இழந்த காணிகளை மீளப்பெறுவதற்கான பிரதமரின் அறிவிப்பு மகிழ்ச்சியளிக்கிறது: அமைச்சர் ரவூப் ஹக்கீம் - News View

About Us

About Us

Breaking

Thursday, February 1, 2018

இழந்த காணிகளை மீளப்பெறுவதற்கான பிரதமரின் அறிவிப்பு மகிழ்ச்சியளிக்கிறது: அமைச்சர் ரவூப் ஹக்கீம்

மக்களின் நீண்டகால தேவையாகவுள்ள ஹெட ஓயா திட்டத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் பெற்றுத் தந்தமைக்கும், அப்பாவி மக்களின் இழந்த காணிகளை மீட்டுத்தருவதற்காக நடவடிக்கை எடுப்பதாகவும் கூறிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நன்றி தெரிவிப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

பொத்துவில் பிரதேச சபையில் யானைச் சின்னத்தில் போட்டியிடும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பளார்களை ஆதரித்து நேற்று (31) பொத்துவிலில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் ரவூப் ஹக்கீம் இவ்வாறு தெரிவித்தார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதம அதிதியாக கலந்துகொண்ட இக்கூட்டத்தில் தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது;

கிழக்கு மாகாணத்தில் நீண்டகாலம் பாரம்பரியமாக விவசாயம் செய்துவந்த வயல் காணிகள் அநியாயமான முறையில் வர்த்தமானி அறிவித்தல் மூலம் சுவீகரிக்கப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு பாரம்பரிய உறுதிப்பத்திரங்களுடன் விவசாயம் செய்துவந்த வயல் நிலங்களை இழந்த காரணத்தினால் வாழ்வாதார பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர். இதற்குரிய உரியமுறையில் செயற்பட்டு, இழந்த காணிகளை மீளப்பெற்றுக் கொடுப்பதற்கு தயாராகவுள்ளதாக பிரதமரின் அறிவிப்பு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
பொருளாதார விவகார மந்திரி சபையில் துணைக்குழு பதவியை வகித்துக்கொண்டு, எமது வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு, இங்குள்ள மக்களின் நீண்டகால தேவையாக இருக்கின்ற ஹெட ஓயா திட்டத்துக்கு அமைச்சரவையின் அனுமதியை பெற்றுக் கொடுத்தமைக்காக பிரதமருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வருடத்தில் ஹெட ஓயா திட்டத்தை ஆரம்பிப்பதற்கான அனுமதி கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கிறேன்.

அம்பாறை மாவட்டத்தில் தெற்கு முனையில் தனிப்பட்ட ஒரு பிரதேசமாக பொத்துவில் காணப்படுகின்றது. பொத்துவில் பிரதேசத்துக்கு தனியாக கல்வி வலயம் ஒன்று தேவைப்படுகின்றது. இது தொடர்பாக நாங்கள் மாகாணசபை அமைச்சரவையின் அனுமதியையும் பெற்றுக் கொண்டுள்ளோம். இருந்தபோதிலும், இதனை முழுமையாக செய்துமுடிப்பதற்கு, கல்வி அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தி, ஆளுநருடன் இணக்கம் கண்டு பொத்துவிலுக்கு தனியான கல்வி வலயம் ஒன்றை அமைத்து தருமாறு கேட்கொள்கிறேன்.
பொத்துவில் பிரதேச சபையை முஸ்லிம் காங்கிரஸின் உதவியுடன் ஐக்கிய தேசிய கட்சி கைப்பற்றும். இது தவிர, ஏனைய 6 பிரதேச சபைகளிலும் அரசாங்க அதிகாரத்தையும் நாம் பெற்றுக் கொள்வது உறுதி. பிரதமர் வருகை தருவதற்கு முன்னர் என்னால் கூட்டத்துக்கு வரமுடியாமல் போனது. நான் பயணித்த உலங்கு வானூர்தி சீரற்ற காலநிலை காரணமாக தாமதமாகியது. இதற்காக பிரதமரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

பல்லாயிரக்கணக்கான கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பிரதி அமைச்சர்களான எச்.எம்.எம். ஹரீஸ், பைசால் காசிம், பாராளுமன்‌ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர், புதிய பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்கவுள்ள ஏ.எல்.எம். நசீர், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான ஆரிப் சம்சுதீன், பொத்துவில் முன்னாள் தவிசாளர் அப்துல் வாசித் மற்றும் கட்சி முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment