'கட்சித்தலைமை மீது கொண்ட அதிருப்தியில்தான் நாங்கள் கட்சியை விட்டு வெளியேறினோம்' என்கிற குற்றச்சாட்டினை மையப்படுத்தியே முன்னாள் தவிசாளரும், முன்னாள் செயலாளர் நாயகமும் இம்முறை மயில் சின்னத்தில் களம் காண்கின்றனர். இதில் கட்சித்தலைமை தன்னை தேசியப்பட்டியல் விடயத்தில் நம்ப வைத்து ஏமாற்றிய சம்பவத்தை அவர் பிரிந்துவந்த ஆரம்ப காலங்களில் அதிகம் அதிகம் பிரஸ்தாபித்தது நம்மை கண்கலங்க வைத்தது என்பது உண்மைதான்..
இதேவேளை இதே செயலாளர் நாயகத்துக்கு கட்சி இருமுறை தேசியப்பட்டியலும், நல்லாட்சி அரசின் நூறு நாள் அமைச்சரவையில் இராஜாங்க அமைச்சும் வழங்கியதை இவ்விடத்தில் சுட்டிக்காட்ட வேண்டும். எது எவ்வாறாயினும் நிந்தவூரில் முஸ்லிம் காங்கிரசுக்கு எதிரான அலையொன்று புதிதாக அடிக்கத் தொடங்கியதற்கு தலைமை மீதான அதிருப்தியே முதன்மைக்காரணி எனக்கொள்ளலாம்.
ஒரு கட்சித்தலைமை தொடர்பில் இதுவரை காலமும் ஆழமாகக் கரிசனை எடுக்காத மக்கள் இம்முறை சிந்திக்கத் தொடங்கியிருக்கிறார்கள் என்பது பெருமாற்றமும், கட்சிக்கு ஏமாற்றமும் தான். கட்சித்தலைமையின் தான்தோன்றித்தனமான, தன்னிச்சையான போக்குகள் தொடர்பில் நிந்தவூர் தவிர ஏனைய முஸ்லிம் காங்கிரசின் ஆதிக்கத்திலிருக்கும் ஊர்களிலும் அரசல், புரசலாகவும், தும்புத்தடி, கம்புத்தடியாகவும், எதிர்ப்புகள் மேலெழுவதை இம்முறை அவதானிக்க முடிகிறது.
அதேவேளை தலைமையின் நடவடிக்கைகள் மீதுள்ள நியாயத்தன்மைகளை எடுத்துரைக்கும் மக்களும் இல்லாமலில்லை. எது எவ்வாறாயினும் 'மக்கள் சபை தேர்தலில் கட்சியை தோற்கடிப்பது, கட்சியை தலைமையிடமிருந்து மீட்கவே தவிர கட்சியை அழிக்க அல்ல' என்கிற கோசத்தை கிட்டத்தட்ட கட்சியிலிருந்து பிரிந்த எல்லா உறுப்பினர்களும் மேடைகளிலும், வலைத்தளங்களிலும் பதிவு செய்து வருகிறார்கள்.
மறுபுறம் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியானது ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து யானைச்சின்னத்தில் பிரதி அமைச்சரின் பக்க பலத்துடன் வழமையான வேட்பாளர்கள் சிலரையும் உள்ளடக்கி, பல புதியவர்களையும் இணைத்து நிந்தவூர் மக்கள் சபையை கைப்பற்ற களமிறங்கியுள்ளது. என்றாலும் இந்த நிமிடம் வரை அந்தக்கட்சி தனது முதன்மை வேட்பாளர் யார் என்கிற "பேர்முடா முக்கோண" மர்மத்தை வெளிப்படுத்தவேயில்லை.
இது கட்சிக்குள் பலரையும் தவிசாளர் கனவுக்குள் தள்ளிவிட்டிருப்பதை கண்கூடாகக் காணலாம். மயில் மேடைகளில் பிரதி அமைச்சரின் மருமகனையே தவிசாளர் ஆக்கப்போகிறார்கள் என்ற கருத்து முன்வைக்கப்பட்டாலும், கட்சிக்குள்ளேயே தவிசாளர் சண்டை பனிப்போராகியிருப்பதாக நமது பட்சி சொல்கிது.
அதுபோலவே முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்கள் தெரிவில் பலர் அதிருப்தி அடைந்திருப்பதாகவும் ஒரு கதை காற்றோடு சுற்றித்திரிகிறது. ஆனால், மேடையில் ஒரு வேட்பாளர் மயில் கட்சியில் படித்த வேட்பாளர்களே இல்லை என்றொரு குற்றச்சாட்டை முன்வைத்ததையும் அவதானித்தோம். (வேட்பாளர் தெரிவில் அதிருப்தியுற்றும் சிலர் மயில் பக்கம் சாய்ந்திருப்பதாக அறிய முடிகிறது).
பதிலுக்கு மயில் கட்சியினர் படித்த வேட்பாளர்கள் மற்றும் மேட்டுக்குடி வேட்பாளர்கள் மக்கள் சபைக்கு பொருந்துவதில்லை என்றும் மக்களோடு மக்களாகப் பயணிக்க மக்களின் கஷ்ட, நஷ்டங்களை உணர்ந்திருப்பதே வேட்பாளர்களுக்கு இருக்க வேண்டிய தகுதிகளில் முக்கியமானது என்றும் பதிலடி வழங்கியிருந்தனர்.
இடையில் சூடுபிடித்துக்கிடக்கும் மேடைப்பேச்சுகளில் முன்னாள் தவிசாளரின் காலத்தில் பிரதேச சபையில் பல ஊழல் சம்பவங்கள் இடம்பெற்றதாக யானையும், அபிவிருத்தி என்ற பெயரில் பிரதியமைச்சர் மக்களை ஏமாற்றுகிறார் என்று மயிலும் மிகக்காட்டமான வாதப்பிரதிவாதங்களை மக்கள் முன் உரத்துச்சொல்லிக்கொண்டிருக்கின்றனர். இதுபற்றிய விடயங்கள் இன்ஷா அல்லாஹ் மூன்றாவது பகுதியில்.......
நடுநிலையான அலசல் தொடரும்...
ஷிப்லி அஹமட்
விரிவுரையாளர்
தென்கிழக்குப்பல்கலைக்கழகம்
ஒலுவில்
No comments:
Post a Comment