எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகள் நாளை நள்ளிரவுடன் நிறைவு பெறுகின்றது. நாளை நள்ளிரவின் பின்னர் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்வது சட்ட விரோதமானதாகும் என்று மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.எம். மொஹமட் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பங்கேற்கும் இறுதிக் கூட்டம் பொலன்னறுவையில் நாளை இடம்பெறவுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்து கொள்ளும் கூட்டம் கொழும்பு கிரேன்ட்பாஸில் நாளை இடம்பெறவுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற தேர்தல்களுடன் ஒப்பிடும் போது இம்முறை தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் அமைதியான முறையில் இடம்பெறுகின்றன.
கடந்த மாதம் 30ஆம் திகதியளவில் தேர்தல் சட்டங்கள் மீறப்பட்டமை தொடர்பான ஆயிரத்து ஆறு முறைப்பாடுகள் கிடைத்திருந்தன. இதில் பெரும்பாலானவை மக்களுக்கு பொருட்களை விநியோகித்தமை தொடர்பானதாகும். இம்முறை உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கு ஊடகங்ளை முறைகேடான விதத்தில் பயன்படுத்தப்படவில்லை.
தேர்தல் பிரசார நடவடிக்கைகள் தொடர்பான தேர்தல் ஆணைக்குழுவின் வழிகாட்டல்களை ஊடகங்கள் சிறந்தமுறையில் பின்பற்றியுள்ளன என்றும் தெரிவித்தார்.
தேர்தலுடன் தொடர்புடைய 63 வன்முறைச் சம்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 48 சம்பவங்கள் அச்சுறுத்தலுடன் தொடர்புடையவையாகும். பதாதைகள், சுவரொட்டிகள் தொடர்பான 250 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன. உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் எதிர்வரும் சனிக்கிழமை இடம்பெறவுள்ளது. 43 அரசியல் கட்சிகளும், 222 சுயேட்சைக் குழுக்களும் தேர்தலில் போட்டியிடுகின்றன. 57 ஆயிரத்து 252 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகிறார்கள்.
24 மாநகர சபைகள், 41 நகர சபைகள், 276 பிரதேச சபைகள் என்பனவற்றிற்கான எட்டாயிரத்து 356 பிரதிநிதிகள் பங்கேற்கவிருக்கிறார்கள். வாக்களிப்பதற்கு ஒரு கோடி 57 லட்சத்து 60 ஆயிரத்து 667 பேர் போட்டியிடுகிறார்கள். தேர்தல் நடவடிக்கைகளில் ஒரு லட்சத்து 75 ஆயிரம் அதிகாரிகள் ஈடுபடுத்தப்படவிருக்கிறார்கள்.
தேர்தலுக்காக பயன்படுத்தப்படும் பாடசாலைகள் நாளை முதல் மூடப்படுகின்றன. ஏனைய பாடசாலைகளுக்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கப்படவுள்ளது.
நாட்டில் ஏழு வருடங்களின் பின்னரே உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படுகின்றது. இதனால், தேர்தலில் வாக்களிக்க வாக்காளர்கள் கூடுதல் ஆர்வம் காட்டுகிறார்கள். வாக்களிப்பதற்கான வாக்களிப்பு வீதமும் அதிகரிக்கும் என்று தேர்தல் கண்காணிப்பு குழுக்கள் அறிவித்துள்ளன.
10 ஆம் திகதி சனிக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை சகல உள்ளுராட்சி சபைகளுக்குமான வாக்களிப்பு இடம்பெறும். வாக்களிப்பு நிறைவு பெற்றதும் வாக்களிப்பு இடம்பெற்ற இடத்திலேயே வட்டார வாக்குகள் எண்ணப்படும். அந்த வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட பின்னர் இரவு 7 மணியாகும் போது அந்தந்த வட்டாரங்களின் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்.
இதனையடுத்து அந்த முடிவுகள் கச்சேரிகளுக்கு அனுப்பப்படும் மாவட்டத் தேர்தல் அலுவலகத்தின் மூலம் அந்தந்த பிரதேச சபைகளின் முடிவுகள் உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்தார்.
No comments:
Post a Comment