வாக்காளர் அட்டைகளை விலைக்கு வாங்கிய கும்பல் பேருவளையில் கைது - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 6, 2018

வாக்காளர் அட்டைகளை விலைக்கு வாங்கிய கும்பல் பேருவளையில் கைது

வேட்பாளர் ஒருவரின் வேண்டுகோளுக்கிணங்க வாக்காளர்களின் அடையாள அட்டைகள் மற்றும் வாக்காளர்கள் அட்டைகளை விலைக்கு வாங்கிய இருவரை பொலிஸார் பேருவளையில் கைது செய்திருப்பதாக பொலிஸ் பேச்சாளர் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

சந்தேக நபர்களிடமிருந்து ஆறு அடையாள அட்டைகள் மற்றும் ஐந்து வாக்காளர் அட்டைகள் மீட்கப்பட்டுள்ளன. இதனைப் பெற்றுக் கொள்வதற்காக சந்தேக நபர்கள் வாக்காளர்களுக்கு 18 ஆயிரம் ரூபா பணத்தைக் கொடுத்திருப்பதாகவும் பொலிஸ் பேச்சாளர் கூறினார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர், தனது தொகுதி வாக்காளர்கள் பிறிதொரு வேட்பாளருக்கு வாக்களிப்பதனை தடுப்பதற்காக தனது ஆதரவாளர்களைக் கொண்டு பணத்துக்கு அடையாள அட்டை மற்றும் வாக்காளர் அட்டைகளை வாங்கியிருப்பதாகவும் பொலிஸ் ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

அதுமட்டுமன்றி அதே வேட்பாளர் தேர்தல் இலஞ்சமாக நான்கு பேருக்கு மின்சாரக் கட்டணத்தையும் வேறு நான்கு பேருக்கு தண்ணீர் கட்டணத்தையும் 10 ஆயிரத்து 800 ரூபாவுக்கு செலுத்தியுள்ளார்.

இச்சம்பவங்கள் அடிப்படையில் குறித்த வேட்பாளர் மீது பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் களுத்துறை நீதவானின் உத்தரவுக்கமைய எதிர்வரும் 12 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு உதவினார் எனும் குற்றச்சாட்டின்பேரில் மற்றைய நபர் கடும் நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இதனடிப்படையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரால் எதிர்வரும் 10 ஆம் திகதி தேர்தலில் வாக்களிக்க முடியாமல் போகுமென்றும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

அத்துடன் மேற்படி வேட்பாளரின் செயற்பாடுகள் தொடர்பில் சட்டமா அதிபரின் உதவியை நாடியிருப்பதாக சுட்டிக்காட்டிய பொலிஸார், இலஞ்சம் கொடுத்தல் மற்றும் பலவந்தப்படுத்துதல் ஆகிய சம்பவங்களுக்காக வேட்பாளர் குற்றவாளியென நிரூபிக்கப்பட்டால் அவர் தேர்தலில் வெற்றி பெற்றாலும் அவரது உறுப்புரிமை ரத்துச் செய்யப்படுமெனக் கூறினார்.

இதேவேளை அவர் குற்றவாளியென நிரூபிக்கப்படும் பட்சத்தில் தொடர்ந்து ஏழு ஆண்டுகளுக்கு அவரால் தேர்தலில் போட்டியிட முடியாமல் போகுமென்றும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டவிதிகளை மீறிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பொலிஸ் நிலையங்களுக்கு 488 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.இது சம்பந்தமாக 108 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோன்று தேர்தலுடன் தொடர்புபட்டதாக பொலிஸார் 164 சுற்றிவளைப்புக்களை முன்னெடுத்துள்ளனர். இச்சம்பவங்கள் தொடர்பில் மொத்தமாக கைது செய்யப்பட்ட 444 பேரில் 55 பேர் தேர்தல் வேட்பாளர்களென்றும் பொலிஸார் கூறினர்.

இவ்வாறான சம்பவங்கள் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கு பங்கம் விளைவிப்பதனால் சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

இதே வேளை இந்த முறைகேடு தொடர்பாக பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாகவும் குறித்த மோசடியுடன் தொடர்புள்ள 56 பேர் அடையாளங் கண்டுள்ளதாகவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment