தேர்தல் காலத்தில் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது குறித்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தல் அடங்கிய நூல் - News View

About Us

About Us

Breaking

Thursday, February 1, 2018

தேர்தல் காலத்தில் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது குறித்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தல் அடங்கிய நூல்

*வாக்குச்சீட்டு, அடையாள அட்டைகள் பணம் கொடுத்து வாங்குவது தொடர்பில் முறைப்பாடுகள்

*ஊர்ஜிதமானால் வெற்றி பெற்றாலும் உறுப்பினர் பதவி இரத்தாகும்

உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நாள் முதல் இன்று வரை பாரிய வன்முறைகளின்றி தேர்தல் பிரசார நடவடிக்கைகள் சுமுகமாக இடம்பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். இக்காலப்பகுதியில் பொலிஸாருக்குக் கிடைத்த முறைப்பாடுகளின் பிரகாரம் 17 வேட்பாளர்கள் அடங்களாக 90 பேர் கைதானதாக தெரிவித்த அவர் தேர்தல் சட்டத்தை மீறியது தொடர்பில்

நடத்திய தேடுதலின் போது 25 வேட்பாளர்கள் அடங்களாக 278 பேரும் கைதானதாகவும் அவர் குறிப்பிட்டார். பொலிஸ் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற விசேட ஊடக மாநாட்டில் அவர் இது தொடர்பில் கருத்து வெளியிட்டார்.

வேறு கட்சிகளுக்கு ஆதரவான வாக்காளர்களின் வாக்குச் சீட்டுகளையும் அடையாள அட்டைகளையும் பணம் கொடுத்து வாங்கும் முறைகேடு தொடர்பாகவும் பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக தெரிவித்த பொலிஸ் ஊடகப்பேச்சாளர், இது தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையுடன் வழக்குப் பதிய நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் கூறினார்.

இந்த முறைகேட்டுடன் தொடர்புள்ள வேட்பாளர்களுக்கு 7 வருடங்களுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என்பதோடு தேர்தலில் வெற்றியடைந்தாலும் அவரின் உறுப்பினர் பதவி ரத்தாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

341 உள்ளூராட்சி சபைத் தேர்தல்களுக்கான தேர்தல் எதிர்வரும் 10 ஆம் திகதி நடைபெறுகிறது. இதற்காக முதற்கட்டமாக 93 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலுக்காக டிசம்பர் 11 முதல் 14 வரை வேட்பு மனு ​கோரப்பட்டதோடு 248 உள்ளராட்சி சபைகளுக்கான தேர்தலுக்காக டிசம்பர் 18 முதல் 21 வரை ​வேட்பு மனு கோரப்பட்டிருந்தது.

இது தொடர்பில் மேலும் குறிப்பிட்ட அவர், வேட்பு மனு தாக்கல் திகதியில் இருந்து நேற்று காலை 6 மணிவரையான காலப் பகுதி வரை தேர்தல் பிரசார பணிகள் சுமுகமாகவே நடைபெற்றுள்ளன. பாரிய வன்முறைகள் இதுவரை இடம்பெறவில்லை.

தேர்தல் தொடர்பான 410 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இவற்றில் ஏசி, அச்சுறுத்தியது தொடர்பான முறைப்பாடுகளே அதிகமாகும். இது தொடர்பில் 109 முறைப்பாடுகள் பொலிஸ் நிலையங்களுக்கு கிடைத்துள்ளன. இது தொடர்பான விசாரணைகளையடுத்து 90 பேர் கைதானதோடு ஒருவர் தவிர எனையவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தேர்தல் சட்டத்தை மீறியது தொடர்பிலான சுற்றிவளைப்புகளின் போது சந்தேகத்தின் பேரில் 278 பேர் கைதாகியுள்ளனர்.இவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் காலத்தில் எவ்வாறு செயற்பட வேண்டும் என சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தல் அடங்கிய நூலொன்று வழங்கப்பட்டுள்ளது.

சில சந்தர்ப்பங்களில் பொலிஸாருக்கு துப்பாக்கிப் பிரயோகம் செய்ய அனுமதியுள்ளது. வாக்களிப்பு நிலையங்களில் தலா இரு பொலிஸார் ஈடுபடுத்தப்படுவதோடு நடமாடும் ரோந்து நடவடிக்கையும் முன்னெடுக்கப்படும்.

குற்றவியல் சட்டக் கோவையின் 92 (4) சரத்திலுள்ள வரையறைகளுக்கு உட்பட்டதாக துப்பாக்கி பிரயோகம் செய்ய பொலிஸாருக்கு இடமளிக்கப்பட்டுள்ளது. தேர்தலின் போதும் துப்பாக்கிப்பிரயோகம் செய்வது தொடர்பில் இந்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சில பிரதேசங்களில் வாக்காளர் அட்டைகள் மற்றும் அடையாள அட்டைகள் சேகரிக்கப்பட்டது தொடர்பில் முறைப்பாடு கிடைத்துள்ளது.ஒரு கட்சி தமக்கு எதிரான கட்சி ஆதரவாளர்களின் தேர்தல் அட்டைகளை பணம் கொடுத்து பெற்று வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு திரட்டுபவர்களிடையே வேட்பாளர்களும் இருந்தால் அவர்களுக்கு 7 வருடங்களுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது.

அவர் தேர்தலில் வெற்றியடைந்தாலும் அவரின் உறுப்பினர் பதவி ரத்தாகும். மற்றவரின் வாக்குச் சீட்டை வேறொருவர் வைத்திருக்க முடியாது. இந்த முறைகேடு தொடர்பில் நடவடிக்கை எடுப்பது தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்படும். பின்னர் வழக்கு பதியப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment