக்குழுவிடம் ஜனாதிபதி செயலகத்தின் மேலதிக செயலாளர் நேற்று ஒப்படைத்ததாக முறைப்பாட்டாளர்கள் சார்பில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி ஏ.எல். ஆஸாத் தெரிவித்திருந்தார்.

2003 ஆம் ஆண்டு மார்ச் 26 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் மேலதிக செயலாளர் டப்ளியு.ஜே.எஸ். கருணாரத்ன - குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அனுப்பியிருந்த அறிக்கையின் பிரதியே இவ்வாறு கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையின் பிரதியை எதிர்வரும் நாளை வெள்ளிக்கிழமை 
முறைப்பாட்டாளர்களுக்கு வழங்குவதாக நேற்று (28) அறிவிக்கப்பட்டுள்ளது என்று, தேசிய சுவடிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் கலாதிநிதி நதீராரூபசிங்க தெரிவித்தார்.

எனினும், எம்.எச்.எம். அஷ்ரஃபின் மரண அறிக்கையின் இறுதி அறிக்கை தமது திணைக்களத்திற்கு வழங்கப்பட்டிருக்க வில்லையெனவும் அவர் கூறினார்.

சாதாரணமாக விசாரணைகளை மேற்கொள்ளும் ஆணைக்குழுவின் அறிக்கை வெளியானால், மூன்று அல்லது நான்கு நாட்களுக்குள் தமது திணைக்களத்திற்கு அதன் பிரதி அனுப்பப்பட வேண்டும் என தேசிய சுவடிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் சுட்டிக்காட்டினார். எனினும், இந்த சம்பவத்தில் அவ்வாறு இடம்பெறவில்லையெனவும் அவர் கூறினார்.

2000 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16 ஆம் திகதி கொழும்பிலிருந்து அம்பாறை நோக்கி பயணித்த இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர் அரநாயக்க பகுதியில் வெடித்து சிதறியதில், எம்.எச்.எம். அஷ்ரஃப் உள்ளிட்ட 14 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

அதன் பின்னர், தலைவர் அஷ்ரஃபின் மரணம் தொடர்பில் விசாரணை செய்வதற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் 2001 ஆம் ஆண்டு தனிநபர் ஆணை குழுவொன்று நியமிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

கடந்த 16 வருடங்களுக்கு மேலாக அந்த ஆணைக்குழுவின் கண்டறிதல்கள் எதுவும் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தப்படவில்லை.

இந்தப் பின்புலத்திலேயே 2017 ஆம் ஆண்டு பெப்ரவரி 3 ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்பட்ட வெளியானா தகவல் அறியும் சட்டத்தின்படி, ஆணைக்குழுவின் அறிக்கையைப் பெற்றுத்தருமாறு ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் மற்றும் சர்ஜூன் ஜமால்டீன் ஆகியோர் கோரியிருந்தனர், முறைப்பாட்டாளர்கள் சார்பில் சட்டத்தரணி ஏ.எல். ஆஸாத் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது .

அல்மசூறா நியூஸ்

No comments:

Post a Comment