இன மத பேதமற்ற நல்லிணக்க வாழ்க்கையை நம் நாட்டில் உறுதிசெய்யவேண்டும் - ஜனாதிபதி - News View

About Us

About Us

Breaking

Sunday, February 4, 2018

இன மத பேதமற்ற நல்லிணக்க வாழ்க்கையை நம் நாட்டில் உறுதிசெய்யவேண்டும் - ஜனாதிபதி

இனமோதல்கள் அற்றவகையில் மக்கள் வாழக் கூடிய வகையில் நாம் பாதுகாப்பை உறுதிசெய்யவேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 70ஆவது ஆண்டு சுதந்திர தின வைபவத்தில் நாட்டுமக்களுக்காக கொழும்பு காலிமுகத்திடலில் இன்று ஆற்றிய உரையில் தெரிவித்தார். இந்த நிகழ்வில் ஜனாதிபதி தொடர்ந்து உரையாற்றுகையில் ,

இன மத பேதமற்ற சூழ்நிலையை உருவாக்குவதுடன் சமதானம் சகவாழ்வை மக்களுக்கு உறுதி செய்வதுடன் மத நல்லிணக்கத்தையும் நம்பகத்தன்மையுடன் வாழும் சூழ்நிலை உறுதிசெய்யப்படவேண்டும் இவை அத்தியாவசியமானது என்று நாம் கருதவேண்டும். இதனை கருத்தில் கொண்டு இந்த நாட்டில் உள்ள புத்திஜீவிகள் கல்விமான்கள் அரசியல்வாதிகள் உள்ளிட்ட அனைவரும் செயற்படவேண்டும் என்று இச்சந்தர்ப்பத்தில் நான் கேட்டுக்கொள்ளவிரும்புகின்றேன்.

எல்.ரீ.ரீ பயங்கரவாதத்தின் காரணமாக 30 வருட காலத்திற்கு பல்வேறு துன்பங்களுக்கு மக்கள் உள்ளானார்கள். இதன்காரணமாக நாட்டின் முன்னேற்றத்திலே ஒரு பின்னடைவு ஏற்பட்டது.

எல். ரீ. ரீ. பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டை பாதுகாப்பதற்காக உயிரை பணயம் வைத்து படைவீரர்கள் பொலிசார் மற்றும் சிவில் இராணுவ வீரர்கள் உள்ளிட்டவர்கள் யுத்தத்தின்போது பாரிய அர்ப்பணிப்பை மேற்கொண்டுள்ளனர். இவர்களில் பலர் கைகால்களை இழந்து ஊனமுற்ற நிலையில் குடும்ப வாழ்க்கையையும் இழந்து தவிக்கின்றனர். இன்றைய 70ஆவது ஆண்டு சுதந்திரதினத்தை கொண்டாடும் நாளில் இவர்களுக்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம். இவர்களது குடும்பங்களின் நலனில் நாம் அக்கறை கொண்டுள்ளோம் என்றும் ஜனாதிபதி மேலும்குறிப்பிட்டார்.

எமது நாட்டின் அபிமானத்தை எமது நாட்டின் பெருமையை எமது கடந்தகால அனுபவங்களை பாடமாக வைத்து நாங்கள் செயற்படவேண்டும். படித்தவர்கள் புத்திஜீவிகள் முக்கியமாக தமது பங்களிப்பை இதற்காக வழங்க வேண்டும். இன்று எங்களுக்கு இருக்க கூடிய முக்கியமான சவால் என்ன? நாம் செய்யவேண்டியது என்ன? எதிர்காலத்தில் நன்மைக்காக நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் பணியாற்றவேண்டும். அதுதான் முக்கியமான சவாலாக இருக்கின்றது என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

பொருளாதார ரீதியிலே எதிர்நோக்குகின்ற எல்லாப்பிரச்சனைகளுக்கும் நாங்கள் சிறப்பாக முகங்கொடுக்கவேண்டும். ஏழ்மை எங்களுக்கு இருக்க கூடிய பெரிய சவாலாக இருக்கின்றது. அந்த ஏழ்மையை, வறுமையை போக்க கடந்த காலத்தில் பணியாற்றிய போதிலும் நாம் நம் கடமைகளை இன்னும் இன்னும் சரியாக செயற்படுத்தவேண்டும். ஏழ்மை வறுமை இவற்றிலிருந்து நாம் விடுதலைபெறவேண்டும் .அதேபோன்று இங்கே இருக்க கூடிய நமது நாட்டு மக்கள்தேசியஅபிவிருத்தி பற்றி சிந்திக்கவேண்டியுள்ளது.

சில செயற்பாடுகள் எமது நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே தேசிய ரீதியான முக்கிய பிரச்சனைகளை அறிந்து தெரிந்து நாம் சரியாக செயலாற்ற வேண்டும். எங்களுடைய கல்வித்துறையில் இருக்கக்கூடிய கல்விமான்கள் புத்திஜீவிகளை இன்னும் இன்னும் அதிகரிக்கவேண்டும். எமது கல்விமுறையிலே இன்னும் பல மாற்றங்களை நாம் ஏற்படுத்தவேண்டும். தொழில்நுட்பம், இயற்கை வளங்கள் இவை எல்லாம் மேம்படுத்தப்படவேண்டும். அப்பொழுதுதான் நம் நாட்டிலே ஒரு அபிவிருத்தியை நாம் இன்னும் காணக்கூடியதாக இருக்கும்.

எமது நாட்டின் பல நிதிப்பிரமாணங்கள் பழைய நிதி தொடர்பான விதிகள் மிகவும் பழமைவாய்ந்ததாகும். காலத்திற்கேற்றவகையில் இவற்றில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவேண்டும். ஒழுக்க விதிமறைகளுக்கு முக்கியத்துவமளித்து நாம் செயற்படவேண்டும். தூய்மையான அரசியல் கலாச்சாரம் உருவாக்கப்படவேண்டும். அபிவிருத்திவேலைகள் சிறப்பாக செய்யப்படவேண்டும். அபிவிருத்திக்கு அரசியல்வாதிகள் மக்களோடு இணைந்து நேர்மையாக செயற்படவேண்டும். அர்ப்பணிப்பு நம்பிக்கை இவைதான் காலத்தின் தேவை என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment