மாலைதீவின் பிரதம நீதியரசர் அப்துல்லா சயீட் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஉமூன் அப்துல் கையூம் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று (06) அதிகாலை வேளையில் குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
கைதான 80 வயதான மஉமூன் அப்துல் கையூம், தற்போதைய ஜனாதிபதி அப்துல்லா யமீனின் ஒன்று விட்ட சகோதரர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மாலைதீவில் நேற்றைய தினம் (05) அந்நாட்டு ஜனாதிபதி அப்துல்லா யமீனால் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் 15 நாட்களுக்கு அமுலில் இருக்கும் வகையில் குறித்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ள நிலையில், இராணுவத்திற்கு அதிக அதிகாரங்களும் அவரால் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனக்கு எதிராக செயற்படுவோர், தம்மை பதவி நீக்க முயற்சிப்போர் அல்லது தமக்கு எதிராக செயற்படுவோருக்கு எதிரானவர்கள் மீது நடவடிக்கைகள் எடுப்பதற்கான அதிகாரம் உள்ளிட்ட சந்தேகத்துக்குரியவர்களை கைது செய்யவும், ஆர்ப்பாட்டங்களை தடுக்கவுமான அதிகாரங்கள் அந்நாட்டு ஜனாதிபதி யமீனால் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீத் தொடர்பான நீதிமன்ற வழக்கில், அவர் உள்ளிட்ட அரசியல் கைதிகளுக்கு வழங்கப்பட்ட சிறைத்தண்டனை அரசியலமைப்புக்கு முரணானது என தீர்ப்பளித்துள்ள அந்நாட்டு உச்ச நீதிமன்றம், கைது செய்யப்பட்ட 09 எதிர்க்கட்சி தலைவர்களை விடுவிக்க வேண்டும் எனவும், பதவி நீக்கப்பட்ட 12 பாராளுமன்ற உறுப்பினர்களின் பதவிநீக்கமும் செல்லாது எனவும் அறிவித்திருந்தது.
எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் பதவி வழங்கப்பட்டால், மொஹமட் யமீனின் ஆளும் கட்சி பெரும்பான்மை இழந்துவிடும் எனும் நிலையில் இவ்வாறான நடவடிக்கைகளில் ஜனாதிபதி யமீன் ஈடுபட்டு வருகிறார் என தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தீர்ப்பை நடைமுறைப்படுத்தாத ஜனாதிபதி அப்துல்லா யமீன், அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியதோடு, பிரதம நீதியரசர் மற்றும் முன்னாள் ஜனாதிபதியையும் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, 13 வருட சிறைத் தண்டனை வழங்கப்பட்டு, ஐக்கிய இராச்சியத்தில் அரசியல் தஞ்சமடைந்துள்ள மாலைதீவின் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீத், குறித்த விடயம் தெடர்பில் இந்தியா தனது இராணுவத்தை அனுப்பி கைது செய்யப்பட்டோரை விடுவிக்க வேண்டும் என, தனது ட்விற்றர் கணக்கில் தெரிவித்துள்ளதோடு, ஜனாதிபதி யமீன் பதவி விலக வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
மாலைதீவில் தற்போது சுற்றுலா பயண காலம் என்பதோடு, அந்நாட்டில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இந்நிலையில் மாலைதீவுக்கு செல்வதை தவிர்க்குமாறு சீனா, அமெரிக்கா, இந்தியா, ஐக்கிய இராச்சியம் உள்ளிட்ட நாடுகள் எச்சரிகை விடுத்துள்ளன.
சுமார் 4 இலட்சம் மக்களைக் கொண்ட மாலைதீவு, சுற்றுலா துறையில் அதிக வருமானத்தை ஈட்டுவதோடு, கடந்த 2016 ஆம் ஆண்டில் மாத்திரம், சுற்றுலா துறை மூலம் டொலர் 2.7 பில்லியனை வருமானமாக பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இது குறித்து அமெரிக்க பாதுகாப்பு சபை தனது ட்விற்றர் கணக்கில் "அமெரிக்கா மாலைதீவு மக்களுடன். மாலைதீவு அரசாங்கமும், இராணுவமும் சட்டத்தை மதிக்க வேண்டும் என்பதோடு, கருத்துச் சுதந்திரம் மற்றும் ஜனநாயக நிறுவனங்களையும் மதித்து செயற்பட வேண்டும். உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது" என தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment