தற்போது நாட்டுப் பற்றாளர் தன்மை என்பது நிதி ஒழுக்கத்துடன் செயற்படுவதே – ஜனாதிபதி - News View

About Us

About Us

Breaking

Sunday, February 4, 2018

தற்போது நாட்டுப் பற்றாளர் தன்மை என்பது நிதி ஒழுக்கத்துடன் செயற்படுவதே – ஜனாதிபதி

ஊழல், திருட்டு, இலஞ்சத்திற்கு எதிராக நிதி தொடர்பில் ஒழுக்கத்தை ஏற்படுத்துவதற்காக விரிவான தேசிய நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதன் தேவையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார். இதற்காக நாட்டின் புத்திஜீவிகள் உள்ளிட்ட அனைவரும் இணக்கப்பாட்டு முயற்சியை மேற்கொள்வதற்கு அனைத்து தரப்பினரதும் ஒத்துழைப்பு அவசியமாகும் என்று தெரிவித்தார்.

70வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று இடம்பெற்ற வைபவத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டு மக்களுக்கு உரையாற்றுகையில் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

தற்போது நாட்டுப் பற்றாளர் தன்மை என்பது நிதி ஒழுக்கத்துடனான செயற்படுவதே ஆகும். இதற்காக அரசியல்வாதிகள், அரச அதிகாரிகளும் முன்னோடியாகச் செயற்பட வேண்டும். நாட்டில் தூய்மையான அரசியலை கட்டியெழுப்புவதற்கு அனைவரதும் அர்ப்பணிப்பும் தேவை என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டினார்.

ஊழல் எதிர்ப்பு நாட்டிற்கு பெரும்பாதுகாப்பானதாகும். ஊழல் எதிர்ப்பு நிலைப்பாட்டை வலுப்படுத்துவது நாட்டின் அபிவிருத்திக்கும் முன்னேற்றமான பாதைக்கும் அடிப்படையாக அமையும் . நாட்டின் பொருளாதார சுதந்திரத்திற்காக திருட்டு, வீண்விரயம், ஊழல், மற்றும் இலஞ்சம் ஆகியவற்றை இல்லாதொழிப்பது அத்தியாவசியமாகும் என்றும் ஜனாதிபதி கூறினார்.

நாட்டில் சிறப்பான அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்புவது நாட்டின் தற்போதைய தேவையாகும். இருப்பினும் ஊழல் மிக்க அரசியல் தேசத்தின் முன்னேற்றத்திற்கு தடையாக அமைந்துள்ளது. இதனால், மேல் மட்டத்தில் இருந்து கீழ் மட்டம் வரை திட்டமிட்ட வகையிலான ஒழுக்கத்துடனான புதிய அரசியல் சமூகமாக முன்னோக்கிப் பயணிப்பதன் தேவையை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

தேசத்தின் சவால்களை அடையாளங்கண்டு செயற்படுவதற்கு அரசாங்கம் முக்கியத்துவம் வழங்கியுள்ளது. இதில் வறுமையை இல்லாதொழிப்பதில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. எதிர்கால வேலைத்திட்டம் மற்றும் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு அரச நிர்வாகத்தை செயற்திறன் மிக்கதாக மேம்படுத்த வேண்டும். இதற்காக காலங்கடந்த கட்டளைகள், விதிமுறைகளில் துரிதமாக திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும் ஜனாதிபதி கூறினார்.

தேசிய சவாலை வெற்றி கொள்ளும் போது நேர்மை மிக முக்கியமானதாகும். பொதுமக்கள் அரச நிர்வாகத்தில் ஒன்றிணைக்கப்பட வேண்டியதன் தேவையையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தினார்.

உண்மையான சுதந்திரம் மனிதனின் சுதந்திரத்திற்கு மாத்திரமல்ல என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, மரம், செடி உள்ளிட்ட இயற்கை சொத்துக்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும். அது தொடர்பில் உள்ள பொறுப்பு குறித்து பாடசாலை மாணவர்கள் முதல் அனைவருக்கும் மிகவும் தெளிவை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். சுதந்திரத்தின் சகல பிரிவுகளையும் வலுவூட்டி, நாட்டின் மக்களின் அடையாளத்தை உறுதி செய்ய வேண்டும்.

இனவாத கருத்துக்களுக்கு அப்பால் நாட்டைக் கட்டியெழுப்புவதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி அனைத்து இன மக்களுக்கும் சுதந்திரமாக வாழும் உரிமையை உறுதி செய்து நல்லிணக்கத்தை வலுப்படுத்த வேண்டுமென்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறினார். 30 வருட காலமாக நிலவிய யுத்தம் முடிவுக்கு கொண்டு வந்து நாட்டின் சுயாதீனத் தன்மை, ஆட்புல ஒருமைப்பாட்டை பாதுகாப்பதற்காக செயற்பட்ட கடற்படை உள்ளிட்ட பாதுகாப்பு அதிகாரிகள் தமது உயிரை பணயம் வைத்து மேற்கொண்ட அர்ப்பணிப்பை இதன் போது நினைவுகூர்ந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு நாட்டின் தேசிய கௌரவத்தை இந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்ளவதாக கூறினார்.

No comments:

Post a Comment