அரசின் அராஜகத்துக்கு எதிரான எமது போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் - ஜோசெப் ஸ்டாலின் - News View

Breaking

Post Top Ad

Saturday, July 17, 2021

அரசின் அராஜகத்துக்கு எதிரான எமது போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் - ஜோசெப் ஸ்டாலின்

கே .குமணன்

கொத்தலாவல சட்ட மூலதின் ஊடாக இலவச கல்வியை இராணுவ மயப்படுத்த முயலும் அரசின் அராஜகத்துக்கு எதிரான எமது போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என கட்டாய தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

எந்தவித நியாயமற்ற முறையிலேயே நாம் தடுத்து வைக்கப்பட்டிருந்தோம். எமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராகவும், எமது விடுதலையை வலியுறுத்தியும் நாடு முழுவதும் ஜனநாயகப் போராட்டங்களை முன்னெடுத்த அனைத்துத் தரப்பினருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்" என்றும் அவர் குறிப்பிட்டார்.

"எமது பக்க நியாயங்களை மக்களுக்குத் தெரியப்படுத்திய சகல ஊடகங்களுக்கும் நன்றியைக் கூறுகின்றோம்" என்றும் அவர் மேலும் கூறினார்.

முல்லைத்தீவு - கேப்பாப்புலவு விமானப் படை முகாமில் உள்ள கொரோனா தனிமைப்படுத்தல் நிலையத்தில் கட்டாயமாகத் தனிமைப்படுத்தப்பட்டிருந்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட 16 பேரும் தனிமைப்படுத்தலில் இருந்து நேற்று வெள்ளிக்கிழமை இரவு விடுவிக்கப்பட்டனர்.

அரசாங்கத்தால் கொண்டுவரப்படும் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட மூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கடந்த 8 ஆம் திகதி கொழும்பில் போராட்டத்தில் ஈடுபட்ட ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது பிணையில் விடுவிக்கப்பட்டனர். ஆனால், நீதிமன்றத்தின் அனுமதியின்றி அவர்களை வலுக்கட்டாயமாகத் தனிமைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.

நீதிமன்ற வளாகத்தில் இருந்து பொலிஸ் பஸ்ஸில் முல்லைத்தீவுக்கு அழைத்து வரப்பட்டு, கேப்பாப்புலவு விமானப் படை முகாமில் உள்ள தனிமைப்படுத்தல் மையத்தில் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இதற்குப் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்களை முன்னெடுத்தனர்.

இதையடுத்து, 8 நாட்களின் பின்னர், நேற்று இரவு 8.30 மணியளவில் அவர்கள் தனிமைப்படுத்தல் மையத்தில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad