உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் விநியோகிப்பதற்காக வழங்கப்பட்ட 350 வாக்காளர் அட்டைகள் காணாமல் போனமை தொடர்பில் தபால் உழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இரத்தினபுரி, பல்லேபெத்த தபால் அலுவலம் மூலம் பகிர்ந்தளிப்பதற்காக வழங்கப்பட்ட வாக்காளர் அட்டைகளை விநியோகிக்காமல் மறைத்த குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே குறித்த சந்தேகநபரை கொடகவெல பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைதான குறித்த தபால் ஊழியர் கடந்த 01 ஆம் திகதி எம்பிலிபிட்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். நீதிபதி திருமதி ஹிரோஷி காஹின்கல சந்தேகநபரை நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு பணிப்புரை வழங்கினார். இந்த தபால் ஊழியர் கடந்த 29 ஆம், 30 ஆம் திகதிகளில் பல்லேபெத்த, அம்பேவில பிரதேசத்தில் வாக்காளர் அட்டைகளை விநியோகித்துள்ளார்.
இந்நிலையில் குறித்த பகுதிக்கான 350 வாக்காளர்கள் அட்டைகள் உரியவர்களுக்கு சென்று சேராத நிலையில், இது விடயமாக தபால் அலுவலக அதிகாரிகள் அப்பகுதிக்கு சென்று விசாரணன மேற்கொண்டுள்ளனர். குறித்த தபால் ஊழியரையும் வைத்து அதிகாரிகள் பட்டியலை பரிசோதனை செய்து விசாரணை செய்து கொண்டிருக்கும் சமயத்தில், குறித்த தபால் ஊழியரான சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து பல்லேபெத்த தபால் அலுவலக பொறுப்பதிகாரி, கொடகவெல பொலிஸாருக்கு முறைப்பாடு செய்துள்ளார். உடனடியாக செயற்பட்ட பொலிஸார், தபால் ஊழியரை கொடகவெல பலவின்ன பகுதியில் வைத்து கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்தனர்.
No comments:
Post a Comment